(சித்திரை 07, தி.ஆ.2045 / 06, ஏப்பிரல் 20, 2014 இதழின் தொடர்ச்சி)

ககூ. இமயச் செவ்வரை  மானும் கொல்லோ!

– சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

 imayamalai01

 பெறலரும் தலைவியைச் சிறப்புற மணந்த தலைவன் சென்றான் பொருள் தேட. ஏன்? பொருளின்றி இரந்தோர்க்கு ஈயாமல் இருத்தல் இழிவென்று கருதி, பெருஞ்செல்வம் தேடச் சென்றான். தலைவன் பிரிவால் தலைவி வருந்தினாள். தோழியர் கூடினர். ஆறுதல் கூறுகின்றனர்.

 தோழி: அவர் தேடச் சென்ற பொருள் நம் தலைவியை விட உறுதி தரக்கூடியதா?

 இன்னொரு தோழி: நம் தலைவியினுமா?

 தோழி: ஆம் நம் தலைவி: நிழலில் உள்ள ஆற்றின் கருமணல் போன்றுள்ள அடர்ந்து வளர்ந்துள்ள சுருண்ட கூந்தல், குழலிசை போன்ற குரல், பாவை போன்ற அழகு. இப்பொழுது இளைத்து, கைவளையல்களும் கழன்று விழுகின்றனவே.

 இன்னொரு தோழி: கண்களினின்றும் முத்து முத்தாக உதிர்கின்றனவே. நாம் இங்கு இப்படி வருந்துகின்றோம்? அவர் சென்ற இடம்?

 தோழி: அவர் சென்ற இடமா? வேடர்கள் நிறைந்த இடம் அவர்கள் வளைந்தவில்லும் கொடிய பார்வையும் உடையவர்கள். அழகிய எருதுகளைக் கொன்று அதன் இறைச்சியை நெருப்பில் வேக வைத்துப் பேய்கள் போலத் தின்பார்கள். வெந்ததும் வேகாததுமாகவுள்ள அவ்வூனைத் தின்ற பின்னர், நெல்லிலிருந்து உண்டாக்கப்பட்ட கள்ளைக் குடிப்பர். கையும் கழுவார்; வாயும் கொப்பளியார். ஆங்காங்கு அப்படியே உறங்குவார்கள். கோட்டான் விட்டு விட்டுக் கூவிக் கொண்டே  இருக்கும். யானைகள் உண்டு.

 இன்னொரு தோழி: இதெல்லாம் எங்கு? எல்லாம் நம் தமிழ் நாட்டுக்கப்பாலுள்ள வடபகுதியிலா?

 தோழி: ஆம். வடக்கு எல்லையாகிய திருவேங்கட மலைக்கு (திருப்பதி) அப்பால் தான்.

 பிறிதொரு தோழி: இவ்வளவுக்கும் வழியெல்லாம் கடந்து போயுள்ளாரே, பெருஞ்செல்வத்தைத் தேடிக் கொண்டுதான் திரும்புவாரோ?

 தோழி: பெருஞ்செல்வமா? பெருஞ்செல்வமென்றால் எல்லையுண்டா?

 பிறிதொரு தோழி: எல்லை ஏது? இமயமலை அவ்வளவா? அல்லது நந்தர் மரபில் உள்ள ஓர் அரசன் தேடிய பெருஞ்செல்வமளவா?

 தோழி: செல்வம் என்பது சிந்தையின் நிறைவு தான். எவ்வளவு பெருஞ் செல்வம் தேடினாலும் நம் தலைவியைப் போல் அறனும் இன்பமும் அளிக்குமோ?

 பிறிதொரு தோழி: எப்படி அளிக்கும்? தலைவியில்லையேல் அவர்க்கு ஒன்றுமே இல்லையே, எல்லாம் இருந்தும் என்ன பயன்?

 தோழிகள்: ஆம்! ஆம்! விரைவில் திரும்பிவிடுவர். தோழியே (தலைவியே) வாழ்க.

 ****

cave02

 ககூ. பாடல்

 அகநானூறு 265 பாலை

 புகையின் பொங்கி வியல் விசும்பு உகந்து

 பனியூர் அழல்கொடி கடுப்பத் தோன்றும்

 இமயச் செவ்வரை மானும் கொல்லோ?

 பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்

 சீர் மிகு பாடலிக் குழீஇக் கங்கை

 நீர் முதல் கரந்த நிதியம் கொல்லோ?

 எவன் கொல் வாழி தோழி! வயங்கும் ஒளி

 நிழல் பால் அறலின் – நெறித்த கூந்தல்

 குழல் குரல் பாவை இரங்க நம்துறந்து

 ஒண்தொடி நெகிழச் சாஅய்ச் செல்லலொடு

 கண்பனி கலுழ்ந்து யாம் ஒழியப் பொறைஅடைந்து

 இன்சிலை எழில் ஏறு கெண்டிப்புரைய

 நிணம் பொதிவிழுத்தடி நெருப்பின் வைத்து எடுத்து

 அணங்கு அருமரபில் பேஎய் போல

 விளர் ஊன்தின்ற வேட்கை நீங்கத்

 துகள் அற விளைத்த தோப்பி பருகிக்

 குலாஅ வல்வில் கொடுநோக்கு ஆடவர்

 புலாஅல் கையர் பூசா வாயர்

 ஓராஅ உருட்டும் குடுமிக் குராலொடு

 மராஅம் சீறுஊர் மருங்கில் தூங்கும்

 செந்நுதல் யானை வேங்கடம் தழீஇ

 வெம்முனை அருஞ்சுரம் இறந்தோர்

 நம்மினும் வலிதாத் தூக்கிய பொருளே.

 கருத்து முடிபு:

 க. வயங்கு ஒளி….. தூக்கிய பொருள் (அடிகள் எ-உங)

 உ. புகையல் ….மானுங் கொல்லோ (அடிகள் க-ங)

 பல்புகழ்….. வாழிதோழி (அடிகள் ச-எ)

 *****

 சொற்பொருள்

 (க.அடிகள் எ-உங)

 வயங்கு – விளங்கும், ஒளி – வெளிச்சத்தால் உண்டாகும், நிழல்பால் – நிழலின்கண் உள்ள, அறலின் – ஆற்றின் கருமணல் போல, நெறித்த – நெளிந்து அடர்ந்த, கூந்தல் – கூந்தலினையும், குழல்குரல் குழலிசைபோன்ற குரலினையும் உடைய, பாவை – அழகிய பாவை (பதுமை) போன்ற நீ, இரங்க – வருந்த,

 நம்துறந்து – நம்மைவிட்டு நீங்கி, ஒண்தொடி – ஒளி பொருந்திய வளையல்கள், நெகிழ – நின்ற நிலையினின்றும் கழன்று ஓட, சா அய் – மெலிந்து, செல்லலொடு – துன்பத்துடன், கண்பனி – கண்களில் பனிநீர்போல முத்துமுத்தாய் நீர்சொட்ட, கலுழ்ந்து – அழுதுகலங்கி, யாம் ஒழிய – யாம் வீட்டின் கண்ணே தங்கி இருக்க, பொறை அடைந்து  – (வேடர்கள்) குன்றினை அடைந்து, இன் -இனிய, சிலை – முழக்கம் செய்யும், எழில் – அழகுமிக்க, ஏறு – காளையை, கெண்டி – கொன்று, புரைய – உயர்ந்த, நிணம்பொத – கொழுப்பு மிகுந்த, விழுத்தடி – சிறந்த தசைப்பகுதிகளை, நெருப்பின்வைத்து எடுத்து – நெருப்பின்மீது வைத்து வாட்டி எடுத்து, அணங்கு – கண்டாரை வருத்தும், அருமரபில் – அரியஇயல்பில், பேய்போல – பேய்களைப்போல, விளர் – வெளுத்த ஊன் இறைச்சியை, தின்ற – தின்றதனால் உண்டான, வேட்கை – நீர்குடிக்கவேண்டும் என்ற விருப்பம், நீங்க – அகல, துகள் – குற்றம், அற – நீங்க, விளைந்த – நன்றாகப்பக்குவமாக முதிர்ந்த,  தோப்பி – ஒருவகைக் கள்ளை, பருகி – குடித்து, குலா அ – வளைந்துள்ள, வல்வில் – வலியவில்லினையுடைய, கொடுநோக்கு – கொடுமையான பார்வையுடைய, ஆடவர் – ஆண்மைமிக்க வேடர்கள், புலா அல் – முடைநாற்றம் நீங்காத, கையர் – கைகளையுடையராய், பூசாவாயர் – வாய்கழுவாதவாயினை உடையராய், ஓரா அ – ஓயாது, உருட்டும் – விட்டுவிட்டு ஒலிக்கும் (தன்மையுனையுடைய) குடுமி – உச்சியினையுடைய, குராலொடு – கோட்டான் மிக்க, மராஅம் – வெண்கடம்ப மரங்கள் மிகுந்த, சீறுஊர்மருங்கில் – சிறிய ஊர்ப்பக்கத்தே, தூங்கும் – உறங்கும், செம்நுதல் – சிவந்த நெற்றியிதழீஇ – வேங்கட மலையைச் சூழ்ந்துள்ள , வெம்முனை – கொடிய இடத்தினையுடைய, அரும்சுரம் அரியசுரவழியை, இறந்தோர் – கடந்தோர் நம்மினும் நம்மைவிட, வலிதா – உறுதியானதாக, தூக்கிய – ஆராய்ந்த, பொருள் – செல்வம்,

 (உ அடிகள் – க-ங)

 புகையின் – புகையைப்போல, பொங்கி – மிகுந்து, வியல் – அகன்ற, விசும்பு – வானில், உகந்து – உயர்ந்து, பனிஊர் – பனியானதுசூழும்; அழல்கொடி – தீச்சுடரை, கடுப்ப – ஒப்ப, தோன்றும் – காணப்படும், இமயச்செவ்வரை – இமயமாகிய சிவந்த மலையை, மானும்கொல்லோ – ஒக்குமோ? அன்றி

 (ங அடிகள் -ச-எ)

 பல்புகழ்நிறைந்த – பலவகையான செயல்களால் பல புகழ்மிகுந்த , வெல்போர் – போரில் வெல்லும் திறன்மிகுந்த, நந்தர் – நந்தர் என்னும் அரசமரபினர், சீர்மிகு – பெருமைமிகும், பாடலி – பாடலிபுரத்தின் கண்ணேகூடி, கங்கைநீர்முதல் – கங்கைநீரின்கண், கரந்த – ஒளித்துவைத்த, நிதியம் கொல்லோ – செல்வமோ, எவன்கொல் – அவ்விரண்டும் அல்லவானால் நம்மைவிட்டுப் பிரிந்தது என்ன காரணம்? வாழி – வாழ்வாயாக! தோழியே.

cave01

 ஆராய்ச்சிக்குறிப்பு:

 நந்தர் செல்வத்தைப் பற்றி இதற்கு முன்னுள்ள பாடலில் குறிப்பிடப்பட்டதையறிந்தோம். இதில் நந்தர் தம் செல்வத்தை, கங்கையில் ஒளித்து வைத்த கதை கூறப்படுகின்றது.

 தனநந்தன் என்பவன் செல்வத்தைத் தேடுவதிலேயே காலத்தைக்கழித்து, நாட்டில், தோல், பிசின், மரம், கல் முதலியவற்றின் மீதும் வரிவிதித்து எண்பதுகோடிக்குமேல் சேர்த்து கங்கைநடுவில் உள்ள ஒரு மலைப்பாறையின் குகையில் ஒளித்து வைத்தானாம். (மகாவமிசம்)

 இமயம்பனிமலையாதலின் சில நேரங்களில் கதிரவன் ஒளியால் பொன்மயமாகவும் தோன்றும். பொன்மலை என்ற பெயரும் உண்டு. பனிசூழுவது புகைப்படலம் போன்றுள்ளது என்பது முற்றிலும் பொருத்தமான உவமை.

 அவர் தேடச் சென்ற பொருள், இமயலை போல மிகுந்ததா? நந்தன் ஒளித்த செல்வம்போல் மிகுந்ததா? என்று கேட்டதன் நயம் அறியற்பாலது.

 உகப்பு – உயர்வு : இப்பொழுது மகிழ்ச்சி என்ற பொருளிலும், பொருத்தம் என்ற பொருளிலும் இச்சொல் வழங்கப்படுகின்றது.

 தோப்பி: நெல்லினின்றும் எடுக்கப்பட்டகள்; வீட்டில் செய்யப்பட்டது. “இல்லடுகள்ளின் தோப்பி பருகி” என்று பெரும் பாணாற்றுப்படையில் கூறப்படுகின்றது. “பாப்புக் (பாம்பு) கடுப்பன்னதோப்பி” எனப்பாராட்டப்படுகின்றது.