(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 12 : தியாக வீரம்- தாெடர்ச்சி)

தமிழர் வீரம்
வீர விளையாட்டு

வீர விளையாட்டில் என்றும் விருப்பமுடையவர் தமிழர். வேட்டையாடல், மல்லாடல், ஏறுதழுவுதல் முதலிய விளையாட்டங்கள் மிகப் பழமை வாய்ந்தனவாகும். வேட்டையைத் தொழிலாகக் கொண்டவர் வேடர் என்றும், வேட்டுவர் என்றும் பெயர் பெற்றனர். மற்றும் வில்லாளராகிய பெருநில மன்னரும், குறுநில மன்னரும் பொழுதுபோக்காக வேட்டையாடினர். காவிரிக் கரையிலும், பாலாற்றங் கரையிலும் பரந்து நின்ற காடுகளில் வேட்டையாடப் புறப்பட்ட சோழமன்னன் கோலத்தைக் கலிங்கத்துப் பரணியிலே காணலாம். மல்லாட்டத்தில் வல்லவர் மல்லர் எனப்படுவர். அன்னார் முற்காலத்து மன்னரால் மதிக்கப்பெற்றனர். முல்லைநில மாந்தராகிய ஆயர், ஏறு தழுவும் விளையாட்டிற் சிறந்து விளங்கினர். இன்றும் தமிழ் நாட்டிற் சில பாகங்களில் சல்லிக்கட்டு என்னும் பெயரால் இவ் விளையாட்டு நடைபெறுகின்றது.

வேட்டையாடல்
தமிழ் நாட்டு மலைகளிலும் காடுகளிலும் பல வகையான விலங்குகள் உண்டு. அவற்றுள் உருவிலும் திருவிலும் உயர்ந்தது யானை. வீரம் உடையது வேங்கை. கடுமை வாய்ந்தது கரடி. கொழுமை சான்றது பன்றி. இவை பகற் பொழுதில் மரமடர்ந்த தூறுகளிலும் மலைக்குகைகளிலும் மறைந்து வாழும்.

வேட்டை நெறி
வேட்டையாடச் செல்பவர் வாய்ப்பான இடங்களில் திண்ணிய கயிறு வலைகளைக் கட்டுவர்; மோப்பம் பிடிக்கும் வேட்டை நாய்களைக் கட்டவிழ்த்து விடுவர்; பறையறைந்து காட்டைக் கலைப்பர். அப்போது விலங்குகள் விழுந்தடித்து ஓடும். அவ்விதம் கலைந்தோடும் உயிர்களைக் கண்டபடி கொல்வதில்லை பண்டை வேடர். வேட்டை வெறியிலும் ஒரு நெறியுண்டு.[1] அவர் குட்டி விலங்குகளைக் கொல்ல மாட்டார்கள்; கருவுற்று வயிறலைத்து ஓடும் பெட்டை விலங்குகளை வதைக்க மாட்டார்கள்; இவற்றை விடுத்து வலிய விலங்குகளை வில்லால் எய்தும், வாளால் எறிந்தும் வீழ்த்துவர்.

காளத்தி வேடன்
தொண்டை நாட்டுக் காளத்தி மலைச்சாரலில் வேட்டையாடப் போந்தான் ஒரு வேடன். அவன் திண்ணிய மேனி வாய்ந்தவன்; திண்ணன் என்னும் பெயருடையவன்; இளமையிலேயே முறையாக விற்கலை பயின்றவன். வேடர் குலக் கொழுந்தாய் விளங்கிய திண்ணன், முதல் வேட்டைக்கு எழுந்தான். காட்டைக் கலைக்க முன்னே போந்த வேட்டுவர் பறையடித்தனர்; பம்பை முழங்கினர்; கை கொட்டினர்; வலை விரித்தனர்; விலங்கினம் வெருவி எழுந்தது; நாற்றிசையும் ஓடிற்று. களிறும் கலையும், வேங்கையும் கரடியும் வேடர் அம்பால் அடிபட்டு விழுந்தன. அப்பொழுது கொழுத்த பன்றியொன்று கதித்தெழுந்தது; கட்டிய வலையைக் கிழித்தது; காட்டிலும் மேட்டிலும் கடிது சென்றது.


கண்ணப்பன்
அப் பன்றியைத் தொடர்ந்து ஓடினான் திண்ணன். அவன் தோழர்களான காடனும் நாணனும் பின் தொடர்ந்தார்கள். வெகுண்டு எழுந்த வேட்டை நாய்களைத் திமிறி வேகமாகச் சென்றது அப்பன்றி. அது சென்ற இடமெல்லாம் தொடர்ந்து சென்றான் திண்ணன். நெடுந்தூரம் போந்து இளைத்துக் களைத்து ஒரு சோலையிலே நின்றது அவ் விலங்கு. திண்ணன் அதை வில்லால் எய்து கொல்ல விரும்பினானில்லை. அஞ்சாது அதன் அருகே போந்தான்; உடைவாளால் வெட்டினான். பன்றியின் உடல் இரு துண்டாகித் தரையில் விழுந்தது. திண்ணனுக்குப் பின்னே எய்த்து இளைத்து ஓடிவந்த காடனும் நாணனும் அக் காட்சியைக் கண்டு வியந்து, “ஆடவன் கொன்றான் அச்சோ” என்று அகமகிழ்ந்து ஆரவாரித்தனர். இவ்வாறு கன்னி வேட்டையாடிய திண்ணனே காளத்தியப்பனைக் கண்டு, உளங்கசிந்துருகி, அன்பு செய்து கண்ணப்பன் ஆயினான். வேடர் பெருமானாகிய திண்ணன் செம்மையைத் தேவாரம் புகழ்ந்து பாடிற்று.

மல்லாடல்


உறந்தை மல்லன்
காவிரிக் கரையிலுள்ள உறையூர் ஒரு காலத்தில் சோழ நாட்டின் தலைநகரமாகச் சிறந்திருந்தது. உறந்தை என்று அவ்வூரைப் புகழ்ந்து பாடினர் கவிஞர். உறந்தையில் அரசாண்ட சோழர் குலத்தின் பெருமைக்கு அடிப்படை கோலியவன் தித்தன் என்ற வேளிர் தலைவன். அவன் சிற்றரசன் ஒருவனை வென்று உறந்தையைக் கைப் பற்றினான்; கோட்டை கொத்தளங்களை வலுப்படுத்தினான்.2 அவன் வழியில் வந்தவர் உறையூர்ச் சோழன் என்று பெயர் பெற்றனர். தித்தன் மகன் நற்கிள்ளி என்னும் பெயரினன். அவன் அழகமைந்த மேனியன்; மல்லாடலில் வல்லவன். அவன் வீரத் தோள்களைக் கண்டு வியந்து மகிழ்ந்தாள் நக்கண்ணை என்ற நங்கை; அவன் ஆண்மையைப் புகழ்ந்து அழகிய கவியும் பாடினாள்.

ஆமூர் மல்லன்
தித்தனுக்கும் அவன் மகனுக்கும் இடையே மனக் கசப்பு உண்டாயிற்று. தலைநகரை விட்டு மைந்தனை வெளியேற்றினான் தந்தை. அரசாளப் பிறந்த நற்கிள்ளி ஆண்டிபோல ஊர் ஊராக அலைந்தான். ஆயினும் அவன் மனத்திண்மை உலைந்ததில்லை; ஆண்மை குன்றியதில்லை. அப்போது ஆமூர் என்ற ஊரில் ஒரு மல்லன் இருந்தான். அவன் வலிமை சான்றவன். பலருடன் மல்லாடி வென்று செருக்கும் தருக்கும் உள்ளவன்; அவன் நாடிழந்த நற்கிள்ளியை வென்று பீடு பெறக் கருதினான்; மல்லாட அறைகூவி அழைத்தான்.

மல்லாடிய மாட்சி
மல்லர் இருவரும் குறியிடம் புகுந்தனர். பல்லாயிரவர் ஆண்களும் பெண்களும் அக்களத்தைச் சூழ்ந்து நின்றார். மற்போர் தொடங்கிற்று. கண்ணிமையாமல் அக்காட்சியைக் கண்டு நின்றவர் அவர் பிடியும் அடியும் கண்டு பெருவியப் புற்றார். அப்போது இடியுண்ட மரம்போல் தரையிடை விழுந்தான் ஒருவன். மற்றவன் அவன் மார்பின்மீது மண்டியாக ஒரு காலை வைத்து அழுத்தினான்; தலையும் காலும் நெளிய வளைத்தான்; உயிரை உடலினின்றும் பிரித்தான்; ஏறுபோல் நடந்து செருக்களத்தினின்று வெளியேறினான். அவன்தான் அரசிளங்குமரன் நற்கிள்ளி. சுற்றி நின்றவர் ஆரவாரித்தார்; ‘ஊரிழந்தானாயினும் கிள்ளி வீறிழந்தான் அல்லன்‘ என்று வியந்து புகழ்ந்தார். ‘இக்காட்சியைத் தித்தன் காணும் பேறு பெற்றானில்லையே; என்று பரிவுற்றார்.3


ஏறு தழுவுதல்

வீறுடைய ஏறு

முல்லை நிலத்தில் வளமான புல்லுண்டு. அதனை வயிறார மேய்ந்து மாடுகள் அழகிய மேனி பெற்று விளங்கும். அந் நிலத்தில் வாழும் ஆயர்க்கு அவையே அரும்பெருஞ் செல்வம். மாடுகளில் ஆண்மையுடையது எருது. அதனை ஏறு என்றும், காளை என்றும் கூறுவார். வீறுடைய ஏறுகள் கடும் புலியையும் நேர் நின்று தாக்கும்; வலிய கொம்புகளால் அதன் உடலைப் பீறிக் கொல்லும். இத்தன்மை வாய்ந்த எருதுகளைக் கொல்லேறு என்றும், மாக்காளை என்றும் தமிழ் நாட்டார் போற்றுவர்.

காளையும் காளையும்
மஞ்செனத் திரண்ட மேனி வாய்ந்த மாக்காளைகளைக் கண்டு ஆயர் குலத்து இளைஞர் அஞ்சுவதில்லை; அவற்றின் கொட்டத்தை அடக்க மார்தட்டி நிற்பர். ஏறுகோள்4 என்பது அவர்க்குகந்த வீர விளையாட்டு. அக் காட்சி நிகழும் களத்தைச் சுற்றி ஆடவரும் பெண்டிரும் ஆர்வத்தோடு நிற்பர். செல்வச் சிறுவர் உயர்ந்த பரண்களில் அமர்ந்திருப்பர். ஏறுகளுடன் போராடுவதற்கு மிடுக்குடைய இளைஞர்கள் ஆடையை இறுக்கிக் கட்டி முறுக்காக நிற்பர். அப்போது முரசு அதிரும். பம்பை முழங்கும். கொழுமையுற்ற காளைகள் தொழுவிலிருந்து ஒவ்வொன்றாக வெளிப்படும். களத்திலுள்ள கூட்டத்தைக் கண்டு கனைத்து ஓடிவரும் ஒரு காளை; கலைந்து பாயும் ஒரு காளை; தலை நிமிர்ந்து, திமில் அசைத்து, எதிரியின் வரவு நோக்கி நிற்கும் ஒரு காளை.

அவற்றின்மீது மண்டுவர் ஆயர்குல மைந்தர். கொம்பிலே உள்ளது காளையின் தெம்பு என்றறிந்து அதனையே குறிக்கொண்டு செல்வர். வசமாகப் பிடி கிடைத்தால் காளையின் விசையடங்கும்; வீறு ஒடுங்கும்; ஏறு சோர்ந்து விழும்.

ஏறுகோள்
காளையின் கொம்பைப் பிடித்தல் ஆண்மை, வாலைப் பிடித்தல் தாழ்மை என்பது தமிழர் கொள்கை. வாலைப் பிடித்தவன் காளையின் காலால் உதைபட்டு மண்ணிடை வீழ்வான். ஆதலால் கொம்பைவிட்டு வாலைப் பற்றுதல் கோழையின் செயல்; தோல்வியின் அறிகுறி. காளைப் போரில் வெற்றி பெற்ற இளைஞரை ஆயர் குலம் வியந்து நோக்கும்; இள நங்கையர் கண்கள் நயந்து பார்க்கும்.
ஏறுடன் போராட முனைவோர் எல்லாம் வெற்றி பெறுவதில்லை. கொம்பை நாடிச் சென்ற இடத்தில் தீங்கு விளைதலும் உண்டு. பிடி தப்பினால் அடிபட்டு விழுவர். எக்கசக்கமாய் அகப்படாமல் இடர்ப்படுவர்; காளையின் கொம்புகளால் குத்துண்டு குடலறுந்து குருதி வடிப்பர். இங்ஙனம் ஈனமுற்ற இளைஞர் நிலை கண்டு ஆயர் வருந்துவர்; ஆர்வமொழிகளால் அவர் துயரத்தை ஆற்றித் தேற்றுவர். வெற்றி பெற்ற காளையும் வீழ்ந்த இளைஞரருகே வெம்மை நீத்து வாடி நிற்கும். பேராண்மையின் அணியாகிய ஏறாண்மை கண்டு ஆயர்குல வீரர் அகங்களிப்பர்.

விலங்கு விளையாட்டு


யானைப் போர்
வீர விளையாட்டில் விருப்புற்ற தமிழர் உள்ளம் விலங்குப் போர்களிலும் வேட்கையுற்றது. மதயானைகள் ஒன்றோடு ஒன்று போரிடக் கண்டு மகிழ்ந்தனர் தமிழ் மன்னரும் செல்வரும். கருமலை போன்ற களிறுகள் பெருமிதமாகக் குறியிடம் போந்து பிளிறும்; வீர வெறி கொண்டு ஓடும்; சாடும்; நெடுங்கரத்தால் அடிக்கும்; கொம்புகளால் இடிக்கும். இக் காட்சியை மாளிகை மேடையில் இருந்து கண்டு இன்புறுவர் காவலர். குன்றேறி நின்று யானைப்போர் காணும் செய்கையைக் குறித்துள்ளார் திருவள்ளுவர்.5 அரசர் வாழும் தலைநகரங்களில் ஆனைப்போர் காண்பதற்கென தனி மாடங்கள் அமைத்தலும் உண்டு. அத்தகைய மாளிகையில் ஒன்று மதுரை மாநகரில் வைகையாற்றின் வட கரையில் இன்றும் காணப்படும். அந் நகரில் அரசாண்ட நாயக்கமன்னர் யானைப்போர் விளையாட்டுக் காண்பதற்காக அமைத்தது அவ் வசந்த மாளிகை. தமக்கம் என்னும் பெயர் வாய்ந்த அம்மாடம் இப்பொழுது மதுரை மாவட்டக் கலெக்டரின் குடியிருப்பாக விளங்குகின்றது.6

ஆட்டுப் போர்
இந் நாளிலும் நாட்டு மாந்தர் விருப்புடன் கண்டு களிப்பது ஆட்டுப் போர். ஆட்டுக் கடாக்களைப் போட்டிக்காகவே வளர்ப்பர் சிலர். அவற்றைப் பொருதகர் என்பர் திருவள்ளுவர்.
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்

தாக்கற்குப் பேரும் தகைத்து”
என்பது அவர் அருளிய திருக்குறள். போரிடும் ஆடுகள் ஒன்றையொன்று உருத்து நோக்கும்; எழுந்து தாக்கும்; பின் வாங்கும்; முன்னேறும்; கதித்துப் பாயும்; குதித்து முட்டும்; விலக்கினாலும் விடாது வெம்போர் விளைக்கும்.

சேவற் போர்
பறவையினத்திலும் போர் உண்டு. கொழுமையான கோழிகள் செய்யும் போரும், கடுமையான காடைகள் புரியும் போரும் கண்டு மகிழ்ந்தனர் பண்டைத் தமிழர்.
இன்றும் தமிழ் நாட்டில் பல விடங்களில் சேவற்போர் நிகழ்ந்துவருகின்றது. “கறுப்புறு மனமும், கண்ணிற் சிவப்புறு சூட்டும் காட்டிச்” சேவல்கள் செய்யும் சண்டையைப் புகழ்ந்து பாடினார் கம்பர். கத்தியும் முள்ளும் காலிற் கட்டிச் சேவல்களைப் போரிடச் செய்தலும் உண்டு. பாய்ந்தும் படிந்தும் அவை ஒன்றையொன்று அடிக்கும் பான்மையைக் கண்டு மாந்தர் ஊக்க முறுவர். சோழ நாட்டின் பழைய தலைநகராகிய உறந்தையில் வீரக் கோழிகள் சிறந்திருந்தமையால் கோழியூர் என்ற பெயர் அதற்கு அமைந்தது என்பர்.

(தொடரும்)

இரா.பி.சேது(ப்பிள்ளை), தமிழர் வீரம்

++++++++++++++++++++++++

குறிப்பு

1. ” வெடிபடவிரி சிறுகுருளைகள்

மிசைபடுகொலை விரவார்

அடிதளர்வுறு கருவுடையன

அணைவுறுபிணை அலையார்

கொடியெனஎதிர் முடுகியும்.உறு

கொலைபுரிசிலை மறவோர்.” – திருத்தொண்டர் புராணம், கண்ணப்பர், 36.

2. “நொச்சி வேலித் தித்தன் உறந்தை.” – அகநானூறு, 122.

3. புறநானூறு, 80.

4. ஏறுகோள் = ஏறு தழுவுதல். – தொல்காப்பியம், பொருள், 53 உரை.

5. ” குன்றேறி யானைப்போர் கண்டற்றால்” – திருக்குறள் 758. 6. ஆராய்ச்சித் தொகுதி – மு. இராகவையங்கார், ப. 298.