(பங்குனி 30, தி.ஆ.2045 / 06, ஏப்பிரல் 13, 2014 இதழின் தொடர்ச்சி)

கரு “நந்தன் வெறுக்கை  பெற்றாலும் தங்கார்”

– சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

elephant-and-tiger02

(தலைவன் பிரிந்தான். தலைவி வருந்தினாள். தோழி ஆற்றினாள்)

 தலைவி: தோழி! பாணரை விடுத்தோம். புலவர்கள் சென்றார்கள். தலைவனை அடைந்தனரோ இல்லையோ?

 தோழி: அம்ம! அவரை அடைந்திருப்பார். உன் துயர் நிலையைக் கூறுவர். அவரை எண்ணி எண்ணி இளைத்துள்ள நிலையை எடுத்து இயம்புவர்.

 தலைவி: என்ன கூறியும் என்ன பயன்? அவர் எந்நிலையில் உள்ளாரோ?

 தோழி: நிலை என்ன?  மேற்கொண்டவினை முடிந்ததும் விரைவில் திரும்புவர்.

 தலைவி: அதுதான் என்ன உறுதி? ஒரு செயலில் வெற்றி பெற்றால் இன்னொரு செயலில் இறங்கத்தூண்டும். பிறகு அதில் வெற்றி கண்டால் பிறிதொன்றை நாடச் செய்யும். ‘வெற்றி’ என்பது எவரைத்தான் ஆட்டவில்லை.

 தோழி: அப்படிக் கருதற்க அவரை: நந்தன் என்ற வடநாட்டு அரசன் தேடிவைத்த செல்வம் போன்ற பெருஞ்செல்வத்தைப் பெற்றாலும் அங்கேயே தங்கிவிடமாட்டார். சென்ற இடம் நெடுந்தொலைவில் உள்ளது.

 தலைவி: போகப்போகத் தொலையாதவழி என்றார். வழி எல்லாம் எவ்வாறு இருக்குமோ?

 தோழி: மலையிடங்களில் செல்வதென்றால் எளிதல்லதான். காற்றினும் விரைந்து செல்லும் தேர்ப்படையையுடைய கோசர்கள் மோகூரையாண்ட பழையனை வெல்ல நினைத்தனர். பழையன் பணிந்து வரவில்லை. கோசர்கள் தனியே அவனை வெல்ல முடியாது என நினைத்து, மோரியர் என்பவரைத் துணைக்கு அழைத்தனர்.

 தலைவி: மோரியரா?

 தோழி: ஆமாம், அவரை மௌரியர் என்றும் கூறுவர். அவர்களுடைய தேர்ப்படை தடையின்றிச் செல்வதற்கு காடுசெடிகளை வெட்டி வழியமைத்துள்ளனர். அவ்வழியே இவர் செல்வார்.

 தலைவி: யானைகள் மிகுதியுண்டாமே.

 தோழி: ஆமாம் யானைகள் என்றால், அவற்றைப்பற்றி என்ன என்று கருதுகின்றீர்? புலியைக் கொன்றுவிட்டு அச்சமின்றி தங்கிக் கொண்டிருக்கும் தேக்குமரச் சோலையில்.

 தலைவி: அப்படியா இந்தக் களிறு முன் (தலைவர் முன்) அந்த யானைகள் அஞ்ச வேண்டியது தானே.

 தோழி: ஆமாம்; அதற்கென்ன தடை. களிறும் அஞ்சும் நம் தலைவர் விரைவில் திரும்புவர். பாலையும் ஒழியும். இளைத்துப் போன உனது உடலும் உள்ளமும் பூரிக்கும். கழலும் வளைகளும் இறுகப் பெறும் மகிழ்வாய் வாழிய.

 ****

  பாடல்

 அகநானூறு 251

 தூதும் சென்றன; தோளும் செற்றும்

 ஓதி ஒண்நுதல் பசலையும் மாயும்;

 வீங்கிழை நெகிழச் சாஅய்ச் செல்லலொடு

 நாம் படர் கூரும் அருந்துயர் கேட்பின்

 நந்தன் வெறுக்கை எய்தினும் மற்று அவண்

 தங்கலர்; வாழி! தோழி! வெல்கொடித்

 துணைகால் அன்ன புனை தேர்க்கோசர்

 தென்மூது ஆலத்து அரும்பணைப் பொதியில்

 இன்னிசை முரசம் கடிப்பு இகுத்து இரங்கத்

 தெம்முனை சிதைத்த ஞான்றை மோகூர்

 பணியாமையின் பகைதலை வந்த

 மா கெழுதானை வம்ப மோரியர்

 புனை தேர் நேமி உருளிய குறைத்த

 இலங்கு வெள் அருவிய அறைவாய் உம்பர்

 மாசில் வெண்கோட்டு அண்ணல் யானை

 வாயுள் தப்பிய அருங்கேழ் வயப்புலி

 மாநிலம் நெளியக் குத்திப் புகலொடு

 காப்பு இல வைகும் தேக்கு அமல் சோலை

 நிரம்ப நீள் இடைப் போகி

 அரம் போழ் அவ்வளை நிலைநெகிழ்த் தோரே.

 கருத்துமுடிபு:

 க தூதும் சென்றன …. மாயும் (அடிகள் க-உ)

 உ வெல்கொடி….நிலைநெகிழ்த்தோர் (அடிகள் சு-உம்)

 ங வீங்கு இழை …. வாழி தோழி (அடிகள் ங-சு)

சொற்பொருள்

 க (அடிகள் க-உ)

 தூதும் – நம் காதலர்பால் போகவிட்ட தூதர்களும் சென்றன சென்றுள்ளார்கள். (சென்றதூதர்கள் அவரைக்  கொண்டு வருவதில் தவறார்கள் ஆதலின் அவ்வுறுதியால்) தோளும் – அவர் பிரிவால் வாடிய தோள்களும், செற்றும் – மகிழ்ச்சியால் பூரிக்கும், ஓதி – ஒப்பனை செய்து கொள்ளாமையால் கத்தரிக்காது விடப்பட்ட நெற்றிமயிர் மறைக்கும், ஒண்- அழகால் ஒளிவீசும், நுதல் – நெற்றியையுடைய முகத்தின் கண், பசலையும் – தலைவன் பிரிவின் கண் மேனியில் தோன்றும் பொன்னிறமான புள்ளிகளும், மாயும் – மறையும்.

 உ (அடிகள் கூ-உ0)

 வெல்கொடி – வெற்றிக்கொடி பறக்கும், துணை – விரைந்து செல்லும், கால் அன்ன – காற்றை ஒத்த, புனை – பலவகையாலும் அழகுபடுத்தப்பட்டுள்ள, தேர் – தேர்ப்படைமிக்க, கோசர்-கோசர் என்ற வீரர் கூட்டத்தினர், தொல்முது – மிகப்பழமையான, ஆலத்து – ஆலமரத்தின், அரும்பணை – அரிய கிளைகள் மிக்க, பொதியில் – மன்றத்தே, இன்இசை – இசை ஒலியை எழுப்பும், முரசம் – வெற்றியை அறிவிக்கும் முரசம், கடிப்பு – குறுந்தடியால், இகுத்து – அடிக்கப்பட்டு, இரங்க – ஒலிக்க, தெவ்முனை – பகைவர் படைமுனையை, சிதைத்தஞான்றை – அழித்தபொழுதில், மோகூர்-மோகூர் நாட்டு அரசனாகிய பழையன், பணியாமையின்-கீழ்ப்படியாததனால், பகைதலைவந்த – பகைமைகொண்டு படையெடுத்து வந்த, மாகெழு – பெருமைமிக்க, தானை- படையினையுடைய, வம்ப  – நாட்டிற்குப் புதியவர் ஆகிய, மோரியர் – மோரியர் (மௌரியர்) என்பார், புனைதேர்-அழகுபடுத்தப்பட்ட தேர்களின், நேமி – உருளைகள், உருளிய- உருண்டு தடையின்றிப் போகுமாறு, குறைத்த – காடு மேடுகளை மட்டமாக்கிய (வழிஉண்டுபண்ணிய), இலங்கு – விளங்குகின்ற வெள்-வெண்மையான, அருவிய-அருவிகளையுடைய, அறைவாய்- பாறைகளின், உம்பர் – மேல், மாசுஇல் – குற்றம் இல்லாத வெண் கோட்டு- வெண்மையான பற்கொம்புகளை (தந்தங்களை) யுடைய, அண்ணல் யானை – பெருமை பொருந்திய யானை, வாயுள்தப்பிய-தனது வாயினின்றும் பிழைத்த, அருங்கேழ் அரிய நிறத்தினையுடைய, வயப்புலி – வலியபுலியை, மாநிலம் – உலகம், நெளிய – போர் செய்யுங்கால் அசைய (யானையும் புலியும் போர் செய்யுங்கால் அவற்றின் முழக்கத்தால் உலகமே  அசைந்து நடுங்குவது போல் காணப்படும்), குத்தி – குத்திக்கொண்டு, புகலொடு – இன்னும் போர் விருப்பத்தோடு, காப்பில் – பாதுகாவல் கொள்ளாமல் (அச்சமில்லாது) வைகும்-தங்கும், தேக்கு அமல் – தேக்கு மரங்கள் நிறைந்துள்ள, சோலை – சோலைகள் மிக்க, நிரம்பா நீள் இடை – நடக்க நடக்க நிறைவுறாத நீண்ட வழியில், போகி-சென்று, அரம்போழ் – அரத்தால் அறுத்துத் தேய்த்துச் செய்யப்பட்ட, அம்வளை – அழகிய வளைகளின், நிலை – கைகளில் தங்கும் நிலையை, நெகிழ்த்தோர் – நெகிழச்செய்தார், (அவர் பிரிவால் இளைக்கச்செய்து கைகளில் அணிந்துள்ள வளையல்கள் கழன்று விழச்செய்தோர்.)

 (ங அடிகள் ங: சா)

 வீங்கு இழை – இறுகலாக இருந்த அணிகள், நெகிழ – நெகிழ்ந்து கழல. சாய் – மெலிந்து, செல்லலொடு – உடல் துன்பத்தோடு, நாம்படர்கூரும் – நாம் நினைத்து வருந்தும், அரும்துயர் – அரிய மனத்துன்பத்தினையும், கேட்பின் – தூதுவர் வாயிலாகக் கேட்டால், நந்தன் வெறுக்கை – நந்தன் என்னும் அரசன் தேடிவைத்த செல்வத்தை ஒத்த பெருஞ்செல்வத்தை, எய்தினும் அடைந்தாலும், மற்று – இனி, அவண் – அவ்விடம், தங்கலர் – தங்கி இரார் (ஆதலின்) வாழி தோழி – வாழ்வாயாக தோழியே.

 ஆராய்ச்சிக்குறிப்பு: தலைவன் தலைவியை விட்டுப்பிரிந்து செல்வதை இரண்டு வகையாக்கினர். அவை திருமணம் நடைபெறுவதற்கு முன் பிரிதலும், திருமணம் நிகழ்ந்த பின் பிரிதலுமாம். தலைவன் பிரிவதற்குரிய காரணங்கள்: சிறப்புக்கல்வி பெறல், பகையை வெல்லுதல், தூது, பொருள் தேடுதல், நாடு காவல், வேந்தற்கு உதவியாகச் செல்லுதல் என ஆறுவகைப்படும். அவற்றுள், கல்வி, தூது, பகை இவற்றின் காரணமாகப் பிரிவோர், தாம் காதலித்த தலைவியை மணம் செய்துவிட்டே பிரிவர். பொருள் வயின்பிரிதலும், வேந்தற்கு உதவியாகச் செல்லுதலும், நாடுகாவதற்குப் பிரிதலும், திருமணம் நிகழ்வதற்கு முன்பே நிகழக்கூடியன. பிரிந்த தலைவன்பால் தலைவி தூது அனுப்புதல் என்பது, தலைவன் மணஞ்செய்த பின்னர் பிரிந்தால்தான் முடியும். மணம் செய்வதற்குமுன் பிரிந்தால் தலைவி தூது அனுப்புதல் என்பது இல்லை. ஆகவே இப்பாடலில் கூறப்படுகின்ற தலைவி மணம் நிகழ்ந்தபின் தலைவன் பிரிந்தபின் வருந்தும் நிலையில் உள்ளவளாம்.

 தலைவன் ஓதல். பகை, தூது என்றவற்றுள்  எது பற்றி பிரிந்தவன் என்று அறியமுடியவில்லை. “நந்தன் வெறுக்கை” எய்தினும் அங்கு தங்கமாட்டார் என்பதனாலும் நீண்ட வழிச்செலவை (பயணம்) ஏற்றுள்ளார் என்பதனாலும் வேற்று நாட்டுக்குத் தூதாகச் சென்றுள்ள தலைவன் என்று கருத இடம் தருகின்றது.

 நந்தன் வெறுக்கை: கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வடநாட்டில் பாடலிபுத்திரத்தைத் தலைநராகக் கொண்டு நந்த மரபினர் அரசாண்டனர். அவர்கள் பெருஞ்செல்வம் படைத்திருந்தனர் என்பது இந்திய  வரலாற்றிலும் கூறப்படுகின்றது. (Political History of Ancient India, page 142)

 மாமூலனார் அதைக்குறிப்பிடுவதிலிருந்து, அக்காலத்தில் வடநாட்டு வரலாற்றையும் நன்கு அறிந்திருந்தார் என்று அறிகின்றோம்.

 மோரியர்: நந்த மரபினர்க்குப் பின்னர் வடநாட்டில் பேரரசு கொண்டவர்கள் மௌரிய மரபினர். மௌரிய மரபினரே இங்கு மோரியர் என்று குறிப்பிடப்படுகின்றனர் போலும். ‘வம்ப மோரியர்’ என்றால் புதிய மோரியர் என்று பொருள். அஃதாவது புதிதாகச் செல்வாக்குப் பெற்றவர்கள். ஆங்கிலத்தில் Upstarts என்று அழைப்பர். இத்தொடர் சந்திர குப்தனைத்தான் குறிக்கும் என்பர் வரலாற்று நூலார்.

 கோசர் என்பவர்கள் துளுநாட்டை ஆண்டவர்கள். அவர்கள்  மோகூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பழையன் என்பவனை வெல்வதற்காக மோரியர்களைத் துணைக்கு அழைத்ததாகக் குறிப்பிடப்படும் இவ்வரலாறு விளக்கமாகத் தெரியவில்லை. ‘மன்றம்’ என்னும் பொருளைத் தரும்,  ‘பொதியில்’ என்பதை பொதியமலை என்று பொருள்கொண்டு மௌரியர்கள் பொதிய மலைவரை படையெடுத்து வந்தனர் என்று  கூறுவார்களும் உளர்.

 யானையும் புலியும்: யானை புலி என்றவற்றுள் எது ஆற்லுடையது என்ற கூறுவதற்கு அரிது. இப்பாடலுள் யானையானது புலியை வென்றதாகக் கூறப்படுகின்றது. யானையைப் புலிவெல்லுதலும் புலியை யானை வெல்லுதலும் உண்டு போலும்! இதனாலேயே ‘புலிகொல் யானை’, என்ற தொடர்க்கு ‘புலியால் கொல்லப்பட்ட யானை’ புலியைக்கொன்ற யானை’ என்ற இரு பொருளும் கூறப்படுகின்றது போலும்.

 அரம்போழ்வளை: சங்குகளை அறுத்து வளையல் செய்தல் பண்டைத்தமிழ்நாட்டில்  மிகுதியும் உண்டு. அரத்தால் அறுத்துச் செய்யப்பட்டமையின் அரம்போழ் வளை என்று கூறப்படுகின்றது இன்று வளையல் தொழில் தமிழ்நாட்டில் மங்கிக் கிடக்கின்றது.