(எங்கே போகிறோம்? – தவத்திரு குன்றக்குடி அடிகளார் 2. தொடர்ச்சி)

எங்கே போகிறோம்? – 3.

புறநானூற்றுக் காலத்திற்கு வந்தால், பன்னாட்டுத் தேசிய இளைஞனைப் போல விளங்குகின்றான் கணியன் பூங்குன்றன். ஓர் உலகம் என்னும் கருத்து அறிவியல் பூத்துக் குலுங்கிய பின்னர் மேற்றிசை நாட்டில் தோன்றிய கருத்து. இன்னும் சொல்லப் போனால் அச்சத்தில் தோன்றிய கருத்து. ஆனால் கணியன் பூங்குன்றன் அன்புதழுவிய நிலையில் ”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று பாடுகின்றான். “எல்லா ஊர்களும் என்னுடைய ஊர். எல்லாரும் என்னுடைய சுற்றத்தார்” என்ற கணியன் பூங்குன்றன் பிறந்த மண்ணில் இன்றைக்குச் சாதி, குலம் போன்ற வேற்றுமைகள் பிரிந்து வளர்ந்து வருகின்றன.

பழைய காலத்தில் சாதி வேற்றுமைகள் இருந்ததுண்டு. ஆனாலும் அந்த வேற்றுமைகள் நெகிழ்ந்து கொடுத்தன. இன்று அவை நெகிழ்ந்து கொடுக்காமல் இறுக்கமடைந்து வருகின்றன என்பதை அன்பு கூர்ந்து எண்ணிப் பாருங்கள். 2000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய திருவள்ளுவர்,

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

என்று சொன்னார். பிறப்பில் உயிர்களிடையே வேறுபாடு இல்லை. அனைவரும் சமம் என்று சொன்னார். அதையே வழி மொழிந்த அப்பரடிகள், “இந்த நாட்டில் சாதி இல்லை. சாதிகளைச் சொல்பவர்கள் சழக்கர்கள்” என்று மிகக் கடுமையாகச் சாடினார்.

எல்லோருக்கும் மேலாகப் புரட்சி பூத்த மண்ணாகிய பசும்பொன் மாவட்டத்துத் திருக்கோட்டியூர் மதில் மேல் ஏறி, பெருந்தகை ஒருவர் உபதேசித்தார். மந்திரத்தை எல்லா மக்களுக்கும் வாரிக் கொடுத்தார். அவருடைய ஆச்சாரியன் ”இந்த மந்திரத்தை நீ மற்றவர்களுக்குச் சொன்னதால் நீ நரகத்திற்குப் போவாய்” என்று சொன்னார். “கோடானுகோடிப் பேர் வைகுந்தத்துக்குப் போகும்போது நான் நரகத்திற்குப் போனால் என்ன?” என்று இராமாநுசர் கேட்டார். அந்த இராமாநுசர் பிறந்த மண்ணில் இன்றைக்குத் தன்னலமே வளர்ந்து வருகிறது. பிறர் நலம் குறைந்து வருகிறது. நாட்டுக்கு உழைத்தல் தவம் என்று பாரதி சொன்னானே, அந்தத் தவம் மீண்டும் தோன்ற வேண்டும். அந்தத் தவத்தை வளர்க்க வேண்டும். அந்தப் பெருமக்கள் காலத்தை வென்றார்களா?

எத்தனைச் சிறந்த கவிஞர்கள், தத்துவ ஞானிகள், மேதைகள் இந்த நாட்டில் தோன்றினார்கள்? அவர்கள் காலம் கடந்து நம்மால் பாராட்டப்படுகிறார்கள். போற்றப் படுகிறார்கள். ஆனால் அவர்களை நாம் பின்பற்றுகிறோமா? அவர்களுடைய வழித் தடத்தில் நாம் நடக்கின்றோமா? அவர்களுடைய சிந்தனைகளுக்கு-செயல்களுக்கு நாம் வெற்றி சேர்ப்பிக்கின்றோமா? என்றால் இல்லை.

இன்று நம்முடைய நாடு  மக்களாட்சி நாடு. மக்களாட்சி முறை நடைபெறுகின்ற நாடு. மக்களாட்சி என்பது அரசியல் கோட்பாடு மட்டுமல்ல. அஃது ஒரு வாழ்க்கை முறை. நண்பர்களுக்கிடையில், கணவன் மனைவிக்கிடையில், குடும்பச் சூழ்நிலையில், கடை வீதியில், ஊரில், நாட்டில், சட்டசபையில், பாராளு மன்றத்தில், எங்கும் மக்களாட்சி மரபுகள் செழித்து வளர் வேண்டும். சொல்லுவது சிலவாக இருக்கவேண்டும். பிறர் வாய் கேட்பது அதிகமாக இருக்கவேண்டும். மக்களாட்சி வடிவம் போதாது. மக்களாட்சி உணர்வு தேவை. மக்களாட்சி வாழ்க்கையின் மரபில் அலட்சியம் கூடாது.

ஓர் எளிய பாத்திரம் ‘கூனி’. அவளை அலட்சியப் படுத்தியதால் இராம காதையின் திசையே மாறிவிட்டது. சிறுவர்களை, சின்னஞ்சிறு மனிதர்களை அலட்சியப் படுத்துகிற மனப்போக்கு கூடாது. எல்லோருக்கும் மதிப்பு தரவேண்டும். பாராட்ட வேண்டும். போற்ற வேண்டும். அரசியல் என்பது ஒரு ஞானம், அஃது ஓர் அறிவியல், அரசியல் அறிவு மக்களாட்சி முறையில் வாழுகின்ற நாட்டு மக்களுக்குத் தவிர்க்க முடியாது. அரசியல் அறிவு, அரசியல் போராட்டங்கள், அரசியல் கட்சிகளுக்கே சொந்தமானவை அல்ல. நம்முடைய நாட்டில் அரசியலை, அரசியல் கட்சிகளிடமே ஒப்படைத்து விடுகிறார்கள்.

படித்தவர்கள், பேராசிரியர்கள், சிந்தனையாளர்கள், இவர்கள்கூட அரசியலைப் பற்றி பேச கூச்சப்படுகிறார்கள் -பயப்படுகிறார்கள். தப்பித் தவறி பேசிவிட்டால் கட்சிக் காரர்களுக்குக் கடுஞ்சினம் ஏற்படுகிறது. அன்பு கூர்ந்து மன்னித்துக் கொள்ளுங்கள். அரசியல் சிந்தனை இந்த நாட்டின் அனைத்து மக்களுக்கும் என்றைக்கு ஏற்படுகிறதோ, அன்றைக்கே மக்களாட்சி முறை வளரும்.

(தொடரும்)

தவத்திரு குன்றக்குடி அடிகளார்:

 எங்கே போகிறோம்?