சங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் (2) – இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல 127, பங்குனி 21, 2047 / ஏப்பிரல் 03, 2015 தொடர்ச்சி
சங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும்
2
நோக்கம்
இன்றைய அறிவியல் சொற்கள் யாவும் சங்க இலக்கியங்களில் உள்ளன என நான் உரைக்கவில்லை. பின்வரும் அடிப்படையில் சங்கச் சொற்களைப் பயன்பாடுள்ளனவாக ஆக்க வேண்டும் என்பதே நோக்கம்.
- இன்றைக்குக் கையாளும் அதே பொருள் உள்ள சங்கச் சொற்களை நாம் அவ்வாறே பயன்படுத்த வேண்டும். சான்றாகப் பூக்காத தாவரம் என நாம் சொல்கிறோம். அதே பொருளில் கோளி என்னும் சொல் சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதால் அதனை நாம் மீளவும் பயன்படுத்த வேண்டும். இதைப்போன்று உள்ள சொற்களை அறிந்து உணர்த்தல்.
- நோக்குவது குறித்து நோக்கி என்னும் சொல் சங்கக்காலத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளது. அதே சொல்லை நாம் ஒன்றை நோக்குவதற்குரிய கருவிக்குப் பயன்படுத்துகின்றோம். எனவே, இவ்வாறு சங்கக்காலத்தில் கையாளப்பட்ட சொற்களை வேறு நேர்வில் மாற்றமின்றிப் பயன்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. அவற்றை ஆராய்ந்து அறிதல்.
- வெருள் என்பது சங்கக்காலத்தில் அச்சத்தை உணர்த்தும் சொல்லாக உள்ளது. அச்சத்தால் ஏற்படும் நோய்க்கு இதன் அடிப்படையில் வெருளி என மாற்றி நாம் கையாளலாம். இவ்வாறு சங்கச் சொற்களை விகுதி சேர்த்தோ வேறுவகையிலோ மாற்றம் உறச் செய்து மீள் சொல்லாக்கம் காணல்.
- சங்கக்காலத்தில் பொதுவாக உள்ள சொற்களைப் பயன்படுத்தி அவ்வகையிலான அனைத்துச் சொற்களையும் காணுதல். சான்றாக இயல் என்பது சங்கக்காலச் சொல்லாகும். இயல் என்னும் சொல்லின் அடிப்படையில் கருவியல், உருவியல், என்பன போன்று நம்மால் பல் வேறு சொற்களை உருவாக்க முடிகின்றது. இவ்வாறு வகைப்படுத்தும் சொற்களை அடிப்படையாகக் கொண்டு புதிய கலைச் சொற்களைக் காணுதல்.
- நேர் சொல்லாகவோ, முன் அல்லது பின் இணைப்பின் மூலம் கூட்டுச் சொல்லின் பகுதியாக மாற்றியோ, அம் சேர்த்தல் முதலான சொல்லாக்க விதிகளுக்கு இணங்க மாற்றமுறச் செய்தோ, சங்கச் சொற்களைப் பொருள் மாறுபாட்டுடன் புதிய பொருளாகப் பயன்படுத்தியோ எண்ணற்றக் கலைச்சொற்களை உருவாக்க இயலும்
அடிப்படைச் சொற்களுக்கே முதன்மை
அறிவியல் நூல்களைப் படிக்கப் படிக்கத்தான் சங்கச் சொற்களின் மீளாக்கம் குறித்து அறிய இயலும். கற்றது கைவிரல் நுனி அளவே உள்ள பொழுது நம்மால் முழுமையாக அனைத்துக் கலைச்சொற்களையும் கண்டறிய இயலாது. எனவே, அறிந்த அளவில் உள்ள கலைச் சொற்களில், அடிப்படைச் சொற்களை மட்டும் இவ்வாய்வு வெளிப்படுத்துகிறது. சான்றாக நிணம் என்னும் சங்கச் சொல்லை நாம் கொலசுட்டிரால் / cholesterol என்பதற்காகப் பயன்படுத்தலாம் எனில் நிணம் என வரக்கூடிய எண்ணற்றக் கலைச்சொற்களின் பட்டியலையும் அளிக்கவில்லை. அவ்வாறு உருவாக்க முடியும் என்பதை வழிகாட்டுவதற்காகச் சில சொற்கள் மட்டும் அளிக்கப்பட்டு இருக்கும். படைப்பாளர்கள் இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் அவற்றின் அடிஒற்றிய அனைத்துக் கலைச்சொற்களும் வெளிப்படும்.
சங்கச் சொற்கள்அடிப்படையிலான கலைச் சொற்கள் அந்த உணர்வு இன்றி இப்பொழுதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கவாஅன், துருத்தி, துளை, பதம் என்பன போன்று எண்ணற்ற சொற்களை எடுத்துக்காட்டாகக் கூறலாம். அவற்றைப் பெரும்பாலும் தவிர்த்துப் புதியன மட்டுமே ஆய்வில் தெரிந்துரைக்கப்பட்டுள்ளன. அதேபோல் அறிவியல் நூல்களில் ஒலி பெயர்ப்பில் கையாளப்படும் சொற்களுக்கும் தவறான பொருள்களில் கையாளப்படும் சொற்களுக்கும் முதன்மை அளித்து அவற்றிற்கான கலைச் சொற்கள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளன. அனைத்தையும் அளிப்பதாயின் படைப்பளவு கூடும் என்பதால் இவ்வரையறைக்குள் ஆய்வு அமைக்கப்பட்டுள்ளது.
மிகவும் அருமை ஐயா!
ஆனால் துருத்தி, துளை, பதம் – தெரியும்; ‘கவாஅன்’ என்று குறிப்பிட்டிருக்கிறீர்களே, அஃது என்ன ஐயா? ஒருவேளை, ‘கவின்’ என அங்கே வர வேண்டுமோ?