தமிழ்மொழியின் சிறப்பே அகத்திணைதான் என்று சொல்லாமல் சொன்ன கபிலர்! – வ.சுப.மாணிக்கம்
தமிழ்மொழியின் சிறப்பே அகத்திணைதான்
என்று சொல்லாமல் சொன்ன கபிலர்!
தமிழ்த் தொல்லிலக்கணன் தொல்காப்பியன் அகத்திணையின் இயல்பு தெரிவிக்க, அகத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல் என இயல் நான்கு வகுத்துள்ளனன். புறத்திணையின் இயல்பு தெரிவிக்கவோ, அவனால் எழுதப்பட்ட இயல் ஒன்றே. சங்கப் பெருஞ்சான்றோர் கபிலர், ஆரியவரசன் பிரகதத்தனுக்குத் தமிழின் மேன்மையை அறிவுறுத்த விரும்பினார்; விரும்பியவர் அவனுக்கெனத் தாமே குறிஞ்சிப்பாட்டு ஒன்று இயற்றினார். இஃது ஓர் அகத்திணைப்பா. கபிலர் புறம் பாடாது அகம் பாடிய நோக்கம் என்ன? தமிழினத்தின் அறிவுச் சின்னம் அகத்திணைப் படைப்பு; தமிழ்மொழியின் தனி வீற்றிணை அயல் மொழியான் உணர வேண்டுமேல், அவனுக்கு முதலில் கற்பிக்க வேண்டும் பொருள் அகப்பாட்டே என்று அவர் உள்ளியிருப்பர். புலவர் பாராட்டிய புலவர் கபிலராதலின், வேற்று மொழியிற் பெறலரும் தமிழ்க் கூறுகளை, அறியவும் அறிவுறுத்தவும் வல்லார் அவரன்றி யார்?
“ஆரியவரசன் பிரகதத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குப் பாடியது” எனக் குறிஞ்சிப் பாட்டுக்குத் துறைக்குறிப்பு எழுதப்பட்டுள்ளது. “இந்நூல் என் நுதலிற்றோ எனின், தமிழ் நுதலியது” என்று இறையனார் அகப்பொருள் உரையாளர் குறிக்கின்றார். “ஒண் தீந்தமிழின் துறை வாய் நுழைந்தனையோ” என்று திருக்கோவை பாடும்.1 ஈண்டெல்லாம் தமிழ் என்னும் சொல் அகத்திணைக்கு மறுபெயராய் நிற்றல் காண்க. ஒரு மொழியின் பெயர் அம்மொழி பெற்றிருக்கும் இலக்கியப் பல்வகையுள் ஒருவகை இலக்கியத்திற்கு மட்டும் பெயராய்ச் சிறப்பித்து ஆட்சி செய்யப்படுமானால், அவ்விலக்கிய வகை அம்மொழியிலல்லது பிற எம்மொழியிலும் காண்பதற்கில்லை என்பதுதானே கருத்துரை. இதனால் உலக மொழிகளுள் தமிழ்மொழியின் ஒரு தனிச்சிறப்பும், தமிழிலக்கிய வளத்துள் அகத்திணையின் முதற்சிறப்பும் விளங்கித் தோன்றும்.
- ஒண்தீந் தமிழின் துறை – அகத்திணையின் துறை என்பது பொருள்.
அகமும் புறமும் தமிழின் துறைகளாவன என்று கோவையுரையாசிரியர் சொல்வது பொருத்தமில்லை. அகத்தையும் புறத்தையும் திணையெனச் சுட்டுவதே மரபும் முறையுமாம்.
மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார்:
தமிழ்க்காதல்
Leave a Reply