(சித்திரை 14, தி.ஆ.2045 / 06, ஏப்பிரல் 27, 2014 இதழின் தொடர்ச்சி)

– சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

 hillway01

 

கஎ. செய்வது என்ன என்று ஆராய்வாய்” – தலைவி

  பிரிந்த தலைவன் வரவில்லையே என வருந்தினாள் தலைவி. தலைவியின் வருத்தம்கண்ட தோழியும் மிகவும் வருந்தினாள். அத்தோழியை நோக்கித் தலைவி கூறுகின்றாள்.

   அன்புள்ள தோழியே! அவர் (தலைவர்) பிரிவேன் என்றார் அன்று கூறிய  மொழி – ஓயாது கூறிய உறுதிமொழி – “நின்னை விட்டுப் பிரியேன்; பிரிந்தால் ஒருபொழுதும் தரியேன்” என்ற வாய்மொழி, தவறிவிடுமே என்றேன். அதற்கும் அஞ்சவில்லை, சென்றுவிட்டார்.

   அவர் சென்றார். அவரால் நமக்கு உண்டான பழி இங்குப் பறையடித்துக் கூறுவதுபோல் முழங்குகின்றது. வானளாவ உயர்ந்த பனிசூழும் குன்றுகளைக் கடந்து சென்றுள்ளார். அம்மலைப்பக்கங்களில் எல்லாம் காடுகளைவெட்டி வழியுண்டாக்கப்பட்டிருக்கின்றது. ஏன் என்று அறிவாயா? மோரியர்கள் தெற்கு நோக்கிப்படையெடுத்து வந்தனராம். அப்பொழுது தமிழ்நாட்டில் சிறந்த பேரரசர்கள் ஆண்டு வந்தனர். வடவேங்கடத்திற்கு அப்பால் உள்ள மக்கள் வடுகர் எனப்பட்டனர். அவர்கள் தெற்கே உள்ளவர்களோடு மாறுபாடுகொண்டு மோரியர்கட்கு உதவி புரிந்தனர். எவ்விதம்? காடுகளை வெட்டி வழியமைத்தனர். வடுகர் விற்போரில் வல்லவர். வில்லில் மயில் தோகையைக் கட்டியிருப்பர். அவர்விடும் அம்புகள்  விண்ணையும் பிளந்து செல்லும். விரைந்து பாய்கின்றபோதே பேரொலி எழும்புமாம். அந்த வடுகர்கள் உதவியும் தென்னாட்டை வெல்ல முடியாது திரும்பினர்.

 நம் தலைவர் அவ்வழிகளை எல்லாம் கடந்து சென்றிருப்பார். இனிச்செய்யவேண்டியது என்ன என்பதை ஆராய்வாய்.

 

 க எ. பாடல்

 அகநானூறு 281

 செல்வது தெரிந்திசின் தோழி! அல்கலும்

 அகலுள் ஆங்கண் அச்சறக்கூறிய

 சொல் பழுதாகும் என்றும் அஞ்சாது

 ஒல்கு இயல் மடமயில் ஒழித்த பீலி

 வான் போழ் வல்வில் சுற்றி நோன்சிலை

 அம்வார் விளிம்பிற்கு அமைந்த நொவ்வியல்

 கணைகுரல் இசைக்கும்  விரைசெலல் கடுங்கணை

 முரண் மிகு வடுகர் முன்னுற மோரியர்

 தென்திசை மாதிரம் முன்னிய வரவிற்கு

 விண்ணுற வோங்கிய பனி இரும் குன்றத்து

 ஒண் கதிர்த் திகிரி உருளிய குறைத்த

 அறை இறந்தவரே சென்றனர்

 பறை யறைந்தன்ன அலர் நமக்கு ஒழித்தே;

 கருத்து முடிபு:

 க தோழி அல்கலும் …..அஞ்சாது (அடிகள் க-ங)

 உ ஒல்கியல் …..அறையிறந்தது (அடிகள் ச-கஉ)

3.  பறையறைந்தன்ன….அவரோ சென்றனர்  (அடிகள் கஉ-கங)

 ச செய்வது தெரிந்திசின்.

 சொற் பொருள்

 அடிகள் க-ங

 தோழி – தோழியே, அல்கலும் – நாள்தோறும், அகல் உள்ஆங்கண்- அகன்ற ஊரிடத்தின்கண், அச்சு – அச்சும் (பயம்), அற – நீங்குமாறு, கூறிய  – சொல்லிய, சொல் – உறுதி மொழி, பழுது ஆகும்- பொய்யாகும், என்றும் – என்று சொல்லியும், அஞ்சாது-அதற்கு அஞ்சாமல்

 ஒல்கு இயல் – அசையும் தன்மை வாய்ந்த, மடமயில் – இளமைமிக்க அழகிய மயில், ஒழித்த – தானே கழித்த, பீலி – தோகையை  வான்போழ் – வீண்பிளக்க அம்பு செலுத்தும், வல்வில் – வலிய வில்லில், சுற்றி வைத்துக்கட்டி, நோன்சிலை – அந்த வன்மையான வில்லின், அம்வார் – அழகிய நீண்ட நாணின், விளிம்பிற்கு அமைந்த ஓரத்தில் பொருந்திய நொஇயல் – துன்பத்தைக் கொடுக்கும் இயற்கைமிக்க, கனைகுரல் – (விரைந்து செல்லும்போது) பேர் ஒலியை, இசைக்கும் – உண்டு பண்ணும், விரை செலல் – விரைந்து   செல்லும் செலவினையுடைய, கடும்கணை – கொடிய அம்புகளை வைத்துள்ள, முரண்மிகு – மாறுபாடு மிக்குள்ள, வடுகர் வடக்கேயுள்ளவர்கள், முன்உற – முன்னே துணையாகிவர, மோரியர் – மோரியர்கள், தென்திசை மாதிரம் – தெற்குப் பகுதியில் உள்ள நாடுகளை, முன்னிய – கைப்பற்ற நினைத்த, வரவிற்கு – வருகையின் பொருட்டு, விண்ணுற ஓங்கிய – வானளாவ உயர்ந்துள்ள, பனி – பனிதவழும், இரும்குன்றத்து – பெரிய மலையிடத்தில், ஒண்கதிர் – ஒளிக்கதிர்வீசும் பட்டை பொருத்தப்பட்டுள்ள, திகிரி – தேர் உருளைகள், உருளிய நன்றாகத்தடையின்றி உருண்டு ஓடுமாறு, குறைந்த – வெட்டிய, அறை இறந்து – பாறைப்பக்கங்களைக்கடந்து, பறை யறைந்து அன்ன – பறைகொட்டினாற்போல (எவரும் அறியும்), அலர் – பலர்கூறும் பழியினை, நமக்கு ஒழித்து-நம்மிடம் சேருமாறு விடுத்து, அவரோ – தலைவரே, சென்றனர்.

 செய்வது – இனிச் செய்ய வேண்டியதை, தெரிந்திசின் – ஆராய்ந்து காண்பாயாக.

 ஆராய்ச்சிக் குறிப்பு:

 அச்சறக் கூறிய சொல்: காதலன் காதலியிடம் அவள் அச்சத்தைப்போக்குமாறு கூறிய உறுதிமொழி: “நின்னிற் பிரியேன்; பிரியில் தரியேன்”

 மிக மிகப் பழங்காலத்தில் இவ்வித உறுதி மொழி கொண்டு தலைவனும் தலைவியுமாக இணைந்து வாழத் தொடங்கினர். பின்னர், கால இயல்பில் சில ஆடவர் ஒரு மகளிரை விடுத்து இன்னொரு மகளிரைக் காதலிக்கத் தொடங்கி முற்பட மணந்தவளை முற்றிலும் மறந்து ஒதுக்கித்தள்ள முற்பட்ட காலத்தில்தான் பெரியோர் மண நிகழ்ச்சியைப் பலரும் அறியுமாறு நிகழ்த்திய பின்னரே ஆடவரும் மகளிரும் கணவனும் மனைவியுமாகக் கூடுதல் வேண்டும் என்று வரையறை செய்தனர். “பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் காரணம் என்ப” என்று தொல்காப்பியர் கூறுகின்றார், இங்கு ‘ஐயர்’ என்பதற்கு, தலைவர், பெரியோர், என்ற பொருள்களாகும். ‘கரணம்’ என்றால் மணநிகழ்ச்சி என்பது ஆகும். கணக்கு எழுதுபவர்களைக் கர்ணம் என்று கூறுவதால், கரணம் என்ற சொல் எழுதுதலையும் குறிக்கும் என்று எண்ண இடம் தருகின்றது.

 பொய்யையும் வழுவையும் போக்க வந்த மண நிகழ்ச்சி இன்று பொருளற்ற முறையில் நிகழ்த்தப்படுகின்றது. உறுதி மொழியும் மணமக்கள் உணராத முறையில் பொருள் புரியாதவாறு கூறப்பகின்றது.

 வடுகரும் மோரியரும் – வடுகர் என் போர் திருவேங்கடமலைக்கு வட பக்கத்தில் வாழ்ந்த மக்கள். அவர்கள் ஒரு காலத்தில் தமிழர்களாய் இருந்த போதிலும், வடக்கிருந்து வந்து குடியேறிய மக்களோடு கலந்து, தமிழ்மொழியை வேறுபடுத்தி, உடையிலும் நடையிலும் உரிய மொழியிலும் வேறுபட்டவராக மாறிய மக்கள். அவர்கள் தெற்கேயுள்ள தமிழரோடு மாறுபாடு கொண்டு. வடக்கிருந்து வந்த மோரியருக்குத் துணை புரிந்தனர் போலும், தமிழ்நாட்டின் மீது படையெழுத்து வர உதவினர் போலும், அப்பொழுது மலைப் பக்கங்களிலுள்ள காடுகளை வெட்டி வழியமைத்த செய்தி இப்பாடலில் குறிப்பிடப்படுகின்றது.

 அசோகன் கல்வெட்டில் தமிழ்நாடு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாடு, அசோகன் ஆட்சிக்கு உட்படாத நாடாகவே கூறப்படுகின்றது. ஆகவே வடுகர் உதவியும் வம்புக்கு வந்த மோரியர், அசோகன் ஆட்சிக்கு உட்படாத தமிழர், ஆங்கிலேயர் ஆட்சிக்கு  அடிமைப்பட்டு அல்லலுற்றனர். அதன் பயனாய் தமிழ்நாடு என்று ஒரு தனி நாடு உண்டா? தமிழரசு என்பது கானல் நீர் அல்லவா? என்றெல்லாம் தமிழர்களே கூறத்தொடங்கிவிட்டனர்.

 மாமூலனார் இயற்கை நலனை இனிமையுறத் தீட்டும் செஞ்சொல் புலவர் மட்டுமல்லர். வரலாறு கூறும் வண் தமிழ்ப் புலவராகவும் காணப்படுகின்றார்.

*****