சங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் – இலக்குவனார் திருவள்ளுவன்
சங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும்
1
அறிவியல்துறைகளில் தமிழில் எழுத வேண்டும் என்ற ஆர்வம் வளர்ந்து வருகிறது; எனினும் தக்கத் தமிழ்க்கலைச்சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற முனைப்பின்றி ஒலி பெயர்ப்புச் சொற்களையும் பிற மொழிச் சொற்களையுமே மிகுதியும் பயன்படுத்துகின்றனர். அதே நேரம், பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள், தனிப்பட்ட அமைப்புகள், தமிழ் ஆர்வலர்கள், இணையத்தளத்தினர், வலைப்பதிவர்கள் எனப் பல்வகையினரும் கலைச்சொற்கள் வெளியீட்டிலும் கலைச்சொல் ஆக்கத்திலும் ஈடுபட்டுவருவதும் வளர்ந்து வருகிறது. இருப்பினும் துறைதோறுமான கலைச்சொற்களஞ்சியங்கள் பெருக வேண்டி உள்ளன. கருத்துச் செறிவு மிக்க, சுருங்கிய வடிவிலான கலைச்சொற்களை ஆயிரக்கணக்கில் உருவாக்க வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். எல்லாம் தமிழில் முடியும் என்பது உண்மைதான் என்றாலும் அதற்குரிய சொற்களம் முழுமையாக அமையவில்லை. துறையறிவும் தமிழறிவும் இல்லாத பலர் ஆர்வத்தினால் தவறான சொல்லாக்கங்களையும் நூலேற்றி விடுகின்றனர். சிறு சிறு அறிவியல் கட்டுரைகளையும் தொடக்கநிலையினருக்கான நூல்களையும் தமிழில் எழுத முடிந்த அளவிற்கு முதுநிலைகளிலும் ஆய்வு நிலைகளிலும் எளிதில் எழுத இயலவில்லை. எனவே, எல்லா நிலைப் பயன்பாட்டிற்கு ஏற்ற கலைச் சொற்களைப் பெருக்குவதை நம் கடமையாகக் கொள்ள வேண்டும்.
கலைச்சொல் பெருக்கத்திற்குப் புதியன பற்றிச் சிந்தித்து நீளமான தொடர்களை அமைக்கும் நிலை மாற வேண்டும். இதற்கு நாம் பயன்பாட்டில் இருந்த சொற்களை நேரடியாகவும் அவை அடிப்படையிலான மறுஆக்கங்களாக உருவாக்கியும் பயன்படுத்த வேண்டும். பழஞ்சொற்களின் மீள் பயன்பாட்டிலும் மீளாக்கத்திலும் ஈடுபட்டு வரும் ஆர்வவலர்கள் இதில் முழுமையாக ஈடுபடவேண்டும்.
பணிப்பாங்கு
‘சங்க இலக்கியச் சொற்களில் இருந்து கலைச்சொற்களைத் தெரிவு செய்தலும் மீட்டுருவாக்கம் செய்தலும்’ இருக்கின்ற சொற்களைத் தொகுப்பது போன்ற எளிய பணியன்று. சங்க இலக்கியச் சொற்களையும் இக்காலக் கலைச் சொற்களையும் அறிந்து பொருந்துவனவற்றைத் தெரிவு செய்தலும் ஆங்கிலக் கலைச் சொற்களை அறிந்து பழந்தமிழ்ச் சொற்களில் பொருந்தி வருவனவற்றைக் கண்டறிதலும் சங்க இலக்கியச் சொற்களின் அடிப்படையில் புதிய கலைச் சொற்களை உருவாக்கலும் ஆகிய அரிய பணியாகும். தேடுதல், அறிதல், பொருத்தல், ஆக்கல் என்பனவே அடிப்படைப் பணிமுறைகள் ஆகும். அறிவியல் செய்திகளைப் படிக்கும் பொழுது கண்டறியும் கலைச் சொற்களுக்கேற்ற தமிழ்ச் சொற்கள் உள்ளனவா எனச் சங்க இலக்கியங்களில் தேடலும் சங்க இலக்கியங்களில் காணும் கலைச் சொற்களுக்கேற்ற சொற்கள் அறிவியல் கட்டுரைகள் அல்லது நூல்கள் அல்லது செய்திகளில் உள்ளனவா என்றும் தேடி அறிந்தபின் அவற்றைக் கருதிப்பார்க்கும் சொற்களுடன் பொருத்திப் பார்த்தலும் பொருந்திவரின் நேரடிச் சொற்களாக வராத பொழுது சங்கச் சொற்களின் அடிப்படையில் சொல்லாக்கம் காணுவதுமே பணிப்பாங்கு ஆகும். எனவே, மேலும் மேலும் படிக்கப் படிக்க நம்மால் புதிய சொற்களைக் கண்டறிய இயலும்.
சொற் தொகுப்பு மூலம்
சங்க இலக்கியச் சொற்களை நாமே அட்டவணைப்படுத்துவது என்பது தனி ஆய்வாக நேரத்தை வீணாக்கும். வெளிவந்துள்ள சங்க நூல்களின் இறுதியில் உள்ள பொருளடங்கலுக்கிணங்க ஆய்வுப் பணியை மேற்கொண்டால் போதிய சொல்வளத்தைத் திரட்ட இயலாது. எனவே, ஏற்கெனவே வெளிவந்த அட்டவணைப்படி கலைச் சொற்களைக் கண்டறிந்து இத்தகைய ஆய்வுப் பாதையில் சந்திக்க நேரும் அட்டவணையில் இல்லாத சொற்கள் இருப்பின் அவற்றையும் திரட்டுவதே எளிமை பயக்கும்.
எனவே ஏற்கெனவே உள்ள பின்வரும் நூல்களின் அடிப்படையில் ஆராய்ந்து கலைச் சொற்களாக மிளிரும் என எதிர் பார்க்கும் சொற்களை ஆராய்தலும் கண்டறிதலும் இப்பணியில் ஈடுபடுநர்க்கு எளிமை பயக்கும்.
1.சங்க இலக்கியச் சொல்லடைவு : முனைவர் பெ.மாதையன் : தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு -2007)
௨.Word index for Cankam Literature by Lehmann, Thomas: ஆசியவியல் நிறுவன வெளியீடு
- பாட்டும் தொகையும்
- சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் தொகுதி 1 : முனைவர் இரா.சாரங்கபாணி : தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு (மறு பதிப்பு 2001)
- சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் தொகுதி 2 : முனைவர் இரா.சாரங்கபாணி : தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு (மறு பதிப்பு 2003)
இவை போன்ற சொற்திரட்டு நூற்கள் அடிப்படையில் ஏதுவாக அமையும் சொற்கள் கண்டறியப்படுவது சொல்லாக்கப்பணியை எளிமையாக்கும். சொற்களின் மூலப் பொருளையும் அமைவுப் பொருளையும் கண்டறிய 2ஆம் 3 ஆம் நூல்களும் பெருஞ்சொல்லகராதி, நிகண்டுகள் முதலானவையும் துணைக் கருவிகளாக அமைந்துள்ளன. விக்கிபீடியா, கூகுள் தேடல் பொறி, ஐரோப்பிய அகராதி(Eudict.com/) இணையப்பல்கலைக்கழகம் தரும் அகராதிகள், தமிழ்ப்பேரகராதி,வின்சுலோவின் அகராதி எனப் பலவும் சொற்பொருள் விளக்கத்திற்கு நமக்குத் துணை நிற்கும்.
– இலக்குவனார் திருவள்ளுவன்
காலத்திற்கேற்ற இன்றியமையாக் கட்டுரை. ஆர்வக் கோளாறு காரணமாகப் பலரும் தவறான சொல் பரிந்துரைகளைத் தருவதையும், ஏற்கெனவே இருக்கிற கலைச்சொற்களுக்கு, அவை இருப்பது தெரியாமல் மாற்றாகப் புதிய கலைச்சொற்களைப் பரிந்துரைக்கும் வீண் வேலையில் ஈடுபடுவதையும் இணையம் எங்கும் காண முடிகிறது. இத்தகைய முயற்சிகளைக் காணும்பொழுது இளைஞர்களின் தமிழர்வம் குறித்துப் பெருமையும் பெருமகிழ்ச்சியும் ஏற்பட்டாலும், மறுபுறம் இதனால் ஏற்படக்கூடிய கெடுவிளைவுகள் குறித்த கவலையும் மேலிடுகிறது.
தமிழறிவு மிகுந்தவர்கள், சங்க இலக்கிய நூல்கள் பலவும் கற்றுணர்ந்தவர்கள் மட்டுமே செய்ய வேண்டிய, ஆனால் கட்டாயம் செய்ய வேண்டிய பணி இது. உரியவர்கள் கவனிக்க வேண்டுகிறேன்!