mu.rasaram i.a.s.01t_k_ramachandran i.a.s.01

மதுரை  உலகத் தமிழ்ச் சங்கமும், மைசூர் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனமும் இணைந்து தமிழ் இணையத் தேசியக் கருத்தரங்கத்தை சென்னை, எத்திராசு மகளிர் கல்லூரியில் 06.01.14 அன்று நடத்தின.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் முனைவர் மூ.இராசாராம், விழா மலரை வெளியிட்டு தலைமை உரையாற்றினார்.

இவ்விழாவில் நூலைப் பெற்றுக் கொண்டு பேசிய தகவல் தொழில் நுட்பத்துறை அரசுச் செயலாளர்  தா.கி.இராமச்சந்திரன் தனது சிறப்புரையில், தமிழில் உள்ள அறநெறிகளை ஆழ்ந்தும் படிக்கவும் தமிழர் பண்பாட்டு நெறிமுறைகளை உலகிற்கு எடுத்து விளம்பச்செய்யவும் இன்றைய தலைமுறையினர் முயல வேண்டுமென்றும் தமிழில் பேசுவதையும் எழுதுவதையும் பெருமையாகக் கொண்டு சிறப்புப் பெற வேண்டுமென்றும் மாணவர்களைக் கேட்டுக் கொண்டார்.

  செயலாளர் முனைவர் மூ.இராசாராம், தம் உரையில் மனித முயற்சிகளை மேம்படுத்த உருவாக்கப்பட்ட கணினி,  அறிவியல் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் ஆற்றல்மிகு கருவியாக உள்ளது என்றும் இன்றைய மனித வாழ்வின் அரும்பொருளாய் மாறிவிட்ட இணையத்தளம் உலகத்தை நம் உள்ளங்கைக்குள் சுருக்கிவிட்டது என்றும் தேடல்கள் இல்லாமல் மனித வாழ்வு இல்லை, தேடல் உள்ளவனே மனிதன், அப்படி நாம் தேடுகின்ற பொருள் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் அது தொடர்பான அத்தனை விவரங்களையும் ஒரு சொடுக்கில் நம் கண்முன்னே விவரித்து காட்டும் விந்தையை இணையத்தளம் செய்கின்றது என்றும்  பேசினார்.

மேலும் அவர் தனது உரையில் உலக மக்கள் தொகையில் இணையதளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் 78.6 விழுக்காட்டினர் வட அமெரிக்கா முதலிடத்திலும், ஓசியானியர், ஆஸ்திரேலியர் 67.6 விழுக்காட்டினரும் ஐரோப்பியர் 63.2 விழுக்காட்டினராகவும் இலத்தீன் அமெரிக்கா, கரீபியன் பகுதியினர் 42.9 விழுக்காட்டினராகவும் நடுகிழக்கு நிலப் பகுதியினர் 40.2 விழுக்காட்டினராகவும் ஆசியப் பகுதியினர் 27.5 விழுக்காட்டினராகவும் ஆப்பிரிக்கப் பகுதியினர் 15.6 விழுக்காட்டினராகவும் இணையத்தளத்தைப் பயன்படுத்துகின்றனர்.  இவ்வகையில் உலகத்தில் சராசரியாக 34.3 விழுக்காட்டினர் இணையத்தளத்தைப் பயன்படுத்துகின்றனர் என்றும் குறிப்பிட்டு ஆனால் நம் இந்தியாவில் 2010 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 119 கோடியில் 12 கோடியே 10 இலட்சம் பேர் இணையத்தளத்தைப் பயன்படுத்துகின்றனர் என்றும் இது இந்திய மக்கள் தொகையில் 10.2  விழுக்காடு மட்டுமே என்றும் குறிப்பிட்டார்.  மேலும் 2011ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7.21 கோடியாக உள்ள நிலையில் இவர்களில் இணையத்தளம் பயன்படுத்துவோர் 16.5 விழுக்காடாக உள்ளனர் என்றும்  இந்தியாவில் பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் இணையதளம் பயன்படுத்துவோர் அதிக எண்ணிக்கையில் உள்ளனர் என்றும்  குறிப்பிட்டார்.

மேலும் 1996ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி உலகம் முழுவதிலும் 8.50 கோடி மக்களால் தமிழ் மொழி பேசப்படுகிறது என்றும் ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில், வரிசைப்படுத்தப்பட்ட மொழிகளின் பட்டியலில், தமிழ் மொழி பதினெட்டாவது இடத்தில் உள்ளபோதும் இணையத்தளப் பயன்பாட்டில் பிற மொழிகளுடன் ஒப்பிடும் பொழுது தமிழ் மொழியின் பயன்பாட்டில் இன்னும் முன்னேற்றம் தேவையாக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

விக்கிபீடியாவில் இந்திக்கு 40வது இடமும் தெலுங்குக்கு 60வது இடமும் தமிழ் மொழி  61வது இடத்திலும் உள்ளது என்றும்  7 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பேசும் உலகின் பதினெட்டாவது பெரிய மொழியாகத் தமிழ் மொழி இருந்தும், விக்கிப்பீடியா உலகில் 61வது நிலையிலேயே உள்ளது என்றும் இதற்கான பங்களிப்பவர்களின் எண்ணிக்கை போதாமையே காரணம் என்றும் சுட்டிக்காட்டினார்.  மேலும் உலக மொழிகள் வரிசையில் தமிழ் விக்கி அகரமுதலி பத்தாவது இடத்தில் உள்ளது என்றும்  முதல் மூன்று  இடங்களிலோ அல்லது  ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளைப் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்திலோ நிற்க நம் தமிழால் முடியும் என்றும் இது பணிப்பயன்பாட்டுடன் ஒருங்கிணைந்த கூட்டுழைப்பு இருக்குமானால் நம்மால் உறுதியாக அருவினை ஆற்ற முடியும்என்று குறிப்பிட்டார்.