கலித்தொகை வழி அறியலாகும் தலைவன் தலைவி ஒப்புமைகள் – ப. சுதா
அன்பின் ஐந்திணையில் தலைமக்களைப் பற்றி பேசவரும் போதெல்லாம் ஒத்த தலைவனும் ஒத்த தலைவியும் என்று குறிப்பிடும் பாங்கினைக் காணலாம். தொல்காப்பியர் ஒன்றே வேறே என்றிரு பால்வயின் என வரும் நூற்பாவில் ஒத்த கிழவனும் கிழத்தியும் குறித்து விளக்கியுள்ளார். ஆனால் அங்குச் சுட்டப்படும் ஒத்த என்பதற்குரிய விளக்கத்தினை அவர் மெய்ப்பாட்டியலில் குறிப்பிடுகிறார்.
பிறப்பே குடிமை ஆண்மை யாண்டோடு
உருவு நிறுத்த காமாவயில்
நிறையே யருளே உணர்வொடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே (தொல்.பொருள்.மெய்ப்.269)
என்ற நூற்பாவின் மூலம் தொல்காப்பியர் தலைவனுக்கும் தலைவிக்கும் உளதாகிய ஒப்புமையைக் குறிப்பிடுகிறார். ஒன்றே வேறே என்ற நூற்பாவிற்கு உரை எழுதும் இளம்பூரணர் தலைவனுக்கும் தலைவிக்கும் உளதாகும் ஒப்புமைக் குணங்கள் பத்து என்கின்றார். காதல் மேற்கொள்ளும் இருபாலருக்கும் இருக்க வேண்டிய ஒப்புமைக் குணங்களை நாவலர் சோமசுந்தர பாரதியார் கூறுகையில்,
பிறப்பு – தோன்றிய குடிநிலை ஆண்மை- ஆளுந்திரம் இருபாலர்க்கும் பொது.
மனையாட்டி, அயலில்லாட்டி, பெண்டாட்டி , வினையாட்டி, எல்லாவற்றாலும் பெண்பாலார் ஆட்சியுண்மை துணியப்படும்.
திரு – செல்வம். இது பொருள் பற்றியதன்று. உள்ள மலர்ச்சி; செல்வம் சிந்தையினிறைவே (தொல்.பொருள்.கருத்துக்கோவை.ப.48)
என்று கூறுகின்றார். மேற்கூறிய பத்துவகையான ஒப்புமைகள் கலித்தொகையில் எவ்வாறு இடம் பெற்றுள்ளன என்பது குறித்து ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பிறப்பு
பிறப்பு ஒப்புமை தலைவன் தலைவி ஒப்புமைகளுள் ஒன்று. பிறப்பு என்பது அந்தணர், அரசர், வணிகர், வேளாளர், ஆயர், வேட்டுவர், குறவர், நுளையர் என ஒரே குடியில் பிறந்தவராக இருக்கவேண்டும் பிறப்பு பற்றிய செய்தி குறிஞ்சிக்கலி பாடலில் இடம் பெற்றுள்ளது.
அவனும் தான் ஏனல் இதணத்து அகிற்புகை உண்டு இயங்கும்
வான் ஊர் பதியம் வரைசேரின் அவ்வரை
தேரின் இறால் என ஏணி இழைத்திருக்கும்
காண் அகில் நாடன் மகன்
(கலித்தொகை, குறிஞ்சிக்கலி :3:7-10)
என்ற பாடலின் மூலம் அறியலாகும் செய்திகள். அவன் சாதாரணமானவன் அல்லன். அவனது நாட்டில் தினைப்புனங்கள் நிறைந்துள்ளன. அவற்றில் இடப்பட்ட பரண்களில் புகைக்கப்படும்; அகிற்புகை மேலோங்கி சென்று சந்திரனையே ஒளி குன்றச் செய்யும் ஒளிகுன்றிய சந்திரன் அவன் நாட்டு மலையின் உச்சியில் தோன்றும் பொழுது அது ஒரு தேனடை போன்று காணப்படும். அந்த மலையில் உள்ள மூங்கில்கள் தேன்கூட்டை அடையச் செய்யப்பட்ட கணுக்களை உடைய ஏணியைப்போல் தோற்றமளிக்கும். அத்தகைய மூங்கிற் காடுகளைக் கொண்ட மலைநாட்டுத் தலைவனின் மகனே நம் தலைவிக்கு மணாளனாக வாய்த்துள்ளான் என்ற கருத்தினைக் கொண்டு இருவரின் பிறப்பு அறியப்படுகிறது.
குடிமை
மேற்கூறிய குலத்தில் பிறந்த எல்லோருக்கும் சிறப்பாகிய ஒழுக்கம் பற்றி கூறுவது குடிவரவு. முல்லைக் கலிபாடலில் குடிமைப் பற்றிய செய்தி இடம்பெற்றுள்ளது.
அருநெறி ஆயர் மகளிர்க்கு
இருமணம் கூடுதல் இல்இயல்பு அன்றே
(கலித்தொகை, முல்லைக்கலி .13)
என்னும் பாடல் வரிகளில் சிறந்த குடியில் பிறந்த மகளிர் விரும்பியவனையன்றி வேறொருவனை திருமணம் செய்து கொள்ளார் என்பது கற்பின் சிறப்பைக் காட்டுவதாகும். இதன் மூலம் குடிமையொப்புமைப் பற்றி அறியமுடிகின்றது.
ஆண்டு
ஒருவருள் ஒருவர் முதியவரின்றி ஒத்த பருவத்தாராதல். அது குழவிப்பருவம் கழிந்து பதினாறுவயதினனும் பன்னிரண்டு வயதினளும் ஆகும். ஆண்டுபற்றிப் பாலைக்கலி பாடல் விளக்குகின்றது.
என்றோ ளெழுதிய தொய்யிலும் யாழநி
மைந்துடை மார்பிற் அணங்கும் நினைத்துக்காண்
(கலித்தொகை, பாலைக்கலி : 17:3-4)
என்னும் பாடலில், “தலைவியின் தோளில் தொய்யிலை எழுதி மகிழ்ந்தவன் நீ! நீ தலைவியை நின் வலிமையுடைய மார்பிலே அணைத்துத் தழுவியதால் அவளுக்கு உண்டான சுணங்கு என்னும் அழகுத் தேமலைக் கண்டு மகிழ்ந்தவனும் நீயே!” என்று தோழி தலைவனிடம் கூறுவதன் மூலம் இளமையும், இருவர் உள்ளத்தே ஒத்த காமத்தையும் ஒன்றாகப் பெற்றவர்கள் பொருட்செல்வத்தை விரும்பமாட்டார்கள் என்று தோழி தலைவனிடம் வயதின் முதன்மையைக் கூறுகின்றாள்.
உருவு
உருவு – வனப்பு அன்பின் ஐந்திணைக்குரிய தலைவனும் தலைவியும் உருவில் ஒப்புமையுடையவர்களாக இருக்க வேண்டும். முல்லைக்கலிப் பாடலில் உருவு பற்றிய செய்தி இடம்பெற்றுள்ளது.
முல்லை முகையும் முருந்தும் நிரைந்தன்ன
பல்லும் பணைத்தோளும் பேர் அமர் உண்கண்ணும்
நல்லேன் யான்நின்று நலத்தகை நம்பிய
சொல்லாட்டி நின்னொடு சால் ஆற்றுகிற்பார் யார்
(கலித்தொகை : முல்லைக் : 8:15-19)
என்ற வரிகளில் “நீ அகலமான அல்குலையும், கண்களையும் தோள்களையும் கொண்டவள். நெற்றி, பாதம், இடை இவை சிறுத்துள்ளன. இங்ஙனம் மூன்றிடம் பருத்தும் மூன்றிடம் சிறுத்தும் காணப்படும் உன் வனப்புகண்டு காமனும் மலரம்பை எய்துவான்” என்பதன் மூலம் தலைவன் தலைவியின் உருயொப்புமை அறியமுடிகிறது.
நிறை
நிறை – அடக்கம். மிக முக்கியமான ஒப்புமைகளில் ஒன்று நிறையொப்புமை. இதைக் குறிஞ்சிக்கலி பாடல் விளக்குகின்றது.
கண்ணியன் வில்லன் வரும் என்னை நோக்குபு
முன்னத்தின் காட்டுதல் அல்லது தான் உற்ற நோய்
உரைக்கல்லான் பெயரும்மன் பல்நாளும்
பாயல்பெறே என் படர் கூர்ந்து
(கலித்தொகை : குறிஞ்சிக்கலி : 1:3-6)
என்ற வரிகளின் மூலம் சிறப்பாகத் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்த தலைவனின் கையிலே வில்லம்பும் இருந்தது. என்னிடம் ஏதோ கூற எண்ணினான். எனினும் ஒன்றும் கூறாமலே திரும்பிவிட்டான். காமநோயால் துன்புறுவான் போலக் காணப்பட்டான். எனினும் தன் நோய் எதுவென்று என்னிடம் கூறத் தயங்கித் தயங்கி நிற்கின்றான். இவ்வாறு பல நாட்கள் அவன் வருவதும், பார்ப்பதும், திரும்புவதுமாக இருந்தான். நான் கேட்கலாம் என்றாலோ பெண்கள் அவ்வாறு கேட்பது முறையன்று எனத் தோழிக் கூறுவதன் மூலம் கலித்தொகையில் நிறையொப்புமை எவ்வாறு இடம் பெற்றுள்ளது என்பது தெளிவாகின்றது.
திரு
திரு – செல்வம் உள்ளத்து மலர்ச்சி திருயொப்புமைப் பற்றி நெய்தற்கலி பாடல் விளக்குகின்றது.
நெய்தல் நெறிக்கவும் வல்லன்; நெடுமென் தோள்
பொய்கரும்பு ஈர்க்கவும் வல்லன் இள முலைமேல்
தொய்யில் எழுதவும் வல்லன் தன் கையில்
சிலை வல்லான் போலும் நெறிவினான் நல்ல
பல வல்லன் தோள் ஆள்பவன்
(கலித்தொகை : நெய்தல்கலி : 26:31-35)
என்ற வரிகளின் மூலம் “அவன் நெய்தற் பூவைப் பறித்து மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவிக்க எண்ணுவான். நெய்தற் பூவின் புறவிதழ்கள் என் மேனியைத் துன்புறுத்துமோ என எண்ணி அவற்றை நீக்கிய பின்னரே மாலைதொடுத்து அணிவிப்பான். என் மென்மையான தோளில் காமன் வில்லால் கரும்பை எழுதவும் செய்வான். தொய்யில் குழம்பு கொண்டு கொடிகளையும் வரைவான். இவ்வாறு செய்வதில் வல்லமை கொண்டவன் வந்து என்னைத் தழுவினால் என் மனம் தளிர்த்து மகிழாதா?” எனத் தலைவி குறிப்பிடுவதைக் கொண்டு தலைவனின் திருயொப்புமை அறியமுடிகிறது.
முடிவுரை
நல்லகுடியில் பிறத்தல், அக்குடிக்கேற்ற ஒழுக்கம் உடையவராக இருத்தல், குடும்பம் நடத்தும் பாங்கு ஒத்திருத்தல், வயதுப்பொருத்தம், தோற்றப்பொலிவு, பாலியல் அமைவு ஒத்திருத்தல், கட்டொழுங்கு அமைவு, அருளுணர்வு, புரிந்துகொள்ளுதல், செல்வ நிலை என்ற பத்து வகையும் தொல்காப்பியர் கூறும் பொருத்தங்கள் ஆகும். இன்றைக்கு பேர் பொருத்தமும் இராசிப் பொருத்தமும் மட்டுமே பார்ப்பதால் தான் மணவாழ்வு விரைவில் மணமுறிவுக்கு வழிவகுக்கின்றன.
ஆய்வுக்கு உதவிய நூல்கள்
- இளம்பூரணர் உரை, தொல்காப்பியம் பொருளதிகாரம், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்-608001,மு.ப.21 சூன்-2009.
- இரா.மணியன் கலித்தொகை விளக்கமும் திறனாய்வும், கவின்மதி பதிப்பகம், சென்னை-28, மு.ப. டிசம்பர; 2010.
- ச.சாம்பசிவனார், தொல்காப்பியம் பொருளதிகாரம், கருத்துக்கோவை, வளவன் வெளியீடு, மதுரை.
4. தமிழண்ணல், தொல்காப்பியர் விளக்கும் திருமணப் பொருத்தம், தமிழ்ப்பேராயம், திரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம்,காட்டங்குளத்தூர் – 603203, மு.ப.2012.
ப. சுதா
முனைவர் பட்ட ஆய்வாளர்
இலக்கியத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர் -10
மின்னஞ்சல்: kalvitamil@yahoo.com
Leave a Reply