மாமூலனார் பாடல்கள் – 18 : சி.இலக்குவனார்
(சித்திரை 21, தி.ஆ.2045 / 06, மே 04, 2014 இதழின் தொடர்ச்சி)
18. பழிதீர்மாண் நலம் தருகுவர் – தோழி
– சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
தலைவன் பிரிவால் வருந்தும் தலைவியை நோக்கித் தோழி கூறுகின்றாள்:
மழைக்காலத்தில் பூக்கும் பிச்சிப் பூப்போன்ற கண்களையும் மணம் வீசும் கூந்தலையுமுடைய நல்லாய்! தலைவர் வேற்றுநாடுதான் சென்றுள்ளார். வீரக்கழலை அணிந்துள்ள புல்லி என்பானின் பாதுகாவலுக்குட்பட்டுள்ள வேங்கடமலையைக் கடந்துதான் செல்ல வேண்டும். அம்மலைப் பக்கங்களில் நீர் என்பதே இராது. மலையில் உள்ள நீர்ச்சுனைகள் வறண்டு காய்ந்து போயிருக்கும். மரக்கிளைகள் வாடி எரிந்து கருகிப்போகும். மூங்கில்கள் வெயிலால் எரியும். பெரிய யானை – வேங்கையை வென்ற யானை – வெப்பம் தாங்காது வாடி, மரங்களுக்கிடையே பிடியோடு தங்கி இருக்கும். உப்பு வணிகர்கள் அங்குச் செல்லும் காலத்து, பாறைகளை இடித்துக் கிணறு தோண்டுவர். அதில் ஊறும் நீர் போவார் வருவார்க்குப் பயன்படும். நடப்பதற்கு அரிய காடுதான். அங்கு வடுவர்கள் வில்லையும் தாங்கி நிற்பர். கள்ளைக் குடித்து மகிழ்ந்து ஆரவாரிப்பர்.
பொருள் ஈட்ட வேண்டுமென்ற நோக்கத்தால் இவ்விடங்களை எல்லாம் கடந்து சென்றிருப்பாரானாலும், விரைவில் திரும்பி வந்து நீ இழந்த அழகைத் தந்து இன்ப வாழ்வை நல்குவர்.
கஅ. பாடல்
அகநானூறு 295 பாலை
நிலம் நீர் அற்று நீள் சுனைவறப்பக்
குன்று கோடு அகையக் கடும்கதிர் தெருதலின்
என்றுழ் நீடிய வேய்படு நனந்தலை
நிலவு நிற மருப்பில் பெருங்கை சேர்த்தி
வேங்கை வென்ற வெருவெரு பணைத்தோள்
ஓங்கல் யானை உயங்கி மதம் தேம்பிப்
பன்மர ஒரு சிறைப்பிடி யொடு வதியும்
கல்லுடையதர கானம் நீந்திக்
கடல் நீருப்பின் கணம் சால் உமணர்
உயங்கு பகடு உயிர்ப்ப அசைஇ
முரம்பு இடித்து
அகலிடம் குழித்த அகல்வாய்க்கூவல்
ஆறுசெல் வம்பலர் அசைவிடஊறும்
புடையல், அம் கழற்கால் புல்லி குன்றத்து
நடையருங்கானம் விலங்கி நோன் இலைத்
தொடையமை பகழித்துவன்று நிலைவடுகர்
பிழியார் மகிழர் கலிசிறந்து ஆர்க்கும்
மொழி பெயர் தேஎம் இறந்தனர் ஆயினும்
பழிதீர் மாண்நலம் தருகுவர் மாதோ
மாரிப் பித்திகத்து ஈர்இதழ் புரையும்
அங்கலுழ் கொண்ட செங்கடை மழைக்கண்
மணம் கமழ் ஐம்பால் மடந்தை நின்
அணங்குநிலை பெற்ற தடமென் தோளே.
கருத்து முடிபு:
க. மாரிப்பித்திகத்து …….மடந்தை (அடிகள் ககூ.உக)
உ. நிலம் நீரற்று …இறந்தனராயினும் (அடிகள் க-கஎ)
கூ. நின் அணங்குநிலை தடமென்தோள்
பழிதீர் மாண்நலம் தருகுவர் மாதோ.
சொற்பொருள்:
க. (அடிகள் ககூ-உக)
மாரி – மாரிக்காலத்தில் (மழைக்காலத்தில்) பூக்கும், பித்திகத்து – பிச்சிமலரின், ஈர்இதழ் – குளிர்ந்த இதழை, புரையும் – ஒக்கும், அம் – அழகிய, கலுழ்கொண்ட – கலங்கியுள்ள, செம்கடை – சிவந்த நடையினையுடைய, மழைக்கண் – மழைத்துளி போல் கண்ணீர் சொட்டும் கண்ணினையும்’ மணங்கமழ் – மணம் வீசும், ஐம்பால் – ஐந்து வகையாக முடிக்கத்தகும் கூந்தலினையும் உடைய, மடந்தை – பெண்ணே!
உ. (அடிகள் க-கஎ)
நிலம் நீர் அற்று – நிலத்தில் நீர் இல்லாது, நீள்சுனை – ஆழமான சுனைகள், வறப்ப – வற்றிப்போகவும், குன்று – மலையில், கோடு-மரக்கிளைகள், அகைய – வெயில் வெப்பத்தால் தீப்பற்றி எரியவும், கடும் – கொடிய, கதிர் – (ஞாயிற்று) வெயில், தெறுதலின் – எரித்தலின், என்றூழ் – கோடை, நீடிய – மிகுந்த, வேய் – மூங்கில்கள், படும் – காய்ந்து அழியும், நனந்தலை – அகன்ற இடத்தில், நிலவு – நிலாப்போலும் ஒளிவீசும் நிறத்தினையுடைய, மருப்பில் – கோடுகளுக்கிடையே (தந்தங்களுக்கிடையே), பெரும்கை – பெரிய துதிக்கையை, சேர்த்தி – வைத்துக்கொண்டு, வேங்கை – வேங்கைப் புலியை, வென்ற – கொன்று வென்ற, வெருவரு – அஞ்சத்தகுந்த, பணைத்தோள் – பெரிய தோள்கள் பொருந்திய, ஓங்கல் யானை – மலைபோன்ற உயர்ந்தயானை, உயங்கி – வருந்தி, மதம் தேம்பி – மதம்வாடி, பன்மர – பலமரங்கள் மிக்க, ஒரு சிறை – ஒரு பக்கத்தில், பிடியொடு – பெண் யானையுடன், வதியும் – தங்கும், கல்லுடை – கற்கள் நிறைந்த, அதரம் வழியினையுடைய, கானம் காட்டை. நீந்தி – கடந்து.
கடல்நீர்- கடல்நீரினின்றும் எடுக்கப்பட்ட, உப்பின் – உப்பினைக் கொண்டு செல்லும், கணம் சால் உமணர் – கூட்டம் மிகுந்த உப்பு வாணிகர்கள், உயங்கு – வருந்துகின்ற, பகடு – பொதிமாடுகள், உயிர்ப்ப – இளைப்பாற, அசைஇ – தங்கி, மூரம்பு – பாறை நிலத்தை, இடித்து – உடைத்து, அகல்இடம் – அகன்ற இடத்தில், குழித்த – தோண்டிய, அகல் வாய் – அகன்ற வாயினையுடைய, ஆறுசெல் – வழியில் செல்லுகின்ற, வம்பலார் – புதிய மக்கள், அசை விட, தளர்ச்சி நீங்க, ஊறும் – நீர்சுரக்கும்.
புடையல் – ஒலிக்கின்ற; அம்- அழகிய, கழல் கால் – வீரக்கழலணிந்த காலையுடைய, புல்லி – புல்லி என்பானது, குன்றத்து – வேங்கடமலையச்சார்ந்த, நடை அரும்கானம் – நடப்பதற்கு அரிய காட்டை, விலங்கி – குறுக்கே கடந்து, நோன்சிலை – வலிய வில்லினையும், தொடை அமைபகழி – தொடுத்தற்குக் குறையாது அமைந்த அம்புகளையும் கொண்டு, துவன்றுநிலை வடுகர் – நெருங்கி நிற்கும் வடுகர்கள், பிழி ஆர் – கள்ளையுண்ட, மகிழர் – மகிழ்ச்சியையுடையவராய், கலிசிறந்து – செருக்குமிக்கு, ஆர்க்கும் – ஆரவாரிக்கும், மொழிபெயர் தேஎம் – மொழி வேறுபட்ட நாடுகளை, இறந்தனர் ஆயினும் – கடந்து சென்றனராய் ஆயினும்,
ங (அடிகள் உஉ, கஅ)
நின் – உன்னுடைய, அணங்குநிலை பெற்ற- தலைவர் பிரிவால் வாடிய துன்பம் பொருந்திய, தடமென் தோள் – பெரிய மெல்லிய தோளின், பழிதீர் – குற்றம் நீங்கிய, மாண்நலம் – சிறந்த நலத்தை (இன்பத்தை) தருகுவர் – தந்தருள்வர்.
ஆராய்ச்சிக்குறிப்பு:-
இப்பாடலில் திருவேங்கட மலை, புல்லி என்பான் ஆட்சிக்கு உட்பட்டிருந்ததையும், அதற்கு அப்பால் உள்ள நாட்டை மொழி பெயர் தேயம் என்றும் குறிப்பிடுகின்றார், வடுகர் மிக்க இடம் என்றும் அவர்கள் போர்க்கோலத்துடன் நிறைந்திருப்பர் என்றும் கள்ளுண்டு களித்து ஆரவாரிப்பர் என்றும் கூறுகின்றார். இவர் காலத்தில் திருப்பதியை எல்லையாகக் கொண்டு திருப்பதியில் வடுகர்கள் நிறைந்த பாதுகாப்புப்படையை, வைத்து அப்பொறுப்பைப் புல்லியிடம் விட்டிருந்தனர் போலும் தமிழ் மூவேந்தர்கள்.
வெப்பமிகுந்து யானை வாடி வதங்கும் நிலை மிக அழகாகக் கூறப்பட்டுள்ளது உப்புவாணிகர் கடல்நாட்டில் விளையும் உப்பைப் பிற இடங்களுக்குப் பொதிமாடுகள் மீது ஏற்றிச் செல்கின்ற வழக்கம் கூறப்படுகின்றது.
தலைவனை நினைந்து வருந்திக் கொண்டிருக்கும் தலைவியின் கண்களுக்கு பிச்சிப் பூ உவமையாகக் கூறப்படுவதன் நயம் பாராட்டத்தகுந்தது. “ஐம்பால்” என்பது பற்றி முன்னரே விளக்கப்பட்டுள்ளது.
(தொடரும்)
Leave a Reply