இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 9
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 8 தொடர்ச்சி)
‘பழந்தமிழ்’
3. பழந்தமிழ் தொடர்ச்சி
ஆங்கில மொழியில் பிரித்தானியச் சொற்கள் எந்த அளவு கலந்துள்ளனவோ அந்த அளவு திராவிட (தமிழ்)ச் சொற்கள் சமசுக்கிருதத்தில் கலந்துள்ளன. ஆனால் இவ்வுண்மை நெடுங்காலமாக உணரப்பட்டிலது. (திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம், பக்கம் 714)
மேனாட்டு மொழியியல் அறிஞர்கள் இந் நாட்டு மொழிகளைக் கற்று ஆராய்ந்து ஆரிய மொழியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட திராவிட மொழிச் சொற்களைத் தொகுத்து எடுத்து அறிவித்துள்ளனர். அதன் பின்னர்தான் ஆரியம் கடன் கொடுக்குமேயன்றிக் கொள்ளாது என்ற கொள்கை வலி இழந்து மறைந்தது.
ஆரியம் கடன் கொண்டுள்ள சொற்களுள் சில வருமாறு:
1. அக்கா (=தாய்), 2. அத்தா, அத்தி (=தாய், தமக்கை), 3. அடவி (=காடு), 4. அணி, ஆணி, 5. அணு, 6. அம்பா, அம்ப (=தாய், தந்தை), 7. ஆலி (=பெண்ணின் தோழி),8. கடுக, கடு (=சாரம், காரம்), 9. கலா (=கலை), 10. குடி(=வீடு), 11. குணி, கூணி (=முடவன்), 12. கூல = குட்டை அல்லது சிறிய நீர் நிலை), 13. கோட்ட, கோட (=கோட்டை), 14. கட்டா (=கட்டில்), 15. நானா (=பலவகை) 16. நீர (=நீர்), 17. பட்டனம் (=கடற்கரை நகர்), 18. பன்னா (=பொன், ) 19. பல்லி (=பள்ளி=ஊர்), 20. ப்ஹாக் (=பங்கு), 21. மீன (=மீன்), 22. வல (=வளை), 23. சவ (=பிணம்), 24. சாயி (=மாலைப்பொழுது), 25. ஏட (=ஆடு, துளுவில் ஏடு = ஆடு), 26. நாரங்க (=ஒருவகை ஆரஞ்சு மணம் வீசும் அழகிய காய்), 27. புத்ர (=மகன். புத் = புதுமை, புத்தன் புதியவன்), 28. மருத்த (=மருத்துவன்), 29. முக்தா (=முத்து), 30. அடவி (=காடு), 31. அரிசி = விரிகி, 32. புஷ்பம் = பூ.
இன்னும் கூறிக்கொண்டே செல்லலாம்; விரிப்பின் பெருகும். ஆரியர்கள் இந்நாட்டுக்கு வந்த காலை வழங்கிய சொற்கள் அவர்கள் வருகைக்கு முன்னும் வழங்கின; வந்து இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்து இன்னும் வழங்குகின்றன. ஆரியர் வருகைக்கு முன்னர் வழங்கிய பழந்தமிழ் சொற்றொடர் அமைப்பில் எவ்வித மாற்றமும் அடைந்திலது. மூலச் சொற்கள் பல பொருளிலும் வடிவிலும் மாற்றம் உறாமல் இன்றும் வழங்குகின்றன.
சங்க இலக்கியத் தொகுப்பினுள் ஆரியர் இந்நாட்டுக்கு வருவதன் முன்னர் இயற்றப்பட்டனவும் சேர்க்கப்பட்டுள்ளன.
பத்துப்பாட்டுள் மலைபடுகடாம் என்பது ஆரியர் வருகைக்கு முன்னரும் தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரும் இயற்றப்பட்டதாகும். இவ்வாறு கூறுவதற்குரிய காரணங்களாவன:
1. ஒன்பது என்னும் எண்ணினைக் குறிக்கும் தொண்டு என்னும் சொல் தொல்காப்பியர் காலத்தில் வழக்கு வீழ்ந்துவிட்டது. ஆனால் இந் நூலில் அது பயின்றுள்ளது.
தொடித்திரி வன்ன தொண்டுபடு திவவின்
(மலைபடுகடாம், வரி 21)
2. யானையைப் பழக்குங்கால் யானைப்பாகர் வடமொழிச் சொற்களைக் கூறிப் பழக்கியதாக முல்லைப் பாட்டில் கூறப்பட்டுள்ளது. சுவைமுட் கருவியின் வடமொழி பயிற்றி (முல்லைப் பாட்டு, வரி 35) என்பது காண்க. ஆனால் மலைபடுகடாம் என்னும் நூலில் விரவுமொழி பயிற்றும் பாகர் ஓதை என்று கூறப்பட்டுள்ளது. உரப்பிக் கூறும் வடமொழியறியாத் தமிழ்ப் பாகர், தமிழ்ச் சொற்களில் இன்னா ஓசையுடையனவற்றைக் கலந்து கூறி யானைகளை அச்சுறுத்தினர் போலும்.
3. ஆரியப் பழக்க வழக்க நாகரிகங்களைப்பற்றிய குறிப்பு யாதொன்றும் இந் நூலுள் இல்லை.
4. மூவேந்தர்களைப்பற்றிய குறிப்பு யாதொன்றும் காணப்படாமையால் பெருநில மன்னர் தோன்றப் பெறாத மிகப் பழங்காலத்தில் இந் நூல் இயற்றப்பட்டிருக்கலாம்.
5. திணை நிலங்களைப்பற்றிக் கூறுங்கால் தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள திணைநிலக் கடவுள் பற்றியோ, ஆரியர் சார்பால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கடவுள் பற்றியோ கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
6. தொல்காப்பியர் கூறும் ஆற்றுப்படை இலக்கணத்திற்கு ஏற்ப இந் நூலைக் கூத்தர் ஆற்றுப்படை என அழையாது மலைபடுகடாம் என அழைத்துள்ளமையும் இந் நூல் தொல்காப்பியர் காலத்துக்கு முற்பட்டது என்பதை அறிவிக்கும்.
ஆசிரியர் பெயர் கோசிகனேயன்றிக் கௌசிகன் அன்று. கோசிகம் தமிழ்ச்சொல்லே. ஆதலின் மலைபடுகடாம் ஆரியர் வருகைக்கு முன்னர் இயற்றப்பட்டதேயாகும்.
எட்டுத் தொகையினுள் 2371 பாடல்களுள் ஐந்நூறு பாடல்கள் ஆரியர் வருகைக்கு முன்னர் இயற்றப்பட்டன என்பதில் ஐயமின்று. இவற்றுள் பயின்றுள்ள பல சொற்கள் இன்னும் வழக்கினுள் வாழ்கின்றன.
எடுத்துக்காட்டாக ஒரு பாடலை நோக்குவோம்:
படைப்புப் பலபடைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வ ராயினும் இடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை யில்லைத் தாம் வாழும் நாளே.
(புறநானூறு, 188)
இப் பாடல் அறிவுடைநம்பி என்பவரால் பாடப்பட்டதாகும். ஆரியர் தொடர்பு ஏற்படுவதற்கு முன்னரே மூவாயிரம் ஆண்டுகட்கு முன்னர்ப் பாடப்பட்டுள்ள இப் பாடலில் பயின்றுள்ள சொற்கள் படைப்பு, பலர், உண்ணும், செல்வர், நடந்து, சிறுகை, நீட்டி, இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும், நெய், அடிசில், மெய், விதிர்த்தும், மக்களை இல்லோர், தாம், வாழும் நாள், எல்லாம் இன்றும் வழக்கினுள் பயில்கின்றன.
இனித் தொல்காப்பியர் காலத்தைக் காண்போம்:
(தொடரும்)
பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்
Leave a Reply