இளம் மாணவர்கள் வேளாண்மைப் படிப்பில் சேருவதைக் குறிகோளாக வைத்துக் கொள்ள வேண்டும்

வேளாண்மைக் கல்லூரி தலைமையர்(டீன்) பேச்சு 

 நடுநிலைப் பள்ளி மாணவர்கள் வேளாண்மைக் கல்லூரியில் ஒரு நாள் ( 18/03/2016) 

  தேவகோட்டை – தேவகோட்டை பெருந்தலைவர்   மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் களப் பயணமாகச் சேது பாசுகரா வேளாண்மைக் கல்லூரிக்குச் சென்றனர்.

        1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் வேளாண்மைக் கல்லூரிக்குக் களப் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனர். கல்லூரி வணிகப் பிரிவு மேலாளர் தமிழரசன் அனைவரையும் வரவேற்றார். கல்லூரிக் கல்வித் தலைவர் ஐராணி சேது தலைமை தாங்கினார்.

   கல்லூரித்தலைமையர் முனைவர்  பேபி இராணி, பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ .சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  கல்லூரித்தலைமையர் பேசும்போது, “இளம் மாணவர்களாகிய நீங்கள் இப்போதே வேளாண்மைக் கல்லூரியில் சேருவதைக் குறிக்கோளாக கொள்ள வேண்டும். வேளாண்மை செய்ய அனைவரும் முன்வரவேண்டும். பயிர் நிலங்கள் அழிந்து கொண்டே வருகின்றன. வேளாண்மை செய்தால் நாடு தானாக முன்னேறும். எல்லா தொழிலுக்கும் முன்னோடி வேளாண்மைதான். மாற்று வேளாண்மை செய்து கூடுதல் பயிர்களை வேளாண்மை செய்து விளைச்சல் அதிகரிக்க வேண்டும். இயற்கை உரம் அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். மல்லிகைச் செடியில் நோயின் தாக்குதல் தெரிந்தால் மட்டுமே மருந்து தெளிக்க வேண்டும். வேளாண்மைக் கல்லூரியில் சேர்ந்து படிப்பதன் மூலம் நாட்டையும், உங்களையும் நன்றாக வளர்க்க இயலும்.” என்று  குறிப்பிட்டார்.

   வேளாண்மைக் கல்லூரியில் பார்வையிட்ட இடங்களைப் பற்றி மாணவிகள் சௌமியா ,பரமேசுவரி, கீர்த்தியா, செயசிரீ, திவ்யசிரீ இராசேசுவரி, மாணவர்கள் வெங்கட்ராமன், சீவா, வசந்த குமார் ஆகியோருடன் பெற்றோர்களும், ஆசிரியர்களும் பேசினார்கள்.

  கண்ணதாசன், சுமித்ரா, பூவதி, இயோகேசுவரன் முதலான பல மாணவர்கள் வேளாண்மை தொடர்பாக கேள்விகள் கேட்டு விளக்கம் பெற்றனர்.

 கல்லூரிப் பண்ணை மேலாளர் சதீசு குமார், பேராசியர் மகேந்திரன் ஆகியோர் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர்.

பள்ளியின் சார்பாக ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களும் ஏரளமானோர் கலந்து கொண்டனர்.

   1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவ,மாணவியரும் சுற்றுலா செல்வது போலத் தனியார்  குளிர் வசதி கொண்ட  இரண்டு பேருந்தில் பள்ளியில் இருந்து கல்லூரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். கல்லூரியில் நான்கு குழுக்களாக மாணவ மாணவியரைப் பிரித்தனர்;  கல்லூரிப் பேராசிரியர்களும், கல்லூரி மாணவர்களும் வழிகாட்டி அவர்கள் பண்ணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்; ஒவ்வொரு பிரிவினரும் ஒவ்வொரு பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

 பேராசிரியர்கள் உதவியுடன் மாணவ, மாணவியர்க்கு வெண்டைக்காய் பறிக்கக் கற்று கொடுக்கப்பட்டது. மாணவர்களை  வைத்து எடை போடச் செய்து வேளாண்மை தொடர்பாக நேரடியாகச் செயல் முறை விளக்கம் கொடுக்கப்பட்டது.

    சேதுபாசுகரா வேளாண்மைக்கல்லூரி 240 ஏக்கர் நிலபரப்பில் அமைந்துள்ளது. இங்கு இயற்கை வேளாண்மை கடைபிடிக்கபடுவது மாணவர்களுக்கு விரிவாக எடுத்துச் சொல்லப்பட்டது. இயற்கை வேளாண்மை முறையில் காய்கறிகள்,  கீரைகள் பயிரிடப்படுவதும் விளக்கமாகச் சொல்லப்பட்டது.

  எண்ணெய் வித்துப் பயிர்களான எள், நிலக்கடலை, சூரிய காந்தி, தென்னை,  மல்லிகை முதலான பூக்கள், மா, பலா, வாழை முதலான  பழ மரங்கள், மாதுளை, சந்தனம், தேக்கு, செம்மரம், வாகை, புங்கம், வேம்பு, இலுப்பை, புளி, வெப்பாலை போன்ற பலன் தரும் மரக்கன்றுகள் முதலாயின  பயிரிடப்பட்டுள்ள முறை மாணவர்களுக்கு நேரடியாக விளக்கப்பட்டது.  1 முதல் 8 வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவ,மாணவியரிடமும் அவர்களாகவே நடவு செய்யச் சொன்னார்கள். மாணவ மாணவியரும் மகிழ்ச்சியாகச் செடிகளை நட்டனர்.    பன்றி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, மாடு வளர்ப்பு, பால் தரும் பசுக்கள், கோழி இனங்களில் கினிக் கோழி/கிண்ணிக்கோழி, வான் கோழி, நாட்டு கோழி, புறா, முயல், வாத்து போன்றவை ஒருங்கிணைந்த பண்ணை முறையில் வளர்க்கப்படுவது விரிவாக நேரடியாக விளக்கப்பட்டது.

      கல்லூரித்தலைமையரிடம் மாணவர்கள்  வேளாண்மை தொடர்பான கேள்விகளை கேட்டு  விளக்கம் பெற்றனர். மாணவர்களின் கேள்விகளும், தலைமையரின் விளக்கங்களும் ;

 சௌமியா : வெள்ளை பன்றி வளர்ப்பதால் என்ன பயன் ?

 தலைமை. :  வேளாண்மை தொடர்பான பணிகளுக்கும், உணவுக்காகவும் பன்றிகள் வளர்க்கபடுகின்றன. பன்றிகள் அதிகக் குட்டிகளை ஈனும். நிறைய மக்கள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.அதற்குத்தான் வெள்ளைப் பன்றிகள் வளர்க்கப்படுகின்றன.

 பரமேசுவரி: வேளாண்மையில் என்ன, என்ன படிப்புகள் உள்ளன?

 தலைமை. : இளங்கலைப் பட்டம்,முதுகலைப் பட்டம்,  பட்டயப்படிப்பு, ஆராய்ச்சிப் படிப்பு என வேளாண்மையில் பல்வேறு படிப்புகள் உள்ளன. வேளாண்மைதான் ஒரு நாட்டின் முதுகெலும்பு ஆகும். இதுதான் எல்லாத் தொழிலுக்கும் முன்னோடி. அனைத்து நாடுகளுக்கும் வேளாண்மை தேவை. பயிர் நிலங்கள் அழிந்து கொண்டே வருகின்றன. இடைக்காலத்தில் 20 வருடங்களாகச் சரியான மழை  இல்லை. நிலம் சரியாக உழப்படவில்லை. அடுத்து தொழில். நிலம் தரிசாகி விடும். உழவின் வாயிலாக கோடிக்கணக்கான வருவாய் கிடைக்கும். எனவே நீங்கள் அனைவரும் வருங்காலத்தில்  வேளாண்மை செய்ய முன்வரவேண்டும். அதனைக் குறிகோளாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

 கண்ணதாசன் : மாற்று வேளாண்மை என்றால் என்ன ?

 தலைமை.: சில இடங்களில் கால்வாய்ப் பாசனம் இருக்கும். நிலத்தில் பயிரை மாற்றி, மாற்றிப் பயிரிட்டால் விளைச்சல் கூடும். தண்ணீரைக் குறைவாகச் செலவு செய்தால் போதுமானது.

 சுமித்ரா: மல்லிகைச் செடிக்கு எத்தனை நாளைக்கு ஒரு முறை மருந்து தெளிக்கப்படுகிறது ?

 தலைமை.: மருந்து தெளிப்பது என்பது பூச்சியின் தாக்குதல், நோயின் தாக்குதல் இருந்தால் மட்டுமே தேவை. எத்தனை நாளுக்கு  ஒரு முறை மருந்து தெளிப்பது என்பது நோயின் தாக்கத்தைப் பொருத்து மட்டுமே அமையும்.

பூவதி : இயற்கை உரம் ,செயற்கை உரம் என்றால் என்ன?

 தலைமை. : இயற்கை உரம் என்பது மக்கிய தொழு உரம் ஆகும். எரு  தயாரிப்பது உரம் ஆகும். எப்போதுமே இயற்கை உரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மண் இறுக்கமாக இருந்தால் மட்டுமே, சத்து.  பற்றாக் குறை இருக்கும் நேரம் செயற்கை உரம் போட்டால் மண் இளக்கம் கொடுத்து நன்றாகப் பயிர் வளரும்.

 இவ்வாறு மாணவ ,மாணவியர் கேள்விகள் கேட்டு  விளக்கங்கள் பெற்றனர்.

  தொடக்கப்பள்ளி மாணவ,மாணவியர் இது போன்று கல்லூரிக்கு வருவது இதுவே முதல் முறை;  இது தங்களின் வாழ்க்கையில் முடியாத  மகிழ்ச்சி என்று மாணவ மாணவியர் கூறினார்கள்.

இலெ .சொக்கலிங்கம்

jeyamchok@gmail.com 
http://www.kalviyeselvam.blogspot.in/