(பாட்டின் இயல்பு என்ன? 2/3 தொடர்ச்சி)

 தலைப்பு-பாட்டின் இயல்பு, மறைமலையடிகள் ; thalaippu_paatin_iyalbu_maraimalaiadigal

பாட்டின் இயல்பு என்ன? 3/3

  இனி, இங்ஙனம் இயற்றப்படுகின்ற பாட்டு உலக இயற்கையழகுடன் பெரிதும் பொருந்தி நடத்தல் வேண்டும். இன்னும் இதனை நுணுகி நோக்குமிடத்துப் பாட்டுப் பாடுதலில் வல்லவனான நல்லிசைப் புலவனுக்கும் உலக இயற்கையினைப் பலவகை வண்ணங்களாற் குழைத்து வரைந்து காட்டுகின்ற ஓவியக்காரனுக்கும் ஒற்றுமை மிக உண்டென்பது தெள்ளிதிற் புலப்படும். ஆயினும், ஓவியக்காரன் வரைகின்ற ஓவியங் கட்புலனுக்கு மட்டுமே தோன்றுவதாகும்; நல்லிசைப் புலவன் அமைக்கின்ற பாட்டோ கண் முதலான புலன்களின் அகத்தே விளங்கும் உள்ளத்திலே சென்று தோன்றுவதாகும். ஓவியக்காரன் தான் எழுத எடுத்துக்கொண்ட பொருட்டோற்றத்தைப் பன்முறையும் நுண்ணிதாக அளந்தளந்து பார்த்துப்பின் அதனைத் திறம்பட வரைந்தால் மட்டும் அங்ஙனம் வரைந்த ஓவியத்தைக் கண்டு வியக்கின்றோம்; தான் விரித்து விளக்கமாய் எழுதவேண்டும் பகுதிகளில் அவன் ஒரு சிறிது வழுவிவிட்டானாயினும் அவ்வோவியத்தின்கண் நமக்கு வியப்புத் தோன்றாதொழியும். நல்லிசைப்புலவனோ அங்ஙனம் அவனைப்போல் ஒவ்வொன்றனையும் விரிவாக விளக்கிக் காட்ட வேண்டும் வருத்தம் உடையான் அல்லன். ஓவியக்காரன் புலன் அறிவைப் பற்றி நிற்பவன்; புலவனோ மன அறிவைப் பற்றி நிற்பவன்.

  புலனறிவோ பருப்பொருள்களை விரித்தறியும் இயல்பிலுள்ளது; மனவறிவோ அப்புலனறிவின் அகத்தே நின்று நுண்ணிதாம் பொருளையுந் தானே ஒரு நொடியில் விரித்தறியும் ஆற்றல் வாய்ந்தது! அம்மம்ம! மனவறிவின் ஆற்றலை யாம் என்னவென்று எடுத்துரைப்பேம்! அணுவை ஒரு நொடியில் மலைபோற் பெருகச் செய்யும், மலையை மறுநொடியில் ஓர் அணுவினுங் குறுகச்செய்யும். இங்ஙனம் வியப்பான இயல்புடைய மனவறிவினை நல்லிசைப் புலவன் என்னும் மந்திரகாரன் தன் மதிநுட்பமாகிய மாத்திரைக் கோலால் தொட்ட அளவானே அது திடுக்கென்றெழுந்து அவன் விரும்பிய வண்ணமெல்லாஞ் சுழன்று சுழன்றாடும்.

  இன்னும் இதனைச் சிறிது விளக்குவாம். ஓவியக்காரன் அச்சுறுத்தும் அகன்றதொறு கரிய பெரிய காட்டினை எழுதல் வேண்டுமாயிற் பலநாளும் பலகாலும் அதன் இயற்கையினை அறிந்தறிந்து பார்த்துப், பரிய மரங்கள் அடர்ந்து ஓங்கி ஒன்றோடொன்று பிணைந்து வெளிச்சம் புகுதாமல் தடை செய்து நிற்றலையும், அக்காட்டின் வெளித்தோற்ற அமைப்பினையும், மரங்களின் இடையிலுள்ள இடுக்கு வெளிகளில் நமது பார்வை நுழையுங்கால் அவை தோன்றுந் தன்மையினையும், உள்ளே இருள் திரிந்து பரவியிருத்தலையும் அங்குள்ளவாறே சிறந்த பல வண்ணங்களைக் குழைத்து இரட்டுத் துணியின் மேல் மிக வருந்தி முயன்று எழுதிக் காட்டல் வேண்டும். இ·து அவனுக்குப் பெருநாள் வினையாக முடியும். நல்லிசைப்புலவனோ, ‘பரிய மரங்கள் அடர்ந்தோங்கிப் பிணைந்து நிற்கும் இருண்ட காடு’ என்று சில சொற்களைத் திறம்படச் சேர்த்துக் கூறுதல் ஒன்றினாலேயே ஒரு நொடிப்பொழுதில் அவ்வோவியக்காரனாலுங் காட்ட முடியாத ஒருபெரு வியப்புணைர்வினை நம் மனத்தகத்தே விளைவிக்கும் ஆற்றலுடையனாவன். இஃது இவனுக்கு மிக எளிதிலே முடிவதொன்றாம். இங்ஙனம் மனவுணர்வினை எழுப்புதல் மிக எளிதிலே செய்யக்கூடிய தொன்றாயினும், அம்மனவியல்பின் நுட்பம் உணர்ந்து அவ்வாறு செய்யவல்லராயின நற்பெரும்புலவர் உலகிற் சிலரேயாவர். புலவனுடைய திறமையெல்லாஞ் “சில்வகையெழுத்திற் பல்வகைப் பொருளைக்” காட்டுகின்ற அரும்பெருஞ் செய்கையினாலே தான் அறியப்படும். இங்ஙனம் பாட்டு வழக்கின் நுட்பமுணர்ந்து பிற மொழிகளிற் புகழ்பெற்று விளங்கிய நல்லிசைப் புலவர்கள் ஓமர்2, தாந்தே3, செகப்பிரியர்4, மிலிட்டனார்5, கீதே6, காளிதாசர் முதலியோரும், நஞ்செந்தமிழில் திருவள்ளுவர், நக்கீரனார், இளங்கோவடிகள், கூலவாணிகன் சாத்தனார், மாங்குடி மருதனார், கபிலர், சேக்கிழார் முதலானோரும் பண்டைக்காலத்து ஏனை நல்லிசைப் புலவருமேயாவர். இன்னும் இதனை விரிப்பிற் பெருகுமென்றஞ்சி இத்துணையின் நிறுத்துகின்றோம்.

2. Homer, 3. Dante, 4. Shakespeare, 5. Milton, 6. Goethe

– மறைமலையடிகள் : முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை