Ilakkuvanarin-pazhanthamizh-aayvu-maraimalai01

(ஆடி 10, 2046, சூலை 26, 2015 தொடர்ச்சி)

   பேராசிரியரின் கருதுகோளை இற்றைத் தொல்லியல் வளர்ச்சி நிலையில் மீள்ஆய்வு செய்யவேண்டும். நூலுள் நுவலப்பட்டுள்ள செய்திகள் பண்பாட்டுமானுடவியல்,  கல்வெட்டியல், தொல்லியல் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வதற்கு ஒரு தூண்டுகோலாகப் பேராசிரியரின் கருதுகோள் விளங்குகிறது.

செம்மொழி ஆய்வுக்குச் சிறப்பான ஆற்றுப்படையாகக் கீழ்வரும் இயல்கள் திகழ்கின்றன எனலாம்:

பழந்தமிழ் (ப. 26-42)

பழந்தமிழ்ப்புதல்விகள் (ப. 65-95),

பழந்தமிழ் இலக்கியம் (ப. 96-116),

பழந்தமிழ் நிலை (ப. 117-141),

பழந்தமிழின் எழுத்துச் சான்றுகள் (ப. 142-157),

பழந்தமிழ்ச் சொல்லமைப்பு (ப. 158-173),

பழந்தமிழும் தமிழரும் (ப. 174-211)

  உலகச்செம்மொழிகளுள் தமிழ் பெறும் உயரிய இடத்தை விளக்கிக் கூறும் பேராசிரியர் இலக்குவனார், சமற்கிருதத்திலிருந்தும் பிராகிருதத்திலிருந்தும் தமிழ் கடன்பெற்றதாகக் கிளப்பப்படும் கட்டுக்கதைகளை வன்மையாக மறுக்கிறார்.   பையுள், கமம், பண்ணத்தி, படிமை ஆகியவற்றைப் பிராகிருதச் சொற்கள் என்று வையாபுரியார் குறிப்பிட்டுள்ளார் (History of Tamil Language and Literature p. 68). இக்கூற்றை மறுக்கும் வகையில் பின்வரும் கருத்துகளைப் பேராசிரியர் இலக்குவனார் முன்வைக்கிறார்.

  1. பிராகிருதமொழி உருவானது கி. மு. மூன்றாம் நூற்றாண்டில்தான். அது செல்வாக்கு பெற்றது அசோகர் காலத்தில்தான்.
  2. ஆரியமொழி இந்தியாவில் வழங்கத்தொடங்கியது கி. மு. பத்தாம் நூற்றாண்டில்.
  3. அதுவரும் முன் இந்தியா முழுமையும் தமிழே வழக்கிலிருந்தது.
  4. இருக்குவேதத்தில் பல தமிழ்ச்சொற்கள் இடம்பெற்றுள்ளன.
  5. பிரமாணங்களிலும் பல தமிழ்ச்சொற்கள் இடம் பெற்றுள்ளன.
  6. வேதமொழியிலும் சமற்கிருதத்திலும் தமிழ்ச்சொற்கள் இடம் பெற்றுள்ளமை போன்று, பிராகிருதத்திலும் தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றிருக்கலாமே. இந்தப் பார்வையுடன் நோக்காது, பிரகிருதச் சொற்கள் தமிழில் இடம் பெற்றுள்ளதாகக் கூறுவது ஏன்? (மே.ப. ப.150-152).

பேராசிரியர் இலக்குவனார் தொடுத்துரைக்கும் செறிவும் ஆழமும் மிக்க இக்கருத்துகளை ஊன்றிச் சிந்திப்போர் வையாபுரியார் கூற்றின் வழுவும் வடுவும் தெளிவர்.

  இந்தோ-ஆரிய மொழி வரலாற்றைத் தொன்மைக்காலம், இடைக்காலம், அண்மைக்காலம் என மூவகையாகப் பிரிப்பர்.  அவற்றுள் பிராகிருதவரலாறு இடைக்காலத்தைச் சார்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  பிராகிருதம் என ஒருமையில் அழைப்பதைக் காட்டிலும் பிராகிருதங்கள் எனப் பன்மையில் அழைப்பது மொழியியலாளர் மரபு.  இந்தியாவுக்கு வந்தேறிய இந்தோ-ஆரியர் பல்வேறு கிளைமொழிகளை வழங்கிய பல்வேறு இனக்குழுவைச் சார்ந்தவர்கள்.  அக்கிளைமொழிகளுள் ஒன்று, இலக்கியத்தரம் பெற்றுச் சமற்கிருதம் என நிலைபெற்றது.  ஏனையவை கிளைமொழிகளாகவே நீடித்தன என்கிறார் அறிஞர்  அனந்தநாராயணர் (International Journal of Dravidian Linguistics,Jan-2005 p.1) அர்த்தமாகதி, சமண மகாராட்டிரி, சமண சௌரசேனி, மகாராட்டிரி, சௌரசேனி, மாகதி, பைசாசி என்பவையே பல்வேறு கிளை- மொழிகளாக வழங்கிவந்த பிராகிருதங்களாகும். வடமொழி இலக்கண நூல்களில் அர்சா என அழைக்கப்பட்ட அர்த்தமாகதி மகத நாட்டின் சரிபாதியிடங்களில் வழங்கியமையின் அப்பெயர் பெற்றது என்பர்.  மகாவீரர் தமது சமயச்சொற்பொழிவுகளை இக்கிளைமொழியில் தான் நிகழ்த்தியுள்ளார்.  சுவேதாம்பரச் சமணர்களின் சமயநூல்கள் அர்த்தமாகதியில் இயற்றப்பட்டன.  ஆயின் அவர்களது கதை இலக்கியங்கள் சமணமகா- ராட்டிரியிலேயே இயற்றப்பட்டன.

  பிராகிருதங்களுள் விழுமிய மொழி எனத் தண்டி போன்ற புலவர்களால் போற்றப்பட்டது மகாரட்டிரி ஆகும்.  ஆலரின் சத்தசாயி, செயவல்லபரின் வச்சாலக்கா, பல தன்னுணர்வுப் பாடல் தொகுப்புகள், இசைப்பாடலகள் முதலியன இக் கிளைமொழியை இனிமை நிறைந்ததாக விளங்கச் செய்தன.  சௌரசேனி நடுநாட்டையும் மகாராட்டிரி மகாராட்டிரத்தையும் மாகதி கிழக்குப் பகுதியையும் சேர்ந்தவை.  குணாத்தியரின் பிருகத்கதா பைசாசி எனும் கிளைமொழியின் பெருமையுரைக்கும்.  எனினும் அப்படைப்பு நமக்குக் கிட்டாமல் போயிற்று.  அதனைப் பற்றி அறிந்திட சோமதேவரின் கதாசரித்திரசாகர அல்லது சேமேந்திரரின் பிருகத் கதாமஞ்சரி ஆகிய நூல்களில் ஒன்றின் துணைநாட வேண்டியுள்ளது.

  இத்துணைக் கிளைமொழிகளுள் எந்தப் பிராகிருதத்தில் மேற்கூறிய சொற்கள் காணப்படுகின்றன என்பதை வையாபுரியார் அறுதியிடத் தவறிவிட்டார்.

  பேராசிரியர் இலக்குவனார் கூறுவதுபோன்று தொல்காப்பியர் காலத்துக்குப் பிந்தைய மொழியில் ஒரு சொல் காணப்படுமாயின் அச் சொல் தொல்காப்பியத்தின் தாக்கத்தாலும் அங்குச் சென்றிருக்கலாம் என்பதை வையாபுரியார் ஏன் கருதிப்பார்க்கவில்லை? திராவிடமொழிக் கூறுகள் வேதமொழியிலும் பிராகிருதமொழியிலும் செலுத்திய தாக்கங்களை அனந்தநாராயணர் தொகுத்துரைக்கிறார்  (மே.ப. ப.12-13).  இவை எமனோ, கூப்பர் ஆகியோரின் ஆய்வுமுடிவுகள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  ‘வட இந்தியமொழிகளே பழந்தமிழும் ஆரியமும் கலந்து உருவானவைகளாக இருக்கும்போது, அவற்றுள் பழந்தமிழ்ச்சொற்கள் காணப்படுவது புதுமையின்று’ (மே.ப. ப.151) என்னும் பேராசிரியர் இலக்குவனார் கூற்றுக்கு அரண்சேர்க்கும் வகையில் அனந்தநாராயணரின் விளக்கம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  திராவிடமொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டோர் தம் கூட்டுறவால் இருக்குவேததில் ஏற்பட்ட இலக்கணமாற்றங்களையும்,  சமற்கிருதத்திலும் பிராகிருதங்களிலும் ஒலியனியல், சந்தி ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றங்களையும் நடுநிலையாகவும் விவரமாகவும் தெரிவித்துள்ள அனந்தநாராயணரின் கட்டுரை ‘எல்லாம் வடக்கேயிருந்து இரவல் பெற்றவையே’ என்பார்தம் மூடநம்பிக்கைகளைக் களைந்தெறியும்.

(தொடரும்)

Maraimalai Ilakkuvanar04பேரா.முனைவர் மறைமலை இலக்குவனார்

நன்றி : செம்மொழிச்சுடர்