(சங்கக்காலச் சான்றோர்கள் ந. சஞ்சீவி 2. தொடர்ச்சி)

சங்கக்காலச் சான்றோர்கள்   3

1. கபிலர்  தொடர்ச்சி

 மாவும் பலாவும், வாழையும் வள்ளியும், ஆரமும் கமுகும், வேங்கையும் விரிமலர் வெட்சியும், தேனும் தினையும் பெருகிக் கிடக்கும் குறிஞ்சி நிலத்தில் இயற்கை அன்னையின் இன்பத் திருவிளையாடல் ஏற்றமுற்று விளங்குவது இயல்பேயன்றோ? அத்தகைய பல்வளமும் மல்கிக் கிடக்கும் பேறு பெற்று விளங்கியது மாவண்பாரியின் புகழ் பரப்பும் கலங்கரை விளக்கமாய்த் திகழ்ந்த பறம்பு மலை. பறம்பின் வளத்தைக் கபிலர் பாடியுள்ள திறத்தினை என்னென்று போற்றுவது! சங்கச் சான்றோர்க்கே உரிய செந்தமிழ் நடையில் இயற்கையின் இன்பவளம் கொழிக்கும் அம்மலையின் அழகையெல்லாம், கற்றவர் உளம் தழைக்க உடல் சிலிர்க்க-உயிர் இனிக்கப் பாடுகிறார் கபிலர்.

அப்பாடல்களைப் படிக்குந்தொறும் ‘வான் பொய்ப்பினும் தான் பொய்யா’து வளம் சுரக்கும் அருவிகளின் அழகும், அவ்வருவி நீரினும் இனிய சாயல் படைத்த பாரியின் அழகுத் தோற்றமும், ஆங்காங்கே வானுற வளர்ந்திருக்கும் ஆரமும் பலாவும், எங்கெங்கும் குறுந்தொடிக் குறத்தியர் வெறி கமழ் சந்தனக் கட்டைகளை வெந்தழலிலிட்டு எரித்தலால் எழும் நறும்புகையும், அப்புகை பஞ்சென முகிலெனப் பரந்து சென்று பொன் போலப் பூத்த சாரல் வேங்கையின் கிளை தொறும் தவழும் காட்சியும், நாடோறும் வண்டு பண் பாடி நறவருந்த மலர்ந்திருக்கும் மாயிதழ்க் குவளையும், ‘உழவர் உழாதன நான்கு பயனுடைத்து’, என உலகம் போற்ற முத்தனைய நெல்லுதிர்க்கும் கழைகளின் காடும், மலை பிளக்க வேர் வீழ்க்கும் வள்ளிக்கிழங்கும், கிளை தாங்காவண்ணம் பழம் ஊழ்க்கும் தீஞ்சுளைப் பலாவும், வரையெலாம் தேன் சொரிய வானுயர் கோடுதோறும் ஒரி பாய்ந்து விளங்கும் தேனடையும், அகல் விசும்பில் அள்ளித் தெளித்த அழகு நித்திலங்கள் போல ஒளிரும் வெள்ளி மீன்களனைய தண்ணறுஞ்சுனைகளும், அவற்றில் ‘கண் போல் மலர்ந்த காமர் சுனை மலரும்’ மனக்கண் முன் தோன்றி என்றும் கண்டிராத இன்ப உலகிற்கு நம்மை ஈர்த்துச் செல்லும் வல்லமை படைத்து விளங்குகின்றன.

குறிஞ்சியின் அழகெலாம் பருகிப் பண்பட்ட கபிலர் பெருமானார், கருவி வானம் கண் திறந்து பாரியின் கருணை போல மாரி பொழியும் காலத்து, அம்மலையின் இயற்கை அழகையெல்லாம் படமாக்கிக் காட்டும் பான்மையினை மேலும் மறத்தலும் எளிதோ! தேர்வண் பாரியின் தேன் சொரியும் மலையில் பரந்து கிடக்கும் பனிமலைச் சுனைகளில் பூத்துக் குலுங்கும் கிணை மகளின் இணை விழிகள் போன்ற மலர்களில் விண்ணின்று விழும் தண்ணமுதத் துளிகள் நிறைந்து நிற்கும் கண்ணுக்கினிய கார்காலம் காண்போர் நெஞ்சை இன்பக் கடலாக்கும். அந்நாளில் அண்ணல் பாரியின் ‘பேரிசை உருமொடு மாரி முற்றிய ’திணிநெடுங்குன்றம் ‘ஒள்ளிழைக் குறு மகள் பெருங்கவினெய்திய’ காட்சி போல இலங்கும். அது போழ்து நெடியோன் பாரியின் நீளிருங்குன்றம் சூழ்ந்திருக்கும் சோலையிலெல்லாம் தொடியணி மகளே போலத் தோகை விரித்து மயில் ஓகை கொண்டு ஆடும்; மலையினுச்சியெல்லாம் மந்தி பாய்ந்து ஒடும். அம்மந்தியும் கடுவனும் தின்று தின்று வெறுத்து எறியப் பல் வகை மரங்களும் பருவமின்றியும் பயனளிக்கும்.

இத்தகு பயன்கெழு பறம்பு மலையேயன்றி, அம்மலை வீழ் அருவிகள் பாய்ந்து வளமுறுத்தும் முரம்பு நிலமும், ‘பெயல் பிழைப்பு அறியா’ப் பெருமை படைத்துத் திகழும். அக்‘கொள்ளரு வியன் புலம்’ எங்கும் வரகும் தினையும் விளைந்து முதிர்ந்து வளைந்திருக்கும். இவற்றுடன் எள்ளின் இளங்காய்களும் முற்றிக் கறுத்திருக்கும். கொழுவிய அவரைக் கொடியில் கொத்துக்கொத்தாய்க் கோட்பதம் பெற்று விளர்க்காய்கள் விளங்கும். மேலும் காணுமிடமெல்லாம் களிற்றின் முகத்தில் கிடக்கும் புகர் போலத் தெறுழ்வீப்பூத்துக் குலுங்கும். அதனுடன் களிகொண்டு சிரிக்கும் காட்டுப் பூனையின் முள்ளனைய இளவெயிறு போன்ற ‘பாசிலை முல்லை’ முறுக்குடைந்து மணங்கமழும்.

பறம்பின் கோமான் மலையேயன்றி, அவனது பறம்பு நன்னாடும் ‘மைம்மீன் புகையினும் தூமம் தோன்றினும் தென்றிசை மருங்கின் வெள்ளியோடினும்’ வளம் சிறிதும் குன்றாது, வயலகமெல்லாம் புதர்ப்பூப் பூத்துக் குலுங்கும். வீட்டின் கண் கன்றை ஈன்ற அமர்க்கண் ஆமாவின் பெருங் கூட்டம் வயிறாரப் பசும்புல் மேய, பச்சைப் படாம் பரப்பியது போலப் பசும்புல் தரையும் விரிந்து கிடக்கும். இங்ஙன ம் கூர்வேல் பாரியின் குறிஞ்சி நிலமெல்லாம் இயற்கை அன்னை ஓயாது வரையும் எழிலோவியக் களஞ்சியத்தைத் தம் சொல்லோவியங்களால் உயிரோவியங்க ளாக்கிக் காட்டுகின்றார் கபிலர். அத்தகு பெருமைக்கு அண்ணல் பாரியின் அருமைநாடு இலக்காகியதற்கு உரிய காரணத்தையும் அவர் எடுத்துரைக்கும் திறத்தினை என்னென்று போற்றுவது!

கோஒல் செம்மையிற் சான்றார் பல்கிப்
பெயல்பிழைப்(பு) அறியாப் புன்புலத் ததுவே
…. ….. ….
ஆய்தொடி அரிவையர் தந்தை நாடே.’         (புறம். 117)

என்று மகிழ்வண் பாரியின் நாடு மாறாப் பசுமையுடன் விளங்கும் காரணத்தைக் கூறுகின்றார்,

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.’         (குறள், 559)

 

என்பதன்றோ வள்ளுவர் வாய் மொழி? அல்லவை செய்யா வேந்தன் அரசாளும் நாட்டில், ஆன்றவிந் தடங்கிய சான்றோர் பல்கி வாழ்வர். அன்னவர் வாழும் நாட்டிலேயே அறம் திறம்பாது இருக்கும். அறம் திறம்பா நாட்டிற்கே இயற்கை அன்னையும் ‘ஈன்ற குழவி முகங் கண்டு இரங்கித் தீம்பால் சுரப்பாள்’ போன்று கருணை காட்டுவள் என்பது கபிலர் பெருமானார் கருத்தாகும். சான்றோரின் பெருமையைச் சான்றோரே அறிவர்.

இவ்வாறு சான்றோர் பல்கிக் கிடந்த தண்பறம்பு நன்னாட்டின் தலைவனாய் விளங்கினான் வேள் பாரி. அவனது அருமந்த மலையின் அழகையெல்லாம் உணர்ந்து பாடிப் பண்பட்ட கபிலர்-அம்மலையாள் தலைவனது மனமாளும் பெருந்தகையார், அவன் அருமை பெருமைகளையெல்லாம் உணர்ந்து உணர்ந்து, உணர்வுக் கடலுள் ஆழ்ந்து ஆழ்ந்து, கண்ட கருத்துகளை எல்லாம் ஆழ்கடலின் கீழ்ச்சென்று வாரிக் கொணர்ந்த முத்துக் குவியல் போல அள்ளி வழங்கியுள்ள அருந் தமிழ்க் கவிதைகள் யாவும் தமிழ்த்தாய் பெற்ற தலை சிறந்த காணிக்கையாய் விளங்குவதில் வியப்புமுண்டோ?

(தொடரும்)

முனைவர் ந. சஞ்சீவி:

சங்கக்காலச் சான்றோர்கள்