(உ.வே.சா. வின் என் சரித்திரம் 84: சிதம்பரம்பிள்ளையின் கலியாண நிறைவு தொடர்ச்சி)

ஆசிரியரின் உத்தரவுப்படி நான் திருவாவடுதுறைக்கு வந்து சேர்ந்த
பிறகு அவரைப் பிரிந்திருக்க நேர்ந்தது பற்றி மிகவும் வருந்தினேன். ஆனாலும் சுப்பிரமணிய தேசிகருடைய அன்பும் தம்பிரான்களுடைய பழக்கமும் அவ் வருத்தத்தை ஒருவாறு குறைத்தன. திருவாவடுதுறையில் உணவு விசயத்தில் எனக்கு ஒரு விதமான குறைவும் இல்லை. பொழுது போக்கும் இனிமையாக இருந்தது; குமாரசாமித் தம்பிரானுடைய சல்லாபம் எனக்கு ஆறுதலை அளித்தது. ஆசிரியர் கட்டளையிட்டிருந்தபடி, தம்பிரான்கள் எல்லாரிடமும் நான் மிக்க சாக்கிரதையுடனும் மரியாதையுடனும் பழகி வரலானேன்.

தேசிகர் கட்டளை

ஒரு நாள் இரவில் சுப்பிரமணிய தேசிகருடன் நான் பேசிக்
கொண்டிருக்கையில், “பிள்ளையவர்களிடம் போய் ஒரு சமாசாரம்
சொல்லிவிட்டு வர வேண்டும்” என்றார்.

“கட்டளைப்படியே செய்கிறேன்” என்று நான் சொன்னேன்.

திருப்பெருந்துறையில் ஆலய விசாரணை செய்து வந்த சுப்பிரமணியத் தம்பிரான் என்பவர் சுப்பிரமணிய தேசிகருக்கு ஒரு விண்ணப்பம் அனுப்பியிருந்தார். பிள்ளையவர்களை அந்தத் தலத்திற்கு நாடு நகரச் சிறப்புடன் ஒரு புராணம் பாடும்படி கட்டளையிட வேண்டுமென்றும், அவ்வாறு அவர் பாடி அரங்கேற்றி முடித்தால் இரண்டாயிரம் உரூபாய் தாம் சம்மானம் பண்ணுவதாகவும் தம்பிரான் அதில் தெரிவித்திருந்தார். அக்கடிதத்தைப் பற்றிச் சுப்பிரமணிய தேசிகர் என்னிடம் சொல்லிவிட்டு, “நல்ல சந்தர்ப்பத்தில் இந்த வேண்டுகோள் வந்திருக்கிறது. பிள்ளையவர்கள் தம் குமாரருக்கு விவாகம் செய்த வகையில் ஏதேனும் சிரமம் அடைந்திருக்கலாம். அதை நீக்கிக் கொள்வதற்கு இது நல்லது நீர் போய் இவ்விசயத்தைத் தெளிவாக எடுத்துச் செல்வதோடு, அவ்வாறு செய்வது பல விசயங்களில் அனுகூலமாக இருக்குமென்று நாமும் அபிப்பிராயப்படுவதாகச் சொல்லும்.
திருப்பெருந்துறைக்குரிய வடமொழிப் புராணத்தின் தமிழ் மொழி
பெயர்ப்பையும், அந்தத் தலத்திற்கு முன்பே உள்ள இரண்டு பழைய
புராணங்களையும் தம்பிரான் அனுப்பியிருக்கிறார். அவற்றையும்
பிள்ளையவர்களிடம் கொண்டு போய்க் கொடுத்து வாரும்” என்று சொல்லி அப்புத்தகங்களையும் என்னிடம் கொடுத்தார்.

ஒரு செய்யுளடி

நான் மறுநாட் காலையிலேயே மாயூரத்திற்கு நடந்து சென்றேன்.
ஆசிரியரிடம் செய்தியைச் சொல்லிப் புத்தகங்களையும் கொடுத்தேன். அவர்
அவ்விசயத்தை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார், அப்பொழுது அவர் மனம் திருப்பெருந்துறை விநாயகர் சந்நிதியிலேபோய் நின்றிருக்க வேண்டும். “செய்கிறேன்” என்றோ, திருவாவடுதுறைக்குப் புறப்படுவோம்” என்றோ அவர் சொல்ல வில்லை.

நிலவுவந்த முடியினொடு வெயிலுவந்த

மழகளிற்றை நினைந்து வாழ்வாம்”

என்ற ஒரு செய்யுளின் அடி அவர் வாக்கிலிருந்து புறப்பட்டது.
அப்போது, ‘இப்பொழுதே இவர்கள் புராணத்திற்குப் பிள்ளையார் சுழி போட்டு விட்டார்கள்’ என்று எண்ணினேன். வெயிலுவந்த விநாயகரென்பது
திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள தல விநாயகர் திருநாமம். வெயில் உவந்த விநாயகர் என்ற திருநாமத்தோடு வெயிலுக்குப் பகையாகிய நிலவின் ஞாபகமும்!   அதனை அவர் திருமுடியில் அணிந்திருப்பதன் ஞாபகமும்
ஒருங்கே வந்தன போலும். நான் அந்த அடியை ஏட்டிலே எழுதிக்
கொள்ளவில்லை; என் உள்ளத்திலே எழுதிக் கொண்டேன்.

“சந்நிதானத்தின் திருவுள்ளப்படி நடப்பதுதான் எனக்கு இன்பம். நீர்
திருப்பெருந்துறை பார்த்ததில்லையே?”

“இல்லை; மாணிக்கவாசகர் திருவருள் பெற்ற தலமென்று ஐயா
அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.”

“ஆமாம்; அது நல்ல தலந்தான். ஆவுடையார் கோவிலென்று இப்போது எல்லாரும் சொல்லுவார்கள். இறைவன் திருவருளால் புராணம் அரங்கேற்ற நேர்ந்தால் எல்லாவற்றையும் நீர் பார்க்கலாம்.”

திருப்பெருந்துறையைப் பார்க்க வேண்டுமென்ற விருப்பம் எனக்குத்
தோன்றியது; என் ஆசிரியர் அந்தத் தல புராணத்தைப் பாட நான் அதனை எழுத வேண்டுமென்ற ஆசை அதற்குமுன் எழுந்தது.

மூன்று நாட்கள் நான் மாயூரத்தில் தங்கியிருந்தேன். பிறகு ஆசிரியர்
புறப்படவே நானும் புறப்பட்டுத் திருவாவடுதுறையை அடைந்தேன்.

திருவாவடுதுறைக்கு வந்தபின் மீண்டும் பாடங்கள் வழக்கம் போல்
நடைபெற்றன. பெரிய வகையில் கந்தபுராணம் நடந்தது. சிறிய வகையில் திருவிளையாடல், திருநாகைக்காரோணப் புராணம், மாயூரப் புராணம் முதலியன நடந்தன.
குமாரசாமித் தம்பிரான்

குமாரசாமித் தம்பிரானுக்கு வரவர மடத்து நிருவாகத்தில் கவனம்
செலுத்த வேண்டிய அவசியம் நேர்ந்தது. அவர் பெரிய ஒடுக்கத்தில் இருந்தார். ஒடுக்கமென்பது பண்டார சந்நிதிகள் இருக்கும் இடத்திற்குப் பெயர். அவருடன் இருந்து காரிய தரிசியைப் போல முக்கியமான காரியங்களைக் கவனித்து வரும் தம்பிரானுக்கு ஒடுக்கத்தம்பிரான் என்று பெயர். நம்பிக்கையுள்ள தம்பிரான்களையே அப்பதவியில் நியமிப்பது வழக்கம் அந்த  
வேலையில் சின்ன ஒடுக்கமென்றும் பெரிய ஒடுக்கமென்றும் இரண்டு பிரிவுகள் உண்டு. பழம், சந்தனக்கட்டை, கற்கண்டு, பூசா திரவியங்கள் முதலியவை சின்ன ஒடுக்கத்தைச் சார்ந்தவை. .ஆபரணங்கள் விலையுயர்ந்த பட்டு, பீதாம்பரங்கள், ஆடைகள் முதலியன பெரிய ஒடுக்கத்தில் உள்ளவை.
அப்பெரிய ஒடுக்கத்தில் உள்ளவர் அனுபவத்தில் முதிர்ந்தவராக இருப்பார். அத்தகைய வேலையையே குமாரசாமித் தம்பிரான் ஏற்று நடத்தி வரலாயினர்.  அதனோடு மடத்து வித்துவான் வேலையும் அவருக்கு இருந்தது. வித்துவானென்ற பட்டமும் அதற்கு உரிய சின்னமாகிய பல்லக்கும் அவருக்கு வழங்கப்பட்டன.

பாடத்தில் மாறுதல்

இதனால் முன்போல் நாள்தோறும் பாடம் கேட்டு வருவது அவருக்கு
இயலாமற் போயிற்று. பெரிய வகுப்பென்பது பெயரளவில் வகுப்பேயன்றி உண்மையில் குமாரசாமித் தம்பிரானுக்காகவே அது நிகழ்ந்து வந்தது. அவர் நிலை மாறியவுடனே இரு பிரிவாக இருந்த பாடங்களும் மாறி, எல்லாத் தம்பிரான்களும் ஒருங்கே இருந்து கேட்க, காலையும் மாலையும் பாடங்கள் நடை பெற்றன. . குமாரசாமித் தம்பிரான் இடையிடையே ஓய்வு நேரும்போது வந்து கேட்பார்.

புராண ஆரம்பம்

சில தினங்களுக்குப் பிறகு பிள்ளையவர்கள் திருப்பெருந்துறைப்
புராணம் இயற்றத் தொடங்கினார். முதலில் விநாயக வணக்கம் ஒன்றைச்
சொல்லி முடித்தார். மாயூரத்தில் நான் அவரைப் போய்க் கண்டபோது ஒரடி
கூறியது அவருக்கு ஞாபகம் இல்லை. அதனால் வேறு ஒரு செய்யுளைச்
சொன்னார். அது முடிந்தவுடன் நான், “மாயூரத்திற்கு இது விசயமாக நான்
வந்தபோது வெயிலுவந்த விநாயகரைப்பற்றி ஒர் அடி சொன்னது என்
ஞாபகத்தில் இருக்கிறது” என்று சொல்லி அவ்வடியையும் கூறினேன். கேட்ட அவர் உடனே அதனையே இறுதி அடியாக வைத்து ஒரு செய்யுளைக் கூறினார். நான் எழுதினேன். மேலும் செய்யுட்கள் சொல்லச் சொல்ல எழுதி வரலானேன். சில நாட்களில் கடவுள் வாழ்த்தும் நாட்டுப்படலமும் நிறைவேறின. திருப்பெருந்துறைக்கு முன்பே இருந்த தமிழ்ப்புராணங்கள் இரண்டும் தல வரலாறுகளை வெளிப்படுத்தும்
நோக்கத்தோடு அமைந்தவை. பிள்ளையவர்கள் பாடும் புராணங்களில்
நாட்டுச்சிறப்பு நகரச்சிறப்பு முதலிய வருணனைகள் கற்பனைத்திறம் விளங்கஅமைந்திருப்பதை அறிந்தவர்கள் அம் முறையில் தங்கள் தங்கள் ஊருக்கும்
புராணம் வேண்டும் என்று விரும்புவார்கள். திருப்பெருந்துறைக்குப் புதிய
புராணம் பாட வேண்டுமென்ற முயற்சியும் அத்தகைய விருப்பத்தினால்
எழுந்ததே. ஆதலால் பிள்ளையவர்கள் நாட்டுச்சிறப்பை விரிவாகவே அமைத்தார்.