இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 08– சி.இலக்குவனார்
[இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 07 தொடர்ச்சி]
இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 08– சி.இலக்குவனார்
- நகரங்கள்
நாட்டுக்கு அணிகலன்கள் நகரங்களே. நகரங்கள் ஒரே நாளில் தோன்றிவிடா. விளைபொருள் மிகுதியாலும் கைத்தொழிற் சிறப்பாலும் கோயில்கள் அமைவதாலும் கப்பல் போக்குவரத்துக்குரிய வசதியாலும் வாணிபப் பெருக்காலும் தலைநகராகும் பேறு உண்டாவதனாலும் சிற்றூர்கள் பேரூர்களாக வளர்ச்சி பெற்று நகரங்கள் என அழைக்கப்பெறும். வளங்கொழிக்கும் பெரிய மாளிகையைக் குறிக்கும் ‘நகர்’ என்னும் சொல்லும் ‘நகரம்’ என்பதன் அடியாகும். ‘நகரம்’ என்பது எவ்வாறு இருக்கும் என்பதை இச் சொல்லின் அடிச்சொல்லே நன்கு விளக்கும். பெரிய மாட மாளிகைகள் நிறைந்த இடமே நகரம் ஆகும் என்று அடிச்சொல் அறிவியாநிற்கின்றது.
பண்டைத் தமிழகத்தில் பல நகரங்கள் தோன்றி வளமுற வாழ்ந்துள்ளன. அவற்றுள் சில இன்னும் அன்று பெற்றிருந்த பெருமை குன்றாமல் இருந்து வருகின்றன.
நகரங்களைப்பற்றிய வரலாறு நமக்கு இன்று கிடைத்திலது. சங்க இலக்கியங்களில் பெண்களின் அழகைச் சிறப்பிக்குமிடத்து, பெண்களை நகரத்திற்கு ஒப்பிட்டுக் கூறும் மரபு கையாளப்படும் பொழுதும், நாட்டு வளங்களைக் கூறுங்கால் துறைமுகப் பட்டினங்களைக் கூறுமிடத்தும், போர்களைக் குறிப்பிடுமிடத்தும், கலைஞர்களை ஆற்றுப்படுத்தும்போது இடைவழியில் வரும் நகரங்களைச் சுட்டிக் கூறும் பொழுதும் நகரங்களைப் பற்றி நவிலப்படுகின்றன.
அக்காலப் புலவர்கள் மகளிர் அழகை நகரத்தோடு ஒப்பிட்டுக் கூறும் மரபை மேற்கொண்டுள்ளது புதுமை மிகு செயலாகும்.1 எம்மொழியிலும் எப்புலவரும் இம்மரபைக் கையாண்டிலர். தமிழ்ப் புலவர்கள் தம் காலத்துச் சிறந்த நகரங்களை மகளிர் நலனுடன் ஒப்பிட்டதனால், மகளிர் அழகினை விரும்பிப் போற்றியதுபோல் நகர் அழகினையும் விரும்பிப் போற்றினர் என்பது பெறப்படுகின்றது. அன்றியும் மகளிர் அழகு அவர்கள் காதலர்க்கே துய்த்தற்கு உரியது; ஏனையர்க்கு உரியதன்று. பிறர் அதனை அடைவதற்குரிய அருமைப்பாடு போன்று நகரங்களையும் மாற்றார் அடைய இயலாது எனும் கருத்தையும் வெளிப்படுத்தினர். நகரை அழகுபடுத்துதல் வேண்டும் என்ற கருத்தும் தம் நாட்டு மக்களே அதன் பயனைத் துய்த்தல் வேண்டும் என்ற நோக்கும் சங்க கால மக்களுக்குப் புதியன அல்ல என்பது தெளிவாகின்றது.
அன்று நாட்டின் தலைநகரங்கள் மிகச் சிறப்புற்று விளங்கின. சேரநாட்டுக்கு வஞ்சியும் சோழநாட்டுக்கு உறையூரும் பாண்டிய நாட்டுக்குக் கூடலும் தலைநகரங்களாய் இலங்கின. ஒவ்வொரு நாட்டுக்கும் கடற்கரைத் துறைமுகங்களும் பெரும் சிறப்புற்றுத் தலைநகரங்கள் போல் அமைந்திருந்தன. சேரநாட்டுக்குத் தொண்டியும் சோழநாட்டுக்குக் காவிரிப்பூம்பட்டினமும் பாண்டிய நாட்டுக்குக் கொற்கையும் புகழ்பெற்ற துறைமுகங்களாம்.
தலைநகரங்கள் எல்லாம் திட்டமிட்டு அமைக்கப்பட்டனவாய் அரண்மனை அல்லது கோயிலை மையமாகக் கொண்டு ஆறுபோன்று அகன்ற பெருந்தெருக்களைப் பெற்றுக் கோட்டையும் அகழியும் கொண்டு கவினுற்று இலங்கின.
மண்ணுற ஆழ்ந்த மணிநீர்க் கிடங்கின்
விண்ணுற ஓங்கிய பல்படைப் புரிசை
தொல்வலி நிலைஇய அணங்குடை நெடுநிலை
நெய்படக் கரிந்த திண்போர்க் கதவின்
மழையாடு மலையின் நிவந்த மாடமொடு2
நகரங்கள், பல்வேறு குழூஉக்கொடி பெருவரை மருங்கின் அருவியினைப் போன்று நுடங்க, பல்வேறுகுழாஅத்து இசையெழுந்து ஒலிப்ப உயர்ந்தோங்கி நின்றன.
தமிழ்நாட்டுத் தலைநகரங்கள் மூன்றும் ஆற்றோரங்களிலேயே அமைந்திருத்தல் குறிப்பிடத் தகுந்தது. வஞ்சிமாநகர் பேரியாற்றங் கரையிலும், உறந்தை மாநகர் காவிரியாற்றங்கரையிலும், கூடல்மாநகர் வையையாற்றங் கரையிலும் தோன்றியுள்ளமையும் உலகப் பெரு நகரங்கள் பல ஆற்றோரங்களிலேயே தோன்றியுள்ளமையும் உலக நாகரிகத் தோற்றம் ஆறுகளையே சார்ந்துள்ளது என்னும் கூற்றுக்கு அரண் செய்து, தமிழ்நாட்டுத் தலைநகரங்களின் பழமையை நிலைநாட்டுகின்றன. ஆண்மைக்கு வஞ்சியும் அறத்திற்கு உறந்தையும் தமிழுக்கு மதுரையும் தவாப்பெருஞ் சிறப்புடையன எனப் புலவர் பாராட்டுவர். இவை இலக்கியங்கள் பல தோன்றுவதற்கு இருப்பிடமாக இனிதே பொருந்தி இனிய பல இலக்கியங்களையும் பெற்றுள்ளன.
இம் முப்பெரு நகரங்களிலும் தமிழ் நிலைபெற்ற மதுரைதான் இன்றும் தன் தொன்மைச் சிறப்போடு தொடர்பு கொண்டு மீண்டும் தன் பண்டைப் பெருநிலையடையும் முயற்சிப் போரில் முனைந்து நிற்கின்றது. சேரர் தலைநகர் சிற்றூராய்த் தமிழின் தொடர்பற்றுவிட்டது; சோழர் தலைநகர் திருச்சிராப்பள்ளியின் ஒரு பகுதியாய் உறைகின்றது.
தலைநகரங்களும் பிற ஊர்களும் புலவர்களால் பாடப்பெற்றுள்ளன; இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன. இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்தனவற்றுள் பல இன்றும் பழம் பெயர்களுடனேயே இருக்கின்றன. சில பெயர்கள் சிதைந்தும் சில பெயர்கள் வடமொழியாக்கப்பட்டும் உள்ளன. பெரு நகர்கள் சில சிற்றூர்களாகவும் சிற்றூர்கள் சில பெரு நகரங்களாகவும் மாறுதல் உற்றுள்ளன. மேனாடுகளில் உள்ள ஊர்களின் பெயர்கள் எல்லாம் விரைவில் மாற்றம் அடைந்து வரும் நிலையில் அங்குச் சூழ்நிலைகள் உருவாகிவிட்டன. ஐந்நூறு ஆண்டுகட்கு முற்பட்ட ஊர்கள் மிகச் சிலவேதாம் உள்ளனவாம். இருப்பனவும் முற்றிலும் மாறுபட்டுள்ளனவாம். இங்கு அவ்வாறு இல்லாமல் பெரும்பாலான ஊர்கள் இன்று உள்ளமை நமது நாட்டின் நற்பேறே ஆகும். இவற்றுட் பல இருக்குமிடம் தெரியாமலே இருந்து வருகின்றன. இவற்றுட் சில அன்று பிளினி போன்ற மேனாட்டு ஆசிரியர்களால் அறியப்பட்டு அவர்தம் நூலுள் குறிப்பிடப்படும் புகழை அடைந்துள்ளன.
(தொடரும்)
சங்கத்தமிழறிஞர் முனைவர் சி.இலக்குவனார்
அடிக்குறிப்பு:
1. அகநானூறு 46-231
2. மதுரைக்காஞ்சி 351-356
Leave a Reply