–சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

 

 (சன.26, 2014 இதழ்த் தொடர்ச்சி)

elephant02

தோழி! வருந்தாதே

“வினையே ஆடவர்க்கு உயிர்” என்ற கோட்பாட்டில் சிறந்த உள்ளம் கொண்டவனாய், தலைவன் வெளியூர் சென்றுவிட்டான். தலைவி தலைவன் பிரிவால் நாள்தோறும் மெலிந்து கொண்டே இருந்தாள். தோழி ஒரு நாள் உற்று நோக்கினாள். ஆறுதல் கூறத் தொடங்கிவிட்டாள்.

“தோழி! வருந்தாதே, குவளை மலர் போன்ற கண்கள் தம் அழகை இழந்துவிட்டனவே, தொய்யில் எழுதி அழகுடன் விளங்கும் உன் தோள்கள் இன்று என்ன இப்படிக் காணப்படுகின்றன? நூலால் தைத்து எழுதப்பட்ட பூக்கள், தையல் விட்டுப் பிரிந்து கலைந்து காணப்படும் மெத்தையைப் போல் அல்லவா இருக்கின்றன. உன்னுடைய திருமணம் நடப்பதற்கு முன்பு, உன்னை மணக்க விரும்பிய பல நற்குணச் செம்மல்கள், உன்னுடைய அழகை எவ்வளவு ஆராய்ந்து பாராட்டினார்கள்! அவ்வழகெல்லாம் இன்று எங்கே போயிற்று? உன்னுடைய தோற்றத்தில் இவ்வளவு மாறுதல் ஏன்? நீ நாளும் வருந்துவதனாலன்றோ! ஆகவே வருந்தாதே. நெடுந்தொலைதான் சென்றுள்ளார் ……கண்ணன் எழினி என்பான்  ஆளும் முதுகுன்றம் என்னும் ஊருக்கப்பால்தான் போயுள்ளார். கண்ணன் எழினி என்றவுடன் அவன் வீரச்செயலும் நினைவுக்கு வருகின்றது. படையெடுத்து வந்தோரை எல்லாம் புறமுதுகுகாட்டி ஓடச் செய்தவன். வீரமிக்க படையையுடையவன்.

  நீ எவ்வளவு இளைத்துக் காணப்படுகின்றாய்? முன்பெல்லாம் இறுக்கமாய் இருந்த கைவளையல்கள் இப்பொழுது கழன்று கழன்று விழுகின்றனவே. இவ்விதம் நீ இளைத்துப்போமாறு அவர் நீட்டித்துத் தங்கமாட்டார். அவர் விரைவில் திரும்புவதற்குத் தூண்டுமாறு சில காட்சிகளை அங்குக் காண்பார்.

 elephant04வழியில் ஆண்யானை பெண்யானையைத் தழுவும்; அவை  இரண்டுக்கும் இடையில், அவற்றின் கன்று புகுந்து ஆண்யானையின்மீது துள்ளி ஏறமுயலும். இதை அவர் காண்பாரேயானால்? அவர் உள்ளம் எப்படி இருக்கும் என்று நினைக்கின்றாய் “விலங்குகள் கூட இல்லற இன்பத்தை எவ்வளவு நன்றாகத் துய்த்து வாழ்கின்றன. ஆறறிவாம் பகுத்தறிவு பெற்ற நாம் இவ்வாறு வருந்துகின்றோமே” என்று நினைக்கின்றாய்? தலைவனும் தலைவியும் தழுவி மகிழும்போது, அவ்வமயம் இன்னது என்று அறியாத பேதைச் சிறு குழவி தலைவன் மார்பில் விளையாட முயன்றால், தந்தையும் தாயும் புன்னகை பூத்து உள்ளம் பூரிக்கும் காட்சியல்லவா அவர் நினைவுக்கு வரும். அவ்வித நினைவு அவரை உடனே ஊருக்குத் திரும்பி வரச்சொய்யும் என்று நினை. ஆகவே வருந்தாதே நம்மைப் பிரிந்தவர் விரைவில் வருவர்.”elephant05

 கக பாடல்

 அகநானூறு  197 பாலை

 மாமலர் வண்ணம் இழந்த கண்ணும்

 பூநெகிழ் அணையின் சாயதோளும்

 நன்னர் மாக்கள் விழைவனர் ஆய்ந்த

 தொன்னலம் இழந்த துயரோடு  என்னதூஉம்

5இனையல் வாழி தோழி! முனையெழ

 முன்னுவர் ஒட்டிய முரண்மிகுதிருவின்

 மறமிகுதானைக் கண்ணன் எழினி

 தேமுதுகுன்றம் இறந்தனராயினும்

 நீடலர்யாழ நின் நிரைவளை நெகிழ;

10தோள்தாழ்பு இருளிய குவைஇருங்கூந்தல்

 மடவோள்தழீஇய விறலோன் மார்பில்

 புன்றலைப்புதல்வன் ஊர்புஇழிந்தாங்குக்

 கடுஞ்சூல் மடப்பிடிதழீஇய வெண்கோட்டு

 இனம்சால் வேழம் கன்றுஊர்பு இழிதரப்

15பள்ளிகொள்ளும் பனிச்சுரம் நீந்தி

 ஒள்ளிணர்க் கொன்றை ஓங்குமலை அத்தம்

 வினைவலி உறூஉம் நெஞ்சமொடு

 இணையராகி நப் பிரிந்திசி னோரே.

 வினைமுடிபு: இப்பாடலில் வினைமுடியும் இடங்கள் எங்கெங்கு என்று அறிதல் வேண்டும். மூன்று இடங்களில் கருத்து முடிவுறுவதைக் காணலாம்.

 1. இனையல்வாழி தோழி (அடி ரு)

 2. நீடலர்யாழ நின்நிரைவளை நெகிழ (அடி கூ)

 3. இனையராகி நப்பிரிந்திசினோரே (அடி கஅ)

 பொருட் பொருத்தமுற உரைநடைப்படுத்த (Prose order)

 இனையராகி நம்பிரிந்திசினோரே

 நீடலர் யாழ நின்நிரைவளை நெகிழ

 இனையல்  வாழி தோழி.

 என்று கருத்து முடிவுறும்.

 ஆதலின்,

 ‘தோள் தாழ்பு’ என்று தொடங்கி, “நப்பிரிந் திசினோரே’ என்று முடித்து, ‘முனையெழ’ என்று தொடங்கி, “நிரைவளை நெகிழ நீடலர்” என்று முடித்து, “மாமலர்” என்று தொடங்கி ‘தோழி இனையல் வாழி” என்று முடிக்கவேண்டும். ஆகவே பொருள் முடிபுப்படி,

 1. தோள் தாழ்பு (அடி க0)……பிரிந்திசினோரே (அடி கஅ)

 2. முனை எழ (அடி ரு) ……நீடலர் (அடி கூ)

 3. மாமலர் (அடி க) ….இனையல் (அடி ரு)

 என்று உரைநடைப்படுத்திக்கொள்ளுதல் வேண்டும். இவ்வுரை நடைப்படியே சொற்பொருள் தரப்படுகின்றது.

 சொற்பொருள்

 க. (அடிகள் க0 – கஅ)

 தோள் – தோள்களில், தாழ்பு – தாழ்ந்து, இருளிய – இருண்ட குவை – நெருங்கி அடர்ந்து மிகுந்து குவியலாகக் காணப்படும், இரும் – கருமைமிக்க, கூந்தல் – தலைமயிரினையுடைய, மடவோள் – இளமையும் அழகும் மிக்க மனைவியை, தழீஇய – தழுவிய, விறலோன் – சிறந்த தலைவனின், மார்பில் – மார்பின்மீது, புன்தலை – மென்மையான சிறிய தலையினையுடைய, புதல்வன் – மகன், ஊர்பு – ஏறி, இழிந்தாங்கு – இறங்கியதைப்போல், கடுஞ்சூல் கருக்கொண்டு, நிறைந்த சூலினையுடைய (அண்மையில் கன்று ஈனக் கூடிய) மடப்பிடி – இளைய அழகிய பெண்யானையை, தழீஇய தழுவிய, வெண் கோட்டு – வெண்மையான பற்கொம்புகள் (தந்தங்கள்) பொருந்திய, இனம்சால் – தழ்கூட்டம்மிக்க, வேழம் ஆண்யானை, கன்று – யானைக்கன்று, ஊர்பு இழிதர – ஏறிஇறங்க, பள்ளிகொள்ளும் – படுத்திருக்கும், பனிச்சுரம் – நினைத்தால் அச்சத்தால் நடுக்கத்தைத் தரும் பாலைநிலவழியை, நீந்தி – கடந்து, ஒள் – ஒளிபொருந்திய, இணர் – பூங்கொத்துக்கள்  மிகக், கொன்றை – கொன்றை மரங்கள் மிகுந்த, ஓங்குமலை உயர்ந்துள்ள மலைகள் மிக்க, அத்தம்- வழியில் வினைவலியுஉறூஉம்-வினையை வற்புறுத்தும், நெஞ்சமொடு – மனத்துடன் இனையராகி இங்ஙனம் நம்மிடம் இரக்கமற்றவராகி, நப்பிரிந்திசினோர் நம்மைப்பிரிந்து போனவர்.

 உ (அடிகள் ரு – கூ)

 முனையெழ – படை யெடுக்க, முன்னுவர் – நினைத்து வருபவர்களை, ஓட்டிய – புறங்காட்டி ஓடுமாறு துரத்திய, முரண்மிகு – வலிமைமிக்க, திருவின் – வெற்றிச் செல்வத்தினையுடைய, கண்ணன் எழினி – கண்ணன் எழினி என்பானின், தேம் – இனிய, முதுகுன்றம் – முதுகுன்றம் எனும் ஊரை, இறந்தனராயினும் – கடந்து தொலைவில் போயினராயினும், நின்நிரைவளை – உனது கைகளில் அணிந்துள்ள வரிசையான வளையல்கள், நெகிழ – இளைப்பதனால் கழன்று விழ, நீடலர் – காலம் நீட்டித் துத்தங்கார் (யாழ – அசைச்சொல், பொருளற்று ஓசையை நிரப்ப நிற்கின்றது)

 (அடிகள் க -ரு)

 மாமலர் – கரியகுவளை மலரின், வண்ணம் – அழகை, இழந்த – நீங்கிய, கண்ணும் – கண்களும், பூநெகிழ் – நூலால் பூ வடிவில் தைத்த பூ கழன்ற அணையின் – மெத்தையைப் போல், சாய – அழகு கெட்ட, தோளும் – தோள்களும், நன்னர் மாக்கள் – நன்மையைநாடும் இளைஞர்கள், விழைவனர் – உன்னை மனைவியாகப் பெற விரும்பினராய், ஆய்ந்த – உன் அழகின் தன்மை யெல்லாம் ஆராய்ந்த, தொல்நலம் – முன்பிருந்த அழகு, இழந்த போக்கிய, துயரமொடு – துன்பத்தோடு, என்னதூஉம்- சிறிதும், இனையல் – வருந்தாதே, வாழி – வாழ்வாயாக, தோழி தோழியே.

 ஆராய்ச்சிக் குறிப்பு: பூ நெகிழ் அணை: இன்று வீடுகளில் உள்ள தலையணை மெத்தை முதலியவற்றின் உறைகளில் பூ வேலையால் அழகுபடுத்துவது போலவே, அன்றும் அழகுபடுத்தினர். பின்னப்பட்ட நூல் அறுபட்டு வெளிக் கிளம்பின், அழகு கெட்டுவிடும். அவ்விதம் அழகு கெட்ட மெத்தையைத் தோள்களுக்கு ஒப்பிடுகின்றார். மெத்தையில் பூ வேலை செய்வதுபோல், தோள்களில் மையால் கொடிபோன்றும், கரும்பு போன்றும் எழுதும் வழக்கம் பண்டைநாளில் இருந்தது அவ்வழக்கத்தின் அறிகுறியே இன்று சிலர் பச்சை குத்திக்கொள்ளுதல் “தாம் வீழ்வார் மென்றோள் துயில்” என்று வள்ளுவர் கூறுவதற்கேற்ப, தோளுக்குத் துயில் கொள்ளும் அணையை ஒப்பிடும் நயம் பாராட்டத்தகுந்தது.

 நன்னர் மாக்கள் விழைவனர் ஆய்ந்த தொல்நலம்: ஒரு வீட்டில் பெண் ஒருத்தி வளர்ந்தால், மணப்பருவம் வந்தபின், அவளை மணக்க விரும்பிப் பலர் மணம் பேசி வருவது இயல்புதான். அவ்விதம் பலர் வந்தாலும், ஒருவனைத்தான் மணமகனாகத் தேர்ந்து கொள்வார்கள் மணமகள் வீட்டார். அவ்விதம் பலர்  அப்பெண்ணைக் கண்டு அவள் அழகு நலங்களைப் பாராட்டி அவளை மணமகளாகத் தருமாறு வேண்டியிருப்பர். வடநாட்டில் நடந்ததாகக் கூறப்படுவது போல் வலிதிற் கொண்டு சென்று மணக்கவிரும்பவோ, பெண் வீட்டாருக்குக் கேடு சூழவோ விரும்பியிருக்க மாட்டார்கள். ஆகவே அவர்களை ‘நன்னர் மாக்கள்’ என்கின்றார். ‘மாக்கள்’ என்னும் சொல் ஐயறிவு உயிர்களைக் குறிக்கத்தகுந்தது. (மாவும் மாக்களும் ஐயறிவினவே தொல்காப்பியர்) ஆயினும் மணப்பருவத்து இளைஞர்கள் மூதறிவு நிரம்பப் பெறாது, அழகு ஒன்றையே நாடித்திரிவர் ஆதலின் “மாக்கள்” என்றனர் போலும்.

 கண்ணன் எழினி: ‘எழில்’ என்றால் அழகு, இச்சொல்லினின்றும் தோன்றியதே ‘எழினி’. ‘கண்ணன்’ என்பது ‘கண்ணுக்கினியன்’ ‘கண்போன்று சிறந்தவன்’, என்று பொருள்படும்.

 இது தனித்தமிழ்ச் சொல்லே. சிலர் நினைப்பதுபோல் ‘கிருட்டிணன்’ என்ற சொல்லின் சிதைவு அன்று. ‘கண்ணன்’ தன்மையை விளக்கும் பெயராய் இருந்து, கிருட்டிண வழிபாடு நம் நாட்டில் பரவியபின்னர், அவ்வழிபாடு ஆற்றியோர் ‘கிருட்டிணனைத், தமக்குக் கண்போன்றவன், ‘கண்ணுக்கினியான்’ என்று கருதி அவனுக்கு இப்பெயரிட்டனர். ‘கிருட்டிணன்’ என்ற வடமொழிச் சொல்லுக்குப் பொருள் ‘கறுப்பன்’ கருமை நிறம் உடையவன்’ என்பதாகும். ஆகவே தமிழ்க் கண்ணனுக்கும் வடமொழிக் கிருட்டிணனுக்கும் தொடர்பு ஏற்பட்டது பிற்காலத்திலலேயே பொதுத்தன்மையில் வழங்கிய சொல் சிறப்புத்தன்மையில் ஒரு பொருளைக் குறித்தல், மொழிவளர்ச்சியில் காணக்கூடியதே. ‘அரண்மனை’ என்பது பாதுகாவல் உள்ள எந்த வீட்டையும் குறிக்கலாம் எனினும், அரசன் வீட்டை மட்டும் குறிப்பது இவ்வகையான பொருள் சுருங்குமாற்றமே. இதை மொழி நூலார் ‘சிறப்பு அடைவிதி’ என்பர்.

 முதுகுன்றம்: இது இப்பொழுது விருத்தாசலம் என்று வழங்கும் இடத்தின் பெயர்போலும். முந்தைய வெளியிட்டில் குறிப்பிட்டதுபோல் வட மொழியாளர் ஊர்களின் தமிழ்ப் பெயர்களை வடமொழிப் பெயர்களாக மொழியெர்த்து வழங்கினர். முதுகுன்றத்தை ‘விருத்தாசலம்’ என்று மாற்றி அப்பெயரை நிலைக்கச் செய்துவிட்டனர் தமிழர்கள். இனித் தமிழ்ப்பெயர்களையும் வழங்குமாறு செய்து, தமிழ்ப்பெயரால் அழைக்க வேண்டும். இவ்விதம் கூறுவது வடமொழி மீது கொண்ட வெறுப்பினால் அன்று. தமிழ்நாட்டில் ஊர்ப் பெயர்கள் தமிழில் இல்லாது வேற்றுமொழியில் இருப்பின், தமிழர் தம் ஊரைப்பற்றியோ, தம் மொழியைப் பற்றியோ கவலைப்படாதவர்கள் என்ற பழிதான் சாரும். ‘திருநெல்வேலி’ யை ஒரு ஆங்கிலேயன் “Beatiful paddy fence’’ என்றும் Cumber land என்ற ஆங்கில ஊரை நாம் ‘கம்பர் நாடு’ என்றும் அழைத்தால் எப்படியோ அப்படித்தான் முதுகுன்றத்தை விருத்தாசலம் என்பதும். ஆகவே இம்மாதிரி மொழிபெயர்க்கப்பட்ட பெயர்களைத் தமிழிலேயே வழங்குவதற்கு ஆவனசெய்வார்களாக.

 நிரைவளை கழலுதல்: மகிழ்ச்சியால் உடல் வளர்ந்து உப்புவதும், துரயத்தால் உடல்வாடி இளைப்பதும் இயல்பே. பெண்கள் மகிழ்ச்சியாய் இருக்கும் நாளில்  கைகள் பருத்து வளைகள் செறிவுற்று இருப்பதும் துன்பத்தால்  வாடி இளைத்து வளைகள் கழன்று விழுவதும் நுட்பமாகக் காணத்தக்கன. இலக்கிய உலகில் காணப்படும் பெண்களுக்கு இந்நிகழ்ச்சிகள் இயல்பாய் விட்டன. வளையல்கள் அணியும் வழக்கம் தொன்றுதொட்டு நம் நாட்டில் இருந்து வருகின்றது. அவற்றை அணியும் முறை நாளுக்கு நாள் மாறுபடும். ஒன்றிரண்டு வளையல்கள் அணிவது சில காலத்து நாகரிகம். பல வளையல்களை அடுக்கடுக்காக அணிவது சில காலத்து நாகரிகம். மாமூலனார் காலத்துப் பெண்கள் அடுக்கடுக்காய்க்கை நிறைய அணியும் முறையை விரும்பினர் போலும். அதனால்தான் ‘நிரைவளை’ என்றார்.

 உவமை: ஆண் யானையும்  பெண் யானையும் ஒன்றை ஒன்று தழுவிக் கொள்ளுதலும், யானைக்கன்று ஆண் யானையின் மீது ஏறி இறங்கி விளையாடுதலும், ஆண் யானை அதற்கெனப் படுத்திருக்கலும் கண்ணுக்கினிய காட்சி; கருத்துக்கு எழுச்சி தரும் காட்சி. இக்காட்சிக்கு உவமையாக மக்கள் வாழ்க்கைப் பகுதியைக் காட்டுகின்றார். இதன் அழகை நினையுங்கள். “யானையையும் அதன் செயல்களையும் மக்கட்கும் மக்கட் செயல்களுக்கும் உவமை கூறுதல் இயல்பு. அதற்கு மாறாக, மக்களையும் அவர் செயலையும் விலங்குக்கும் அதன் செயலுக்கும் ஒப்பிடுவது எவ்விதம் பொருந்தும்?”  என்று கருதலாம். உவமை எதற்கு வருகிறது? தெரிந்ததைக் கொண்டு தெரியாததை விளக்க முயல்கிறபோது உவமை தோன்றுகிறது மக்கள் வாழ்க்கைப் பகுதி மக்களாயினார்க்குத் தெரிந்தது ஒன்றே. மக்களைப் போல் மக்களினும் சிறப்பாக – யானையும் தன் காதலி, குழந்தையிடத்தில் அன்பு கொண்டு ஒழுகும் என்பதை அறிந்தவர், அறிய ஆவலுடையவர்கள் மிகச்சிலர். ஆகவே எல்லாரும் அறிந்த மக்கள் வாழ்க்கைக்கு விலங்கெனக் கருதும் யானை வாழ்க்கையைக் காட்டுகின்றார்.

 அவ்விதம் காட்டுவதில் தோழி கூற்றாக வைத்துக் கூறுவதில் இன்னொரு சிறப்பு உண்டு. சுரத்தில் செல்லும் தலைவனுக்குக் காதலியின் நினைப்பை உண்டுபண்ணுவதற்கு இவ்யானைக் காட்சி, பெரிதும் பயன்படும். தலைவியை ஆற்றுவதற்கு, தலைவன் விரைவில் திரும்பிவருவான் என்று கூறுவதற்கு இக்காட்சியை இங்குப் படைத்துள்ளார், இன்னொரு குறிப்பும் உண்டு. பிடி சூல் கொண்டது; கன்று ஒன்றும் தாவுகின்றது. அதைக்காணும் தலைவனுக்கு மக்கட்பேற்றில் நினைவு வரும். தானும் அவ்விதம் இருந்து இன்பம் நுகரும் நிலையை எண்ணுவான் அன்றோ?

 படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும்

 உடைப்பெரும் செல்வராயினும் இடைப்படக்

 குறுகுறு நடந்து சிறுகை நீட்டி

 இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்துப்

 நெய்யுடை யடிசில் மெய்பட விதிர்த்தும்

 மயக்குறு மக்களை இல்லோர்க்குப்

 பயக்குறை யில்லைத்தாம் வாழ்நாளே.

 – பாண்டியன் அறிவுடைநம்பி.

[துழந்தும்: தோண்டியும், அடிசில: சோறு, விதிர்த்தும்: சிதறியு ம் மயக்குறும்: அறிவை, இன்பத்துள் மயக்கும், பயக்குறை: பயனாகிய வேண்டப்படும் பொருள்.]