இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 04– சி.இலக்குவனார்
[இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 03 – தொடர்ச்சி]
இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 04
கழகப் புலவர்களும் பிறரும் இயற்றிய பாடல்களையே பிற்காலத்தார் பொருள் பற்றியும், பாவகை பற்றியும், அடிகள் பற்றியும் பல பிரிவுகளாகத் தொகுத்தனர். இவ்வாறு தொகுக்கப்பட்டவை எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்ற இரு பிரிவினுள் அடங்கியுள்ளன.
எட்டுத்தொகை என்பதனுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகியவை அடங்கும்.
பத்துப்பாட்டு என்பதனுள் திருமுருகாற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, பட்டினப்பாலை, குறிஞ்சிப்பாட்டு, மலைபடுகடாம் என்பன உள.
இவ் விருவகைப்பட்ட தொகை நூல்களே சங்க இலக்கியங்கள் என அழைக்கப்படுகின்றன. இவற்றின் காலம் தொல்காப்பியத்திற்குப் பின்னரும், கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்னருமாகும். இக்காலத்தில் வடமொழி நூல்களைத் தமிழ்ப் புலவர்கள் கற்றிருந்தார்கள். ஆனால், வடவர் பண்பாடு தமிழகத்தில் வேர் கொள்ளவில்லை.
சிலப்பதிகாரம், மணிமேகலை எனப்படும் இரட்டைக் காப்பியங்கள் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு உரியன. இக்காலத்தில் தென்னவர் நாகரிகமும் வடவர் நாகரிகமும் ஒன்றோடொன்று இணைந்தும் முரணியும் வாழத் தொடங்கின.
இவற்றை அடுத்துத் தோன்றியனவே பதினெண் கீழ்க்கணக்கு எனப்படும் அறநூல்கள். இவற்றின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரை என்னலாம். வடநாட்டிலிருந்து வந்த சமண புத்த சமயங்களின் செல்வாக்கை இவை எடுத்துக்காட்டும்.
சங்க இலக்கியங்களோடு ஒப்பிடுமிடத்து இவற்றின் பாடல்கள் குறைந்த அடிகளைப் பெற்றிருந்தமையால் இவற்றைக் கீழ்க்கணக்கு என்றும், சங்க இலக்கியங்களை மேற்கணக்கு என்றும் பிற்காலத்தார் அழைத்தனர் என்ப. இங்குக் ‘கணக்கு’ என்னும் சொல் ‘நூல்’ என்னும் பொருளைத் தரும்.
திருக்குறளையும் அடிபற்றி இக் கீழ்க்கணக்குள் அடக்குவர். கீழ்க்கணக்கு நூல்கள் யாவை எனத் தொகுத்துக் கூறும் வெண்பாவினுள் முப்பால் என்று குறிக்கப்பெறுவது திருக்குறளே என்பர்.
திருக்குறள் இரண்டடிகளையுடைய குறட்பாவினால் ஆக்கப்பட்டிருந்த போதிலும், பலவகையாலும் தனியாக மதித்து ஆராயப் பெறும் சிறப்பினையுடையது. திருக்குறளின் காலம் கி.மு. 31 எனக் கொண்டு இன்று அதன் ஆசிரியர் திருவள்ளுவர் பெயரால் ஆண்டு ஒன்று கொள்ளப்பட்டு வருகின்றது.
திருக்குறளின் காலத்தைத் தொல்காப்பியத்தின் காலமாம் கி.மு. ஏழாம் நூற்றாண்டுக்கும் கி.மு. முதல் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டதாகக் கொண்டு சங்க இலக்கியங்களுள் ஒன்றாகத் திருக்குறளைக் கொள்வதே சால்புடைத்தாகும்.
அறநூல்களாம் கீழ்க்கணக்கை அடுத்துத் தோன்றியன தேவாரம், திருவாசகம், திருவாய்மொழி முதலியனவாம். இவை கடவுள் அன்பை வெளிப்படுத்திப் பாடப்பட்டுள்ளமையால் கடவுள் அன்பு நூல்கள் என்று அழைக்கத்தக்கன. இவற்றின் காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு முடிய உள்ளதாகும்.
பின்னர் வடமொழியைத் தழுவியும் தழுவாமலும் காதை நூல்கள் தோன்றின. பெரியபுராணம், கம்பராமாயணம் போன்றனவே இவை. இக்காலம் கி.பி. பத்தாம் நூற்றாண்டு முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டு முடியவாகும்.
சமய மெய்ந்நெறி நூல்கள் சிறப்புறத் தோன்றிய காலம் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டும் பதினான்காம் நூற்றாண்டும் ஆகுமெனக் கொள்ளலாம்.
பதினைந்து, பதினாறு, பதினேழாம் நூற்றாண்டுகளைச் சிற்றிலக்கியங்கள் செழித்த காலம் எனலாம். பதினெட்டு, பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளைச் சீர்திருத்தக் காலம் என்று கொள்ளலாம்.
இம்முறையில் இலக்கியங்களின் துணைகொண்டு தமிழர் வாழ்வியலை ஆராய்வது நம் குறிக்கோளாகும்.
தொல்காப்பியம் சங்கக் காலத்திற்கு முற்பட்டதாயினும் சங்க இலக்கியங்களுள் தொல்காப்பியத்திற்கு முற்பட்ட காலப் பாடல்களும் சேர்ந்துள்ளமையாலும், தொல்காப்பியர் கால வாழ்வியலும் சங்க இலக்கியக் கால வாழ்வியலும் பெரும்பான்மையும் வேறுபாடற்ற நிலையில் உள்ளமையாலும் இரண்டையும் ஒன்றாக இணைத்து “இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் – சங்கக் காலம்.” தலைப்பில் இந் நூல் சுருங்கிய அளவில் தோன்றியுள்ளது.
நாட்டுப்பற்றும் ஒருமைப்பாடும் மக்களிடையே காழ்கொள்ள இந் நூல் பெரிதும் துணை செய்யும். பழங்காலத்தை அறிந்து நிகழ்காலத்தைக் கண்டு வருங்காலத்தை எண்ணித் திட்டமிடும் நாடே உலகில் சிறந்தோங்க முடியும். தம் பழமையை யறியாதார், அறிந்து போற்றாதார் விலங்கு நிலையில்தான் வாழமுடியும். விலங்கு நிலையினின்றும் உயர்ந்து வாழ விரும்பும் மக்களினம் தம் முன்னோர்பற்றி அறிந்து மேலும் மேலும் சிறந்து வாழ முற்படுதல் வேண்டும். இன்றேல் தேங்கிய குளநீர் போல் பாழ்பட்டு அவ்வினம் அழிவுறவேண்டிய இழிநிலை தோன்றும். ஆதலின், பழம் நிலை அறிந்து புதுநிலைக்குச் செல்வோம். புத்துலகம் காண்போம்.
(தொடரும்)
சங்கத்தமிழறிஞர் முனைவர் சி.இலக்குவனார்
தென்னவன் திருநாட்டினில் தன்மேனி வளர்த்த தமிழ் இலக்கியங்கள சுவைத்திடச் சுவைத்திட சூழுமின்பம் நாளும்நி மெய்யே!
வள்ளுவன் வாய்மொழி
வாழ்வினுக்குத் தாய் மொழி
இன்னுமொரு 1000 ஆண்டுகள் கழிந்த பிறகும் வாழும் தமிழோடு வாழ்வார் இலக்குவனார், அன்புடன் வாய்மை இளஞ்சேரன்