(இலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 2/3 தொடர்ச்சி)

இலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 3/3

ஆளுமை நெறி :

  தமிழ்நாட்டில் தமிழுக்கும் தமிழர்க்கும் தலைமை இல்லாச்  சூழலே நாம் அடையும் அனைத்து இன்னல்களுக்கும் காரணமாக அமைகின்றது. தமிழர்க்கு எதிரான  துயரங்களைக்  களைய முடிவெடுக்க வேண்டியவர்கள் பிற மொழியாளர்களாகவே உள்ளனர். தமிழ்ப்பகுதிகளைத் தமிழ் நிலத்துடன் சேர்ப்பது, சிங்களவர்கள் மீனவர்களுக்கு எதிரான படுகொலைகள், ஈழத்தில் உருவாக்கப்பட்ட பேரின அழிவு முதலானவற்றில்  தலைமைப் பொறுப்புகளில் உள்ள பிறர், அவரவர் மொழியினருக்கும் இனத்தினருக்கும் சார்பாகவும் நமக்கு எதிராகவும் நடப்பதே  நடைமுறை. எனவே, தமிழர் தலைமை பெற வேண்டும் என்றும்  அதற்குத் தமிழ் தலைமை பெற வேண்டும் என்றும் பேராசிரியர் இலக்குவனார்  வலியுறுத்துகிறார். சிலர் ஆங்கிலத் தலைமையை மாற்றி இந்தித் தலைமையைச் சுமத்த முயன்று வருகின்றனர். எந்தத் தலைமையும் நமக்கு வேண்டா. நமக்கு நாமே தலைவராக இருப்போம். தமிழ்நாட்டில் தமிழுக்கே தலைமை வேண்டும். தமிழ் தலைமை பெறும் வரை தமிழர் தலைமை பெறுதல் இல்லை. பழைய வடமொழிக்கடிபணியாது வாழ்ந்த தென்மொழி புதியதொரு இந்தியெனும வட மொழிக்குத் தலை குனிந்து வாழ்ந்திடுமோ? ஒரு நாளும் இல்லை  எனப் பேராசிரியர் இலக்குவனார் காட்டிய  ஆளுமை நெறியை நாம் ஒவ்வொருவரும் பின்பற்றினால் தமிழர் முழு  உரிமையுடன் என்றென்றும் வாழ இயலும்.

கட்சி நெறி :

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் இல்லாமல் இருப்பதே சிறந்த நாடு என்கின்றார்  தெய்வப்புலவர் திருவள்ளுவர்.  பேராசிரியரும் இங்கிலாந்துபோன்ற சில கட்சி ஆட்சிமுறைதான் நாட்டிற்குத் தேவை என்கின்றார். பல கட்சிகள் உள்ளமை மக்களாட்சிக்குத் துணை புரியாது என்பதே பேராசிரியர் இலக்குவனார் கூறும் தேர்தல் நெறியாகும். பல்குழுவும் என்பதில் சாதிகள் பெயரால் உருவாகும் கட்சிகளும் அடங்கும். சாதிகளின் பெயரால் கட்சிகளை உருவாக்கித் தேர்தல்களில் போட்டியிட முனைவது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போலாகும் எனச் சாதிக்கட்சிகளைத் தடுத்திட வேண்டும் என்பதே அவரது கட்சி  நெறியாகும்.

பரப்பு நெறி:

தமிழ்க்காப்புக்கழகம் மூலம் தமிழ்க்காப்புப் பணிகளைச் சிறப்பாக ஆற்றியவர் பேராசிரியர் இலக்குவனார். தமிழ் பரப்புக்கழகம் நிறுவி உயர்தனிச்  செம்மொழியாம் தமிழ் மொழியின்சிறப்பை உலகெங்கும் பரப்ப வேண்டும் என்பது பேராசிரியர் இலக்குவனார்  திட்டமாக இருந்தது. ஆனால், இப்பணிகளைத் தொடங்கி முடிக்கும்முன்னரே அவரை நாம இழந்து விட்டோம். என்றாலும் அவர் அறிவுறுத்திய வழியில் தமிழ்பரப்புக்கழகம்நிறுவித் தமிழின் சிறப்பை உலக மக்களுக்கு உணர்த்த வேண்டும். தமிழ்க்காப்பு என்பது  கட்சிகளுக்கு அப்பாற்பட்டது. அனைத்துக் கட்சிகட்கும் உரியது என்று பேராசிரியர் இலக்குவனார் அறிவுறுத்தியதை அனைத்துக் கட்சியினரும் ஏற்று அன்னைத் தமிழைக் காப்பதை அவரவர் கடமையாகக் கொள்ள வேண்டும். இந்திய மொழிகளின் தாயே தமிழ்தான் என்றும் திராவிடம் என்ற சொல்லின் தோற்றம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிந்தியது என்றும் பேராசிரியர் இலக்குவனார் கூறியதை நினைவில் கொண்டு பரப்புரை மேற்கொண்டால், இந்தியம் என்றும் திராவிடம் என்றும் தமிழ்  அழுத்தப்படுவதைத் தடுத்துத் தமிழைக் காத்திடுவோம். தமிழ்மொழி இந்நாட்டின் முதல்மொழி; அடிப்படை அமைப்பைத் தந்துள்ள மொழி. ஆரியம் வருமுன் வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும் தெனாது உருகெழு குமரியின் தெற்கும் உட்பட்ட நிலப்பரப்பில் வழங்கிய தொன்மொழி  என்று ஆய்ந்துரைத்தவர் பேராசிரியர் இலக்குவனார். உலகில் முதல் மாந்தர் தோன்றிய இடம் தமிழகமே என்பதும், முதல் மாந்தரால் உரையாடப்பெற்ற மொழி தமிழே  என்றும் பேராசிரியர் இலக்குவனார்  அறிஞர்கள் உரைகள் கொண்டு மெய்ப்பித்ததை நாம்  பாரெங்கும் பரப்ப வேண்டும். அப்பொழுதுதான் தமிழின் சிறப்பைப் பிறர் மட்டுமல்ல, நம்மவரே உணர்வர்.

குமுகாய நெறி:

சாதிகளற்ற வாழ்வே சமஉரிமை தரும் நல வாழ்வு என்பது பேராசிரியர் இலக்குவனார் வலியுறுத்தும் குமுகாய நெறியாகும். சாதிகள் தமிழ்நாட்டுக்குப் புதியனவே. சாதி என்ற சொல்லே தமிழன்று. இதுவே, சாதி தமிழ் நாட்டில் தமிழரல்லாதவர்களால் புகுத்தப்பட்டது என்பதைத் தெற்றென்று அறிவிக்கும் என்றும் அவரவர் தம் பெயர்கட்குப் பின்னால் சாதிப் பட்டங்களைச் சேர்த்துக் கொள்ளுதலைத் தாமாகவே நீக்கிக் கொள்ளல் வேண்டும் என்றும் ஒரே சாதிக்குள் திருமணம் செய்யக்கூடாது என்று தடைச்சட்டம் கொண்டுவருதல் வேண்டும் என்றும் பிறப்பு(சாதி) வேறுபாடுகள் நிலைத்திருக்கும்வரை மக்களாட்சி வெற்றி பெறுதல் இயலாது என்றும் பேராசிரியர் இலக்குவனார் காட்டும் சாதிகளற்ற குமுகாய நெறியே பிறப்பு வேறுபாடுகளற்ற உண்மையான மக்களாட்சி நிலைக்க  வழிவகுக்கும்.

 

குறிக்கோள் நெறி :

நாம்ஒவ்வொருவரும் மேற்கொகாள்ள வேண்டிய குறிக்கோளுக்கான இலக்கினையும் பேராசிரியர் இலக்குவனார் வரையறுத்துள்ளார். தமிழ்நாட்டில் தமிழுக்கே முதன்மை!  தமிழில்தான் எல்லாம்! என்ற நிலையை விரைவில் உண்டாக்கவும், தமிழர் பங்குபெற உரிமையுள்ள இடங்களில் எல்லாம் தமிழும் இடம் பெறவும், காலத்துக்கேற்ப, மரபு கெடாது, தமிழை எல்லா வகையாலும் வளப்படுத்தவும் ஒல்லும் வகையால் அயராது உழைப்பதே  நம் குறிக்கோள் எனக் கொண்டு நாம்  செயல்பட்டால் உரிமை வாழ்வினை வாழலாம்.

தமிழும்தமிழ்நாடும் ஏற்றம் பெற்று உலகில்  தமிழர் சிறந்து  திகழவும் வாழுமிடங்களில் எல்லாம் பிறருக்குச் சமமான உரிமையைப் பெற்று மகிழவும் இலக்குவ நெறியே சிறந்த வழிகாட்டு நெறியாகும். தமிழ்த்தேசியவாணர்களும் மக்களாட்சி ஆர்வலர்களும்  இலக்குவ நெறியைப் பின்பற்றிப் பிறரையும்  பின்பற்றச் செய்வார்களாக!

இலக்குவ நெறியைப்பின்பற்றி உரிமை வாழ்வை எய்துவோம்!

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனாரின்  முப்பத்தொன்பதாம் நினைவு நாளில்  வெளியானது. நட்பு :  03/09/2012 )

(பேராசிரியர் இலக்குவனார் நடத்திய இதழ்களில் இருந்தும் படைத்த நூல்களில் இருந்தும் மேற்கோள்கள் எடுக்கப்பட்டுள்ளன.)