சங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் (3) – இலக்குவனார் திருவள்ளுவன்
(சங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் (2) – தொடர்ச்சி)
சங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் (3)
அகச்சிக்கல்களும் புறச்சிக்கல்களும்
மொழி பெயர்ப்பில் நாட்டம் உடையோர் குறைவாகவும் சொல்லாக்கத்தில் ஈடுபாடு காட்டுநர்கள் அவர்களில் குறைவாகவும் உள்ளனர். அயலெழுத்தும் அயற்சொல்லும் இன்றி எழுத வேண்டும் என்னும் உணர்வும் தமிழ்வேட்பும் அற்ற தமிழ் முனைவர்களைத்தான் இக்காலக்கல்வி முறை உருவாக்கி உள்ளது. பிழையின்றி எழுதுநரையும் காண இயலவில்லை. எனவே, ஆய்வுத் துணைவரை நாடுவதில் பெரும் சிக்கல் எழுந்தது; சிலரைக்கருதிப்பார்த்து, எண்ணஓட்டமும் கருத்தோட்டமும் ஆய்வுநோக்கிற்கு ஒத்து வராமையால் கூடியவரை உடனிருந்து ஒத்துழைப்பவரையே நாடும் நிலைவந்தது. கணியச்சிலும் சிக்கல். முதலில் அச்சிட்டவர் சிந்து எழுத்துருவிலும் அடுத்து வந்தவர்கள் சிரீலிபியிலும் கணியச்சிட்டனர். நான் சன்டாமி என்னும் எழுத்துருவில் கணியச்சிட்டேன். செம்மொழிநிறுவனத்தில் இருந்து ஏரியல்யூனிகோடு என்னும் சீருருவில் கேட்ட மடல் ஆய்வு முடியும் தறுவாயில் வந்தது. எழுத்துரு மாற்றியின் மூலம் இச்சீருருவிற்குக் கொணர முற்பட்ட பொழுது பெருஞ்சிக்கல் எழுந்தது. நெடில்எழுத்துகளும் எகர ஒகரங்களும் ஒற்றெழுத்துகளும் சிதைந்து வந்தன. தொடக்கத்திலயே தெரிவித்திருப்பின் அதற்கேற்றவாறு தொடக்கத்திலிருந்தே கணியச்சிட்டு இருக்க முடியும். கணிணியிலும் குலைவு(virus) ஊறு நேர்ந்து மேலும் சிக்கல். புதிய கணிணி வாங்கி சிதைந்து வந்த இடங்களை மீளக் கணியச்சு இட வேண்டி வந்தது. இவ்வாறான புறச்சிக்கல்கள் ஆய்வின் ஓட்டத்தைத் தடைசெய்வனவாக அமைந்தன. அகச்சிக்கல்கள் மறுபுறம் ஆய்வின் சீரோட்டத்திற்கு அறைகூவலாக மாறின. கலைச்சொல்லாக்கம் என்பது இலக்கியச் சொல் விளக்கமாக அமைவதில்லை. அறிவியல் சொற்களை அறிந்தால்தான் அப்பொருளை உணர்த்தும் சங்கச்சொற்களை அடையாளம் காண இயலும். சில சொற்களுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையாகப்பொருள் விளக்கம் அளித்துள்ளனர். எது சரி என்பது புரியாத வகையில் அவை அமைந்தன. பல்வேறு பொருள் அமைந்துள்ள சொற்களில் ஒவ்வொருவர் ஒவ்வொன்றிற்கு முதன்மை அளித்து விளக்கம் அளித்துள்ளனர். இணையத் தேடல் மூலம் தொடர்புடைய அனைத்தையும் அறிந்து உணர்ந்து கொள்ளக் காலம் மிகுதியாகியது. பல சொற்கள் அகராதிகளில் காணப்படுவதில்லை. அதே நேரம் வகைமைச்சொற்கள் என வகுத்து அளித்துள்ள கலைச் சொற்களில் கூடியவரை அவ்வகைப்பாட்டில் உள்ள அனைத்துச் சொற்களையும் தருவதே சிறப்பு என்பதே நோக்கமாகக் கொள்ளப்பட்டது. தேடித் தேடித் தேடிப் பார்த்துக் கலைச் சொற்கள் தரப்பட்டுள்ளன. இங்குள்ள வகைமைச் சொற்களை எந்த ஓர் அகராதியிலும் தொகுப்பாகக்காண இயலாது. சிலவோ பலவோ அகராதிகளில் காண இயலும். ஆனால், ஒட்டு மொத்தமாகக் காண இயலாது. எனவே, பிறரால் சரி பார்க்கவும் கடினமான செயலாகும். ஆதலால், சரிபார்த்து வெளியிடுவதே சிறப்பு என்பது உணரப்பட்டது. ஆனால், ஒரு மணி நேரம் எழுதியதைச் சரி பார்க்க ஒரு கிழமைக்கு மேல் தேவைப்பட்டது. எனினும் தவறான பொருள் விளக்கம் அமைந்து விடக்கூடாது என்பதற்காகக் கூடுதல் கருத்து செலுத்தப்பட்டது. ஒரே சொல்லுக்கு அமையக்கூடிய வெவ்வேறு பொருளின்அடிப்படையில் மாறுபட்டக்கருத்தைக் கூறலாமே தவிரப் பொதுவாக அனைவரும் ஏற்கத்தக்கச் செவ்வையான பொருள்களே தரப்பட்டுள்ளன.
அடிப்படைக் கொள்கைகள்
எனவே இவ்வாய்வின் அடிப்படைக் கொள்கைகளாகப் பின்வருவன அமைகின்றன.
௧.) எளிமை
௨.) செம்மை
௩.) தூய்மை
எனவே, அயலெழுத்தோ அயற்சொல்லோ இடம் பெறாதவகையில் சங்கச் சொற்களைப் பயன்படுத்தி இயன்ற அளவு சொல்வளத்தை வெளிப்படுத்தி உள்ளது. அயலெழுத்துகளை நீக்கித் தமிழிலேயே குறிப்பிடும் பொழுது கேட்பதற்கு இனிமையாக இல்லை என்பர். ஆம்! அயற் சொற்கள் நமக்கு இனிமை தராதுதான். அதை உணர அதனை நம் வரிவடிவில் எழுதவேண்டும். அப்பொழுதுதான் உரிய ஒலி பெயர்ப்பு வடித்திற்கு மாற்றாகத் தமிழ்ச் சொல்லைப் படைக்க வேண்டும் என்ற உணர்வு நமக்கு வரும். இனிமையின்மைக்குக் காரணம் அமிழ்தினிமினிய அன்னைத் தமிழன்று. அயலொலியே என்பதை உணர்ந்து அருந்தமிழிலேயே அனைத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என்ற உணர்வு நமக்கு வேண்டும். அதற்கு இவ்வாய்வும் துணைபுரியும்.
ஆய்வின் பயன்
இலக்கியங்களிலும் பழமொழிகளிலும் உள்ள சொற்கள் அடிப்படையில் கலைச்சொல் காண்பது கலைச்சொல் பெருக்கத்திற்கு வழி கோலும். ஆனால், இவ்வாய்வு, சங்கஇலக்கியச் சொற்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டதே. சங்கச் சொற்களின் தொடர்ச்சியாகப் பல்வேறு சொல்லாக்க வளர்ச்சிகள் காலந்தோறும் உருவாகிப் பிற இலக்கியங்களில் உள்ளன. அவற்றையும் நாம் தொகுத்தால்தான் சொல்லாக்கத் தொகுப்பு முழுமையடையும். பல ஆய்வாளர்களைக் கொண்டு காலந்தோறும் உள்ள இலக்கியங்களின் அடிப்படையில் கலைச்சொல் தொகுப்பை ஒருங்கிணைத்துக் கண்டறிந்தால்தான் நம்மால் உண்மையான சொல்லாக்கத் தொகுப்பை உருவாக்க இயலும். அத்தகைய ஆய்விற்கு இவ்வாய்வேடு தக்க துணையாக இருக்கும்.
தன்னம்பிக்கை தரும்
ஒரே சொல்லையே பல பொருள்களில் பயன்படுத்தும் வறட்சிப் போக்கினை மாற்ற இவ்வாய்வு துணை நிற்கும். நம்மிடையே ஒவ்வொரு சூழலுக்கும் ஏற்ற தனித்தனிக் கலைச் சொல் இருக்கும் பொழுது நாம் ஏன் ஒரே சொல்லையே பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை இவ்வாய்வு ஏற்படுத்தும். இதன் காரணமாகக் கலைச்சொல் வளம் விரிவடையும். சொல்பயன்பாட்டுக் குழப்பமும் நீங்கும். ஒரே சொல்லையே வெவ்வேறு இடங்களில் கையாளுவதா என எண்ணி அயற் சொற்களைப்பயன்படுத்துவோர் முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி இடும். நம்மிடம் இருக்கும் சொற்களையே பயன்படுத்தலாம் அல்லது அவற்றின் அடிப்படையில் புதுச்சொல் புனையலாம் என்னும் தன்னம்பிக்கையை இவ்வாய்வு ஏற்படுத்தும்.
மலைக்க வைக்கும் உழைப்பு ஐயா இது! வணங்குகிறேன்!
கட்டுரையின் தொடக்கத்திலும் முடிவிலும் புதுச் சொல் ஆக்கம் பற்றிக் குறிப்பிட்டுள்ளீர்கள். அது பற்றி மட்டும் ஒரு சிறு மாற்றுக் கருத்தைத் தெரிவிக்க விரும்புகிறேன் ஐயா!
புதுச் சொல் ஆக்க முனைவோர் எண்ணிக்கை எனக்கென்னவோ குறைவாக இருப்பதாய்த் தோன்றவில்லை ஐயா! இப்பொழுது இருப்போர் எண்ணிக்கையே கூடுதல் என்றுதான் தோன்றுகிறது. காரணம், புதிய கலைச்சொற்களை உருவாக்குகிறேன் பேர்வழி என்று தமிழைச் சிதைப்பவர்களே இங்குப் பெரும்பாலானோர். என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். நானாவது, ஏற்கெனவே இந்தப் பொருளுக்குப் பழைய இலக்கியங்களில் உரிய சொல் அளிக்கப்பட்டுள்ளதா என்பதை ஆராயாமலே புதிய சொல்லை உருவாக்கி விடும் தவற்றைத்தான் செய்கிறேன். ஆனால், பலர் சொல், வேர்ச் சொல் ஆகியவற்றின் உண்மைப் பொருளை அறியாமலே கன்னாபின்னாவெனச் சொற்களை இணைத்துப் புதுச் சொற்களை உருவாக்கி விடுகிறார்கள்.
இப்படிப்பட்ட தமிழ்ச் சிதைவுகள் நேராமலிருக்க வேண்டுமானால் தாங்கள், இராம.கி ஐயா, கண்ணபிரான் இரவிசங்கர் போன்ற தமிழ் அறிஞர்கள் மட்டுமே கலைச்சொல்லாக்கத்தில் ஈடுபட வேண்டும். அதுதான் தமிழுக்கு நல்லது!