(ஆவணி 08, 2045 / ஆகத்து 24, 2014 இதழின் தொடர்ச்சி)

21. கள்ளி

இதன் முள் பிளவு பட்டதாய் இருக்கும். இதன் காய் வெடிக்கும் பொழுது மிகுந்த ஒலி உண்டாகும்.

 ‘கவைமுள் கள்ளிக் காய்விடு கடுநொடி

வெண்பூதியார்: குறுந்தொகை:174:2

(நொடி – ஒலி)

கள்ளிமரத்தின் காய்கள் வெயிலில் வெடிக்கும்.

 ‘பொரிகால் கள்ளி விரிகாய் அம்கவட்டு

மருத்துவன் சீத்தலைச் சாத்தனார்: குறுந்தொகை: 154:5

 22. காஞ்சி

காஞ்சி மரம் மெல்லிய கிளைகளை உடையது. பூக்கள் பசிய  பூந்தாதுக்கள் உடையனவாய் நறுமணம் கமழும். பயற்றங் கொத்துகள் போல பூங்கொத்துகள் இருக்கும்.

 ‘பயறுபோல் இணர பைந்தாது படீஇயர்

(உழவர் வாங்கிய) கமழ்பூ மென் கிளைக்

காஞ்சி

ஓரம்போகியார்: குறுந்தொகை: 10:2-4 22.

 23. காந்தள் (கோடல்,தோன்றி)

காந்தள் பூக்கள் குருதி போன்று சிவப்பாகப்  பூக்கும்; கொத்தாக இருக்கும்.

குருதிப் பூவின  இலைக் காந்தள்

திப்புத் தோளார் : குறுந்தொகை: 1-14

 காந்தள்,மலையைச் சுற்றி வேலிபோல் இயற்கையாய் வளரும்.

 காந்தள் வேலி ஓங்குமலை

கிள்ளி மங்கலங்கிழார்: குறுந்தொகை: 76:1

காந்தள் வேலி

குறுந்தொகை: 100:3

 காந்தள் மலர் மலைமுழுவதும் மணம் வீசும் அளவு நறுமணம் மிக்கது.

 சிலம்புடன் கமழும் அலங்குலை

ஆசிரியர் பெருங்கண்ணனார்: குறுந்தொகை:239:4

 

காந்தள் மலர் பல கோடுகள் உடைய பாம்பின் படம் சுருங்குவது போன்று இதழ் குவிந்து காட்சியளிக்கும்.(கொண்டல் காற்றில் உதிர்ந்து விழும் இயல்புடையது.)

 பல்வரிப்

பாம்புபை அவிழ்ந்தது போலக் கூம்பிக்

கொண்டலின் தொலைந்த ஒண்செங் காந்தள்

மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்:குறுந்தொகை: 185:4-6

(செங்)காந்தள்  ஒளி மிகுந்ததாயும் இதன்  குவிந்தும் காணப்பெறும்.  சேவலின் கொண்டையைப் போல் இருக்கும்.

 குவிஇணர்த் தோன்றி ஒண்பூ அன்ன

தொகுசெந் நெற்றிக் கணங்கொள்

மதுரைக் கண்ணனார்:குறுந்தொகை: 107:1-2

 24.   காயாம்

காயாம் கார்ப்பருவத்தில் மயிலின் கழுத்தைப்போல் பொலிவுடன் விளங்கும்; முதுவேனில் காலத்தில் வெப்பத்தால் வாடும்.

 ‘புல்லென்காயாப்  பூக்கெழுபெருஞ்சினை

மென்மயில்எருத்தில்தோன்றும்

ஔவையார்: குறுந்தொகை: 183:5-6

(எருத்து-கழுத்து)

25. குரவம்

குரவம் வேனிற்காலத்தில் பூக்கும் ; பல பூக்களாய் மலரும்

 ‘பல்வீபட்டபசுநனைக் குரவம்

மிளைகிழார் நல்வேட்டனார்: குறுந்தொகை: 341:1

 26. குவளை

அகலமும் ஆழமும் உள்ள சுனைகளில் குவளை மலரும்

 ‘அகல்வாய்குண்டுசுனைக்

குவளை

 மோசிகீரனார்: குறுந்தொகை: 59:2-3

 குவளையின்தாள்குறுகியது.

                                                             குவளைக்

 குறுந்தாள்

 

 பாண்டியன் பன்னாடுதந்தான்: குறுந்தொகை: 270:6-7

 பெண்களின் அழகிய கண்கள் போன்று குவளைமலர் இருக்கும்.

 ‘குவளை அம்கண்

கபிலர்: குறுந்தொகை:13:5

 குவளையின் இதழ்கள் மணம் மிக்கது.

 ‘நாறிதழ்க்குவளை

சிறைக்குடி ஆந்தையார்: குறுந்தொகை:62:2

 குவளையின் பூவிதழ் கரியநிறமாய் இருக்கும்.

 ‘மாயிதழ்க்குவளை

பேயார்: குறுந்தொகை: 339:6

 27. குறிஞ்சி

குறிஞ்சியின் கொம்பு கரியநிறத்தில் இருக்கும்.

 

கருங்கோல்குறிஞ்சிப் பூ

தேவகுலத்தார்: குறுந்தொகை:3:3

 28. குளவி

காட்டுமல்லிகை மிகுந்த மணம் உடையது.

 ‘குளவிநாறும்

மோசிகீரனார்: குறுந்தொகை: 59:3

  29.கூதாளம்

கூதளங்கொடியின்தாள்குறுகியதாய்இருக்கும்.

 ‘குறுந்தாள் கூதள்

பரணர்: குறுந்தொகை: 60:1

 வெண் கூதாளத்துமலர்கள் உள்துளை யுடையன.

‘வெண்கூதாளத்து அம்தூம்பு புதுமலர்

நாகம்போத்தனார்: குறுந்தொகை: 282:6

 

30. கொன்றை

கொன்றைப் பூங்கொத்துகள் பொன்நிறத்தில் இருக்கும்.(எனவே, கொன்றைமரத்தின் தழையிடையே நீண்ட பூங்கொத்துகள் தெரிவது, பெண்கள் கூந்தல் இடையிடையே பொன் அணிகலன்களைச் சூடியதுபோல் இருக்கும்.)

 ‘பொன்செய்புனையிழைகட்டியமகளிர்

கதுப்பில்தோன்றும்புதுப் பூங்கொன்றை

ஓதலாந்தையார்: குறுந்தொகை: 21:2-3

 கொன்றை மரத்தின் அடிமரம் பருத்து இருக்கும்.

‘தடவுநிலைக்கொன்றை

கோவத்தனார்: குறுந்தொகை: 66:1

 கொன்றைப்பூ தவளையின் வாய்போன்று உள்ள,(சதங்கை யிலுள்ள) பொற்காசுபோல இருக்கும்.

 ‘தவளைவாயபொலஞ்செய்கிண்கிணிக்

காசினன்ன  போதீன் கொன்றை

இளங்கீரந்தையார்: குறுந்தொகை: 148:2-3

(கிண்கிணி-சதங்கை)

கார்காலத்தில் கொன்றைப்பூக்கள் பசுமையாக விளங்கும்.

 ‘கொன்றைஅம் பசும் வீ  

ஔவையார்: குறுந்தொகை: 183:1

 கொன்றையின் பூக்கள் பொலிவுமிகுந்து இருக்கும்.

‘கொன்றைஒள் வீ

பேயனார்: குறுந்தொகை:233:2

 31. கோங்கு

கோங்கு மலரும் பருவத்தில் இலைகள் முழுமையும் உதிர்ந்துஇருக்கும். அரும்புகள் மார்நுனிபோன்று அழகாய்  மெல்லியனவாய்  இருக்கும்.

 ‘இலையில்அம்சினைஇனவண்டார்ப்ப

முலையேர்மென்முகைஅவிழ்ந்த கோங்கு

பார்காப்பார்: குறுந்தொகை: 254:1-2

 32. சந்தனம்

சந்தனம் மணம் மிக்கது

 ‘நறையகில்

பேயார்: குறுந்தொகை: 339:1

  33. சேம்பு

சேம்பின் இலை யானையின் செவிபோல் பெரியதாய் இருக்கும்.

 ‘சேம்பின்அலங்கல்வள்ளிலை

பெருங்களிற்றுச்செவியின்மான

கிள்ளிமங்கலங்கிழார்: குறுந்தொகை: 76:3-4

 34. ஞாழல்

ஞாழலினது பூக்கள் வெண்சிறுகடுகைப்போன்று சிறியனவாய் இருக்கும்.

 ‘ஐயவிஅன்னசிறுவீ ஞாழல்

குன்றியனார்: குறுந்தொகை: 50:1

ஞாழல்பசுமையானஅரும்புகளையும்பலகொம்புகளையும்உடையது.

 ‘பசுநனைஞாழல் பல்சினை

வடமவண்ணக்கனார்: குறுந்தொகை: 81:2

 ஞாழலின் பூக்கள் சிறியனவாய் இருக்கும்.

சிறுவீ ஞாழல்

பரணர்:குறுந்தொகை:328:1

 ஞாழல் பூக்கள் நறுமணம்மிக்கதாய் இருக்கும்

 ‘நறுவீ ஞாழல்

அம்மூவனார்: குறுந்தொகை: 318:2

 அரும்புகள்முதிர்ந்தஞாழலின்  முட்டைபோன்றுதிரண்டுஇருக்கும்.

 ‘நனைமுதிர் ஞாழல் சினைமருள் திரள்வீ  ’

அம்மூவனார்: குறுந்தொகை: 397:1

 35. ஞெமை

உயரப் பறக்கும் பருந்துகள் அமரும்வகையில் ஞெமை மரம் உயரமாக இருக்கும்..

         ஞெமைத்தலை

ஊனசைஇ ஒருபருந்து இருக்கும்

 தேவனார்: குறுந்தொகை: 285:6

 36. தடாமரம்

தடாமரத்தின் கிளைகள் உயர்ந்து இருக்கும்.

 ‘தடவின்ஓங்கு சினை

 மதுரைமருதனிளநாகனார்:  குறுந்தொகை 160:3

 37. தாமரை

தாமரைமலர்பலஇதழ்களைஉடையது.

 ‘பல்லிதழ்

நரிவெரூஉத்தலையார்:குறுந்தொகை:5:5

 ஆழமான நீர்நிலையில் தோன்றும் தாமரைமலரின்  தாது சிறப்பானது

‘குண்டுநீர்த்தாமரைக்கொங்கு

சிறைக்குடிஆந்தையார்: குறுந்தொகை: 300:3

 38. தாழம்பூ

தாழம்பூவின் மடலுக்கு ஈர்வாள்(இரம்பம்) போன்ற விளிம்பு இருக்கும்.

 ‘வாள்போல் வாயகொடுமடல் தாழை

மாலைமாறனார்: குறுந்தொகை: 245:3

 39. தாழை(கைதை)

தாழையின் பூ வௌ்ளையாய் இருக்கும்

 ‘வௌ்வீத் தாழை

அம்மூவனார்: குறுந்தொகை: 163:4

(வீ- பூ)

 ‘தாழைவெண் பூ

மதுரை எழுத்தாளனார் சேந்தம் பூதனார்: குறுந்தொகை:226:5

 தாழையின் இலை முள்ளுடையது.

‘ முள்ளிலைத்

தடவுநிலைத் தாழை

வெள்ளூர்கிழார் மகனார் வெண்பூதியார்: குறுந்தொகை: 219 :5-6

 தாழைக்கு விழுதுகள் உண்டு; தாழையின் அரும்பு மடல் அவிழ்ந்து விரிந்து மலருவது, அன்னம் தன் சிறகைக் கோதுமிடத்து விரிகின்ற இறகுகள்போல இருக்கும்.

 ‘வீழ்தாழ் தாழை ஊழுறு கொழுமுகை

 குருகுஉளர் இறகின் விரிபுதோடு அவிழும்  

செய்தி வள்ளுவர் பெருஞ்சாத்தனார்: குறுந்தொகை: 228:1-2

(வீழ்-விழுது; ஊழுறு-மலர்கள்விரிகின்ற; குருகு-அன்னம்; உளர்தல்-அலகாலேசிறகினைக்கோதுதல்)

குளிர்ந்த நீர்நிலைகளில்/கரையோரங்களில், கைதை(தாழை) வளரும்.

 ‘கடைகரைத்தாழை

அம்மூவனார்: குறுந்தொகை: 303:2

 ‘கைதைஅம் தண்புனல்

கணக்காயர்தத்தனார்:  குறுந்தொகை: 304:7

‘தாழைதைஇயதயங்குதிரைக்கொடுங் கழி

அண்டர்மகன்குறுவழி : குறுந்தொகை : 345:5

 40. தாளியறுகு

தாளிப்புல்லின் கொடி குளிர்ச்சியாய் இருக்கும்; இதனைப் பசுக்கள் உண்ணும்.

 ‘தாளித் தண்பவர் நாள் ஆமேயும்

காவன்முல்லைப்பூதனார்: குறுந்தொகை :104:3

 

 

(தொடரும்)