(நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 3. தொடர்ச்சி)

நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- 4.

  1. ஆதிமந்தியார்

    இவர் பெண்பாலர் என்பதும், இவர் நல்லிசைப்புலமை வாய்ந்தவர் என்பதும்,

‘மக்க ணுதலிய வகனைந் திணையுஞ்
சுட்டி யொருவர் பெயர்கொளப் பெறாஆ’

என்னும் அகத்திணையியற் சூத்திரவுரையில் நச்சினார்க்கினியர்,

‘மள்ளர் குழீஇய விழவி னானும்
மகளிர் தழீஇய துணங்கை யானும்
ண்டுங் காணேன் மாண்டக் கோனை
யானுமோ ராடுகள மகளே யென்கைக்
கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த
பீடுகெழு குரிசிலு மாடுகள மகனே’. (குறுந்தொகை-31)

என்னும் பாடலை எடுத்தோதி, ‘இது காதலற் கெடுத்த ஆதிமந்திபாட்டு’ எனவுரைத்தமையானும், இச்செய்யுள் சான்றோராற் றொகுக்கப்பட்ட குறுந்தொகையு ளொன்றாதலானும் அறியப்படும். இதனுள், ‘காதலற்கெடுத்த’ என்றது, கணவனைக் காணப்பெறாத என்றவாறு. ஈண்டு, கெடுத்த என்பதனை ‘அரசுகெடுத் தலமரு மல்லற் காலை’ (சிலப்-அந்தி) ‘எற்கெடுத்திரங்கி’ (மணி-5) ‘யானைதன் வயப்பிடி கெடுத்து மாழாந்த தொத்து’ (சிந். கன-34) ‘ஒருபொற் பூங்கொடி யென்னு நீராளை யிங்கே கெடுத்தேன்’ (சிந். கன-38) என்னுமிடங்களிற்போலக் கொள்க.

இவர் காதலனைக் காணப்பெறாதவா றென்னையெனிற் கூறுவேன்: இவர், திருமாவளவனெனச் சிறந்த கரிகாற்சோழன் அருமை மகளாவர். சேரநாட்டு மன்னனாகிய ஆட்டனத்தி என்பானை மணந்தவர். இவர், தங்காதலனுடன் கரிகாற்சோழனாற் கழாஅர் என்னும் ஊரிற் காவிரி முன்றுறையிற் சிறப்பித்துக்கொண்டாடப்பட்ட புதுப்புனல் விழவுக்குச் சென்றாராக, ஆங்குக் கச்சினன் கழலினன் தேந்தார் மார்பினனாய், இயற்கை வனப்பாலும் செயற்கையணியாலும் கண்டாரனைவரும் விரும்புந் தகையனாய் யாரினும் மேம்பட்டு ஆடுதற் றொழிலாற் சிறந்த தம் உயிர்க்காதலனாகிய அவ் வாட்டனத்தியை நீர்விளையாடுகையிற் காவிரி வவ்வியதனால், அவனை நாட்டிலும் ஊரிலும் சேரியிலும் வீரர்தொக்க வில்விழவுகளிலும் மகளிர் தொக்க துணங்கையா டிடங்களிலும் யாண்டுந் தேடிக் காணப்பெறாது, புனல்கொண் டொளித்ததோ கடல்கொண்டு புக்கதோ என்று கலுழ்ந்த கண்ணராய் மருண்டசிந்தையராய் அலமந்து, அக்காவிரி ஓடும் வழியெல்லாம் ஓடிக் கடல்வாய்ப் புக்கு அவனையே கூவி யரற்றினார்க்கு, அக்கடலே அவ்வாட்டனத்தியைக் கொணர்ந்துவந்து முன்னிறுத்திக் காட்டியவளவில், ஆங்கவனைத் தழுவிக்கொண்டு பொற்கொடிபோலப் போந்தார் என்ப. இதனாற் காதலற்கெடுத்தவாறு உணர்க.

இவ்வரியகதை நெடுந்தொகையினும் சிலப்பதிகாரத்தும் எடுத்தாளப்பட்டுள்ளது. இது பரணர் முதலிய நல்லிசைப்புலவரால் ஆங்காங்கெடுத்துப் பாராட்டப்படுவது. தலைவர் பிரிவுக்குத் தலைவியர் வருந்துமிடனெல்லாம் இவ்வாதிமந்தியார்க்கு நேர்ந்த பெருந்துயரே எடுத்து உவமை கூறப்படுவது. இக் கதையோ டொட்டி ஆராயுமிடத்து, மேற்குறித்த பாடல் இவரது பெருந்துயர்நிலையி லுரைத்த தென்பதும், தம்முடைய நாயகன் நாடுகெழுகுரிசி லாகிய மாண்டக்கோன் என்பதும், அவன், மைந்தர்க்கு மைந்தனாய் மகளிர்க்குச் சாயலாய் இருபாலாராலும் விரும்பப்படுபவனாதலால், மைந்தர் வில்விழவா டிடங்களிலும் மகளிர் துணங்கையாடிடங்களிலும் மற்றுமவன் இருத்தற்குத் தக்குழியெல்லாந் தேடிக் காணாதுழன்றாரென்பதும், வில்விழவாடுகளத்தும் துணங்கையாடுகளத்தும் அவனைத் தேடுதல் காரணமாகப் பல்காற் சுற்றித்திரிதலாற் றாமும் ஆடுகளமளே போறலின், ‘யானுமோ ராடுகள மகளே’ என்றாரென்பதும், தங்கணவன் ஆடுதற் றொழிலிற் சிறந்தோன் என்பதும், அவனைக் காணாமையாற் றம்மேனி பெரிதுமெலிந்தார் என்பதும் தெளியப்படுதல் காண்க. இவர் தங்கணவன் யாவரும் விரும்பும் பேரழகுடையனாதலால் காவிரி அவனது நலனயந்து வவ்விய தென்று சிறப்பித்துக் கூறுவர். இவர் பெயரும் இவரது காதலன் பெயரும் சிறுபான்மை முதற்சொல்லொழித்து மந்தி எனவும் அத்தி எனவும் வழங்கவும்படும். இவற்றை யெல்லாம்,

‘காதலற் கெடுத்த சிறுமையொடு நோய்கூர்ந்
தாதிமந்தி போலப் பேதுற்
றலந்தனெ னுழல்வேன் கொல்லோ.’
      (வெள்ளி வீதியார் – அகம் – 45)

‘கச்சினன் கழலினன் றெந்தார் மார்பினன்
வகையமைப் பொலிந்த வனப்பமை தெரியற்
சுரியலம் பொருநனைக் காண்டி ரோவென
வாதி மந்தி பேதுற் றினையச்
சிறைபறைந் துரைஇச் செங்குணக் கொழுகு
மந்தண் காவிரி போல.’ 
      (பரணர். அகம் – 76)

‘கழா அர்ப் பெருந்துறை விழவி னாடு
மீட்டெழிற் பொலிந்த வேந்துகுவவு மொய்ம்பி
னாட்ட னத்தி நலனயந் துரைஇத்
தாழிருங் கதுப்பிற் காவிரி வவ்வலின்
மாதிரந் துழைஇ மதிமருண் டுழந்த
வாதி மந்தி காதலற் காட்டிப்
படுகடல் புக்க பாடல்சால் சிறப்பின்
மருதி யன்ன மாண்புகழ் பெறீஇயர்.’ 
      (பரணர். அகம் – 222) 

‘அணிகிளர் சாந்தி னம்பட் டிமைப்பக்
கொடுங்குழை மகளிரி னொடுங்கிய விருக்கை
யறியா மையி னழிந்த நெஞ்சி
னேற்றிய லெழினடைப் பொலிந்த முன்பிற்
றோட்டிருஞ் சுரியன் மணந்த பித்தை
பாட்ட னத்தியைக் காணீ ரோவென
நாட்டி னாட்டி னூரி னூரிற்
கடல்கொண் டன்றெனப் புனல்கொண் டன்றெனக்
கலுழ்ந்த கண்ணள் காதலற் கெடுத்த வாதி மந்தி.’ 
      (பரணர், அகம் – 236)

* … … … உரைசான்ற
மன்னன் கரிகால் வளவன்மகள் வஞ்சிக்கோன்
றன்னைப் புனல்கொள்ளத் தான்புனலின் பின்சென்று
கன்னவி றோளாயோ வென்னக் கடல்வந்து
முன்னிறுத்திக் காட்ட வவனைத் தழீஇக்கொண்டு
பொன்னங் கொடிபோலப் போதந்தாள்.’
      (சிலப்பதிகாரம், வஞ்சினமாலை)

என்பனவற்றாற் கண்டு ஆராய்ந்து கொள்க. நெடுந்தொகை 41-ம் பாட்டில், நன்னன் ஏற்றை நறும்பூணத்தி முதலிய சிலர், சேரன் படைத்தலைவராகக் கூறப்படுதலால், அத்தியை வஞ்சிக்கோன் என்றலும் பொருந்தும். கரிகால் வளவன் புதுப்புனல் விழவு கொண்டாடுதல் சிலப்பதிகாரத்துக் கடலாடுகாதையினுங் கண்டது. ‘விண்பொரு பெரும்புகழ்க் கரிகால் வளவன், றண்பதங் கொள்ளுந் தலைநாட் போல’ என்பதன் உரையானுணர்க. அறிவாற் கலைமகளே எனச் சிறந்த ஔவையார் பாடியருளிய, ‘நெடுமலைச் சிலம்பின்’ என்னும் நெடுந்தொகையில், ‘வெள்ளி வீதியைப் போல ‘கன்றுஞ், செலவயர்ந் திசினால் யானே’ என வருதலானே வெள்ளிவீதியார் ஔவையாரின் முற்பட்டவராதல் அறியப்படுவது. அவ் வெள்ளிவீதியார்,

‘ஆதி மந்தி போலப் பேதுற், றலந்தனெ னுழல்வேன் கொல்லோ‘       (அகம்- 45)

என்றமையானே, இவ்வாதிமந்தியார் அவர்க்கும் முற்பட்டவராதல் தெளியப்படும். செந்தமிழ்ச் சரிதவாராய்ச்சி செவ்விதிற்புரிந்த இக்காலத்தறிஞர் [மகா-சிரீ வி. கனகசபைப் பிள்ளையவர்களுடைய ‘Tamils Eighteen Hundred Years Ago” Madras Review, Page 433.] கரிகாற்சோழன் காலம் கி.பி.55 முதல் 95 இறுதியாமெனத் தெளிவித்தலால், இவ்வாதிமந்தியாரும் அவன்மகளெனல்பற்றி அக்காலத்தவரே யாதல் தெரிந்துகொள்க. இவரது நுண்ணிய அறிவும் திண்ணிய கற்பும் இவற்றான் ஒருவா றறியத்தக்கது. இனி, வெள்ளி வீதியாரைப்பற்றி ஓதுவேன்.

(தொடரும்)

இரா. இராகவையங்கார்

நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்