(ஆனி 8, 2045 / சூன் 22, 2014 இதழின் தொடர்ச்சி)

“கண்பனி நிறுத்தல் எளிதோ”

– தலைவி

சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

 

mango_flower01

உச பாடல்.

அகநானூறு 97    பாலை

கள்ளி அம்காட்ட புள்ளி அம் பொறிக்கலை

வறன் உறல் அம் கோடு உதிர வலம் கடந்து

புலவுப்புலி துறந்த கலவுக்குழி கடுமுடை

இரவுக் குறும்பு அலற நூறி நிரைபகுத்து

 

இருங்கல் முடுக்கர்த் திற்றிகொண்டும்

கொலையில் ஆடவர் போலப் பலவுடன்

பெருந்தலை எருவையொடு பருந்து வந்து இருக்கும்

அரும் சுரம் இறந்த கொடியோர்க்கு அல்கலும்

இரும் கழை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த

 

நுணங்கு கண் சிறு கோல் வணங்கு இறைமகளிரொடு

அகவுநர்ப் புரந்த அன்பின் கழல் தொடி

நறவு மகிழ் இருக்கை நன்னன் வேண்மான்;

வயலை வேலி வியலூர் அன்ன நின்

அலர் மூலையாகம் புலம்பப் பல நினைந்து

 

ஆழேல் என்றி தோழி! யாழ என்?

கண்பனி நிறுத்தல் எளிதோ? குரவு மலர்ந்து

அற்சிரம் நீங்கிய அரும்பத வேனில்

அறல் அவிர் வெண் மணல் அகல்யாற்று அடைகரைத்

 

துறை அணி மருது தொகல்கொள ஓங்கிக்

கலிழ்தளிர் அணிந்த இரும்சிணை மா அத்து

இணர் ததை புதுப்பூ நிரைத்த பொங்கர்ப்

புகை புரை அம்மஞ்சு ஊர

நுகர் குயில் அகவும் குரல் கேட்போர்க்கே.

உரைநடைப்படுத்தல்:

க. கள்ளி அம்காட்ட……..யாழ் என் (அடிகள் க-கரு)

உ குரவுமலர்ந்து …….கேட்போர்க்கே (அடிகள் க௬ – உ)

கூ. கண்பனி நிறுத்தல் எளிதோ? (அடி க௬)

****

சொற்பொருள்: க: அடிகள் க-கரு)

கள்ளி – கள்ளிகள் நிறைந்த, அம்காட்ட – அழகியகாட்டினிடத்தே உள்ள, புள்ளி – புள்ளி வடிவமாக அமைந்துள்ள, அம் – Tiger_chasing_a_deer01அழகிய, பொறி-பொறிகளை உடைய, கலை – கலை மானை, வறன் உறல் – வறட்சி பொருந்திய, அம் கோடு – அழகிய கொம்பு, உதிர-ஓடும்போது உதிர்ந்து ஒழிய, வலம் கடந்து – அதன் ஓட்டத்தினைவென்று கொன்று தின்ற, புலவுப்பலி – புலால் விருப்பமுடைய புலி, துறந்த – பசி தீர்ந்த பின், விட்டு விட்டுப் போன, கலவு – மூட்டுவாய், கழி – ஒழிந்த, கடுமுடை – மிகுந்த முடை நாற்றத்தினையுடைய, தசைவீழ்ந்து கிடக்கும் இடத்தில்.

இரவு – இரவில், குறும்பு – காட்டைத் தமக்குப் பாதுகாவலாகக் கொண்டுள்ளோர், அலற – அழுது புலம்ப, நூறி – அவர்களைக் கொன்று, நிறை பகுத்து – தாம் களவில்கொண்டு சென்ற பசுக் கூட்டங்களைப் பங்கிட்டு, இரும் கல் – பெரிய கற்பாறையின், முடுக்கர் – முடுக்கில், திற்றி – இறைச்சியை, கொண்டும் – கிளரித் தின்னும், கொலைவில் – கொலைத் தொழிலைச்செய்வதற்கு வில்லினுடைய, ஆடவர் போல – வீரர்போல, பலஉடன் – பலவாக ஒன்று சேர்ந்தனவாய், பெருந்தலை – பெரிய தலையினையுடைய, எருவையொடு – கழுகுகளோடு, பருந்து – பருந்துகள், வந்து இருக்கும் – வந்து தங்கி இருக்கும் அரும் சுரம் – அரிய பாலை வழியை, இறந்த – கடந்துசென்ற, கொடியோர்க்கு – கொடியராகிய தலைவர் பொருட்டு.

அல்கலும் – நாள்தோறும், இரும் கழை – பெரிய மூங்கில்கள் நிறைந்துள்ள, இறும்பின் – காட்டின் கண், ஆய்ந்து கொண்டு –ஆராய்ந்துகொண்டு, அறுத்த – அறுத்து எடுத்த, நுணங்கு – கண்நுண்ணியதாகத் திரண்ட கணுககளையுடைய, சிறு கோல் – சிறிய கோலினைக் கையிலேயுடைய, வணங்கு – வளைந்த, இறை – முன்கையினையுடைய, மகளிரொடு – விறலியர் எனப்படும் பெண்களோடு, அகவுநர் – பாணர்களை, புரந்த – பாதுகாத்த, அன்பின் – அன்பினையும், கழல் தொடி – கழலும் தொடியினையும், நறவுமகிழ் இருக்கை-கள்ளுண்டு மகிழ்ந்து போதுபோக்கும் இருப்பிடத்தினையும் உடைய, நன்னன் வேண் மான் – நன்னன் வேண் மான் என்பானது, வயலை – வயலைக் கொடி படர்ந்துள்ள, வேலி – வேலிகள் மிக்க, வியலூர் அன்ன – வியலூரை ஒத்த, நின் – உன்னுடைய, அலர்முலை – பரந்த முலையினையுடைய, ஆகம் – மார்பு, புலம்ப – கணவன் துயிலுதல் இன்றித் தனித்திருப்ப, பல நினைந்து – பலவற்றையும் எண்ணி, ஆழேல் – வருந்தாதே, என்றி – என்று கூறுகின்றாய், என் இஃது – என்ன காரணம்? (யாழ் – முன்னிலைச் அசைச் சொல்)

உ: (அடிகள் க௬ – உ௩)

maruthamaram01குரவு மலர்ந்து – வெண் கடப்ப மரம் மலர்ந்து, அல்சிரம் – முன் பனிக்காலம், நீங்கிய – கழிந்த, அரும்பத – அரிய தகுந்த காலத்தினையுடை, வேனில் – இளவேனில் காலத்தில், அறல் – கருமணல், அவிர் – விளங்கும், வார் மணல் – ஒழுங்காகக் குவிந்துள்ள மணல்மேடு மிக்க, அகல்யாற்று- அகன்ற ஆற்றை, அடை – சார்ந்துள்ள, கரை – கரையில், துறை – நீர்த் துறையை; அணி – அழகு செய்கின்ற. மருது – மருதமரங்கள், தொகல்கொள – கூட்டமாகத் தோன்ற ஓங்கி உயர்ந்த, கலிழ் தளிர் – நன்றாக அடர்ந்து தளிர்த்துள்ள தளிர்கள், அணிந்த – அழகுறப் பொருந்திய, இரும் சினை – பெரிய சினைகளையுடைய, மா அத்து-மா மரத்தின், இணர்- பூங்கொத்துக்கள் ததை – நெருங்கியுள்ள, புதுப்பூ – அப்பொழுது பூத்த பூக்கள் நிரைத்த- கூட்டமாக ஒழுங்குற நிறைந்துள்ள, பொங்கர் – சோலைகளில், புகை புரை – புகையினை ஒத்த, அம்மஞ்சு – அழகிய மேகம், ஊர தவழ, குயில் – இளவேனிலின் இன்பத்தை நுகரும் குயில்கள், அகவும் – பாடும் குரல் கேட்போர்க்கு – குரலினைக் கேட்கும் காதலனைப் பிரிந்த தலைவியர்க்கு,

ங :(அடி க௬)

கண் பனி-கண்களினின்றும் பனிபோல் வடியும் கண்ணீரை நிறுத்தல் நிறுத்துதல், எளிதோ – எளியதோ,

ஆராய்ச்சிஉரை

இப்பாடல் இயற்கைக் காட்சியை இனிமை பொருந்தக் காட்டும் இனிய ஓவியமாக அமைந்துள்ளது. கள்ளிக்காடு நிழல் அற்றது; எவரும் விரும்பாதது என்றாலும் அழகைக் காணலாம் என்ற கருத்தால் “அம்” காடு என்கின்றார். மான் பொறிபோன்ற புள்ளிகளைப் பெற்று அழகுடைத்தாக விளங்குகின்றது. “தலை தெறிக்க ஓடுதல்” என்பது விரைந்து ஓடுதலைக் குறிக்கும். விரைந்து ஓடினால் தலையில் அதிர்ச்சியும் உண்டாகும். மான் மிக விரைந்து ஓடிற்று என்பதை தலையில் உள்ள கொம்புகள் உதிருமாறு ஓடிற்று என்கின்றது என்ன அருமை! தலை தெறிக்க ஓடியும் புலி வாயில் பட்டது என்பதால் புலியின் ஆற்றல் விளங்குகின்றது. அப்புலியும் பசிச்கென பிறவிலங்குகளைக் கொல்கின்றது. கொன்று தின்று பசியாறிய பின் மிகுதியை விட்டு விட்டுச் செல்கின்றது. தின்று பசியாறிய பின் மிகுதியை விட்டு விட்டுச் செல்கின்றது. தின்று பசியாறிய பின் பதுக்கிவைக்கும் பான்மை அக்கொடிய புலியினிடமும் இல்லை. அது விட்டுப் போன இறைச்சியும், பிற உயிர்களுக்குப் பயன்படுகிறது. பருந்தும் கழுகும் விரைந்து உண்ண வருகின்றன, அவற்றுக்கு ஒப்பாகக்கூறும் உவமையோ கொலைத்தொழில்புரியும் ஆடவர், இரவில் மாட்டைக் கவர்ந்து சென்று கொன்று உண்பவர்க்கும், கழுகுட்கும் என்ன வேறுபாடு? உடல் தோற்றத்தில் தான் வேறுபாடு. இவ்வித கொடிய மக்கள் தாம் உலகம் முழுவதும் என்பதில்லையன்றோ? நல்லவர்களும் உளர் கலைவாணர்கள் தோன்றுகின்றனர். கலைக்கெனவே வாழ்கின்றவர்கள் பொருள் தேடும் முயற்சியில் ஈடுபடமுடியாது அன்றோ? பொருள் தேடும் முயற்சியில் ஈடுபடின் கலைப் பயிற்சியை பண்புறப் பெற்று மேம்படுதலும் இயலாது அன்றோ? ஆகவே கலைவாணர்களை நாட்டு மக்கள் போற்றுதல் வேண்டும். நாட்டு மக்களாலோ அவர்கள் அமைக்கும் அரசாலோ கலைவாணர்கள் போற்றப்படவில்லையாயின், கலைகள் வளர்ச்சியுறுவது எங்ஙனம்? இன்றைய தமிழ்நாடே அதற்குச் சான்று தருகின்றது. தமிழ்க் கலைகளை வளர்க்கும் தமிழ்அரசு இன்று நாட்டில் இல்லை. கலைகளும் கலைக்கப் பட்டுவிட்டன. கலைவாணர்கள் களைகண் இன்றிக் களைப்புற்று வருந்துகின்றனர். அன்று அப்படி இல்லை. தமிழ் அரசர்கள் தமிழ்க் கலையைப் போற்றினர். நன்னன் வேண்மான் கலைஞர்களைப் போற்றினான். விறலியர், விறல்பட ஆடும் தன்மையர். உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களை உடலில் தோன்றும்படி நடிப்பார்கள். இக்காலையில் இக்கலை பயில்வாரை எள்ளுகின்றனர். அக்காலத்தில் இவர்கள் மதிப்பிழந்து நிற்கவில்லை. கலைஞர்களாகவே கருதப்பட்டனர். அவ்விறலியர் கையில் அடையாளளமாக மூங்கில் பிரம்பை வைத்திருந்தார்கள் என்று கூறுகின்றார். இதைத் தலைக்கோல் என்பர். இது பற்றிப் பிற்காலத்தில் பல புராணக் கதைகள் புனைப்பட்டுவிட்டன.

காதலைப் பிரிந்த காதலி, வேனிற் காலம் வந்ததும் வருந்துகின்றாள். வேனில்காலமே தமிழ்நாட்டில் இன்பம் விளைக்கும் காலம். வெப்பம் மிகாமலும், குளிர்ச்சி, மழை முதலிய இடுக்கண் இன்றியும், தென்றல் தவழ்ந்து மரங்கள் தளிர்த்து இயற்கை எழில் எங்கும் தோன்றும் காலம். உணவுப் பொருள்கள் வீட்டில் சேர்க்கப்பட்டு உணவுக் குறைவின்றி உழைப்பற்று இருக்கும் காலம். இக்காலத்தில்தான் திருமண நிகழ்ச்சியை நடத்துவர். இன்றும். இக்காலம் காதலரை வருத்தும் என்பதில் தடை என்ன? பனிக்காலம் நீங்கி வேனிற்காலம் தொடங்குகின்றது. வெண்கடப்ப மரங்கள் பூக்கின்றன. அகன்ற ஆற்றினிடையே கருமணல் குவிந்து காட்சியளிக்கின்றது. துறையருகில் மருதமரங்கள் ஓங்கி வளர்ந்துள்ளன. மா மரங்கள் பள பள வென்று மின்னும் தளிர் விடுகின்றன. சோலையில் உள்ள மரங்களில் பூக்கள் நிறைந்து பொலிந்து விளங்குகின்றன. வெண்மையான முகில்கள் சோலை மீது தவழ்கின்றன. சோலையில் உள்ள குயிலும் இனிய குரலில் கூவுகின்றது. குயிலின் குரல் தலைவியின் காதிற்கு எட்டுகின்றது. தலைவிக்கு இன்பம் அளிக்கும் வேனிற்காலம் என்ற நினைவு வருகின்றது. சுற்றுச் சார்புகளை நோக்குகின்றாள். தலைவன் அருகில் இல்லையே என்ற ஏக்கம் உண்டாகுகின்றது. கண்களினின்றும் முத்து முத்தாக நீர் உதிர்கின்றது.

தோழி கண்டாள். “வேண்மான் வியலூரைப் போன்ற சிறந்த நீ இன்று தனித்து இருந்து பல நினைந்து வருந்தேல்” என்று ஆறுதல் கூறுகின்றாள். “இவ்வாறுதல் மொழியால் தலைவனைப் பிரிந்து தலைவியர்க்குப் பயன் என்ன? தலைவியர் வடிக்கும் கண்ணீரைத் தடுத்தல் கூடுமோ” என்று கேட்கின்றாள் தலைவி. இவ்விதம் கேட்பதும் இயல்புதானே? இந்நிலையில் வேறு என்ன தான் கேட்கத் தோன்றும்.

****

பேராசிரியர் இலக்குவனார்

(தொடரும்)