(ஆனி 29, 2045 / சூலை 13, 2014 இதழின் தொடர்ச்சி)

உஎ. “ஆண்டு அவர் நீடலர்” – தோழி

சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

 sanga-agri-cropped01

“சென்றவர் என்று வருவரோ” என்ற சிந்தனையில் ஆழ்ந்திருக்கின்றாள் தலைவி, உயிர் அனையதோழி வாளாய் இருப்பாளா? ஆறுதல் கூறுகின்றாள்.

  “தோழி! வருந்தேல், ஏதேனும் தொழில் செய்தல் வேண்டும். சோம்பி இருத்தல் ஆகாது.’ என்ற நினைப்பு அவரை வேற்று நாட்டுக்குச் செல்லவிடுத்தது. அவர் சென்ற இடத்தின் தன்மையைக் கேள். மலைமேடுகளில் காடுகளைத் sanga-agri-ulakkaikuththal03திருத்தி விதைத்து விளைந்த வரகுக் கதிரைத் தாளோடு அறுத்துக் குவிப்பர். பின்னர் அவற்றின் மீது மாடுகளை ஓட்டித் தாள்வேறு கதிர்மணி (தானியம்) வேறு பிரிப்பர். பிரித்த வரகுகளை மலைப்பாறையில் காயவைப்பர். பிறகு, சுழல்மரத்தால் குற்றி எடுத்து உரலில் போட்டுப் பூணிட்ட உலக்கையால் நன்றாகத் தீட்டுவர். பின்னர் சுனைநீரை மண்பானையில் உலையாக வைத்து, வரகரிசியை இட்டுப் புழுக்கி எடுத்து நல்ல பசுவின் பாலோடு வருவார் போவார்க்கெல்லாம் வழங்குவர். அவ்விதம் வழங்குவார் யார்? அங்குள்ள இடையர்களே.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை”

என்ற வள்ளுவர்பெருமான் வாய்மொழியைச் செயல் முறையில் காட்டுவர் அவ்விடையர்கள். அவர்கள் மிகுந்துள்ள மலைகளுக்கப்பால் விளங்கும் வேங்கடமலையைக் கடந்து வேற்று நாட்டுக்குச் சென்றுள்ளார் என்றாலும் அங்குக் காலம் தாழ்த்தார்.

  “மயில்தோகை போன்று அடர்த்தியாக வளர்த்துள்ள நினது கூந்தலில் நறுமணம் கமழும் எண்ணெய் தடவி நறிய

உலக்கைக்குத்தல்-அன்னக்கிளி

வளைப்பூவும்,வேனிற்காலத்துப் பூக்களும் சூடி அவருடன் கூடி அவருக்கு இன்பமளித்த அந்தநாள் அவர் நினைவை விட்டு அகலுமா? அதை மறந்து ஒருநாளும் வீணே அங்குத் தங்கி இரார். வருவார் விரைவில்! வாழ்வாய் பல்லாண்டு!”

உஎ . பாடல்

அகநானூறு 393 பாலை

கோடுஉயர் பிறங்கல் குன்று பல நீந்தி

வேறுபுலம் படர்ந்த வினைதரல் உள்ளத்து

ஆறுசெல் வம்பலர் காய்பசி தீரிய,

இதைச்சுவல் கலித்த ஈரிலை நெடும் தோட்டுக்

கவைக்கதிர் வரகின் கால்தொகு பொங்கழி

கவட்டு அடிப்பொருத பல்சினை உதிர்வை

அகன்கண் பாறைச் செவ்வயின் தெறீஇ

வரியணி பணைத்தோள் வார்செவித்தன்னையர்

பண்ணை வெண்பழத்து அரிசி ஏய்ப்பச்

சுழல்மரம் சொலித்த சுளகுஅலை வெண்காழ்

தொடிமாண் உலக்கை ஊழில் போக்கி

உரல்முகம் காட்டிய கரைநிறை கொள்ளை

ஆங்கண் இரும்சுனை நீரொடு முகவாக்

களிபடு குழிசிக் கல்அடுப்பு ஏற்றி

இணர்ததை கடுக்கை ஈண்டிய தாதின்

குடவர் புழுக்கிய பொங்கு அவிழ்ப் புன்கம்

மதர்வை நல்ஆன் பாலொடு பகுக்கும்

நிரைபல குழீஇய நெடுமொழிப் புல்லி

தேன்தூங்கு உயர்வரை நல்நாட்டு உம்பர்

வேங்கடம் இறந்தனர் ஆயினும், ஆண்டுஅவர்

நீடலர்; வாழி! தோழி! தோடுகொள்

உருகெழு மஞ்ஞை ஒலிசீர் ஏய்ப்பத்

தகரம் மண்ணிய தண்நறு முச்சிப்

புகரில் குவளைப் போதொரு தெரிஇதழ்

வேனில் அதிரல் வேய்ந்தநின்

ஏம் உறு புணர்ச்சி இன்துயில் மறந்தே.

உரைநடைப்படுதல்:

க. கோடு உயர் …..இறந்தனர் ஆயினும் (அடிகள் க-உ0)

உ. தோடுகொள்….இன்துயில் மறந்து (அடிகள் உக-உ௪)

௩. ஆண்டு அவர்……வாழி தோழி (அடிகள் உ0-உக)

சொற்பொருள்:

க. (அடிகள் க – உ0)

கோடுஉயர் – முடி (சிகரம்) உயர்ந்துள்ள, பிறங்கல் – மலைகள், குன்று – சிறுமலைகள், பல – பலவற்றை, நீந்தி – கடந்து, வேறுபுலம் – வேற்று நாட்டிற்கு, படர்ந்த – சென்ற, வினைதரல் – (சோம்பி இராது தொழிலில் ஈடுபட) தொழில் முயற்சியினைத்தரும் இயல்பினையுடைய, உள்ளத்து – மன எழுச்சியால், ஆறுசெல் – வழியில் செல்லும், வம்பலர் – புதியவர்களின், காய்பசி – வருத்தும்பசி, தீரிய – நீங்க, இதை – புதிதாகச் சீர்திருத்தம் செய்யப்பட்ட, சுவல் – மேட்டு நிலத்தில், கலித்த – தழைத்து வளர்ந்த, ஈர்இலை – கூரிய இலையாகிய, நெடும்தோட்டு – நீண்ட இதழினையுடைய, கவைக்கதிர் – பல கிளைகாளாக இணைந்துள்ள கதிர்களுடைய, வரகின் கால் – வரகின் தட்டைகளை, தொகு – குவித்த, பொங்கழி – பொலியில், கவட்டுஅடி – மாடுகளின் பிளவுபட்ட குளம்புகளாகிய அடிகள், பொருத – மிதித்துத் துவைத்த, பல்கிளை – பல கிளைகளினின்றும், உதிர்வை – உதிர்ந்த வரகை, அகன்கண் – அகன்ற இடத்தினையுடைய, பாறை – பாறைமீது, செவ்வியின் – சிறந்த இடத்தில், தெறீஇ – பரப்பிக் காயவைத்து, வரியணி – தேமல் கோடுகள் பொருந்திய, பணைத்தோள் – பருத்த தோள்களையும், வார்செவி நீண்ட காதுகளையும் உடைய, தன்னையர் – தாயர்கள், பண்ணை – மருத நிலத்தைச் சார்ந்த வயல்களில் விளைந்த, வெண்பழத்து – வெண்மையான நன்றாக முற்றிய நெல்லினது, அரிசி ஏய்ப்ப அரிசியைப்போல் தோன்ற, சுழல்மரம் – நெல் குற்றுவதற்கு அமைக்கப்பட்ட பொறியில் மேலும் கீழுமாகச் சென்று வரும் உலக்கைபோன்ற மரம், சொலித்த – உமியைப்போக்கித் தேய்த்த, சுளகு – முறத்தினால் கொழிக்கப்பட்ட, வெண்காழ் – வெண்மையான அரிசியை, தொடிமாண் – பூணினால் மாட்சிமைப்பட்ட, உலக்கை – உலக்கையை, ஊழில்போக்கி – முறையாகச் செலுத்தி, (உலக்கையால் குற்றி) உரல் முகம் காட்டிய – உரலில் இட்டுத் தீட்டிய, சுரைநிறை – உரலின் குழிநிறைந்த, கொள்ளை – மிகுந்த அரிசியை, ஆங்கண் – அவ்விடத்திலுள்ள, இரும்சுனை – பெரிய சுனையின், நீரொடு – நீருடன், முகவர் – முகந்து, களிபடுகுழிசி – களிமண்ணால் செய்து சுடப்பட்ட பானையை, கல் அடுப்புஏற்றி – கற்களை அடுக்கி உண்டுபண்ணிய அடுப்பில் ஏற்றி, இணர்ததை – பூங்கொத்துகள் நிறைந்த, கடுக்கை – கொன்றையின், ஈண்டிய – நிறைந்த, தாதின் – பூவின்கண் உள்ள பொடிபோல நிறம்பொருந்த, குடவர் – இடையர், புழுக்கிய – சமைத்த, பொங்கு அவிழ் புன்கம் – பானைநிறைந்து பொங்கிய அமிழ்தம்போன்ற சோற்றை, மதர்வை – மதர்த்த, நல்ஆன் – நல்லபசுவின், பாலொடு – பாலுடன், பகுக்கும் – பங்கிட்டு உண்ணும் இடமாகிய, நிறைபல – பசுக்கூட்டம்பல், குழீஇய – கூடியுள்ள, நெடுமொழி மிகுந்த புகழினை உடைய, புல்லி – புல்லி என்பானின், தேன்தூங்கு – தேன்கூடுகள் தொங்குகின்ற, உயர்வரை – உயர்ந்த மலைகள் மிக்க, நல்நாட்டு உம்பர் – நல்லநாடுகட்கு அப்பால் உள்ள, வேங்கடம் -வேங்கட மலையை, இறந்தனர் ஆயினும் – கடந்து சென்றார் ஆயினும்,

உ. (அடிகள் உக – உ௪)

தோடுகொள் – தொகுதியாகச் சேர்ந்துள்ள, உருகெழு – அழகு விளங்குகின்ற, மஞ்ஞை – மயிலின், ஒலிசீர் ஏய்ப்ப – தழைத்த தோகையின் அழகினை ஒப்ப, தகரம் – மயிர்ச்சாந்து, மண்ணிய – பூசி அலங்கரித்துப் பெற்றுள்ள, தண் நறுமுச்சி – குளிர்ந்த மணம் கமழும் உச்சிக் கொண்டையில், புகர்இல் – குற்றம் இல்லாத, குவளைப்போதொடு – குவளைமலருடன், தெரி – ஆராய்ந்து எடுக்கப்பட்ட, இதழ் – இதழ்கள் நிறைந்த, வேனில் அதிரல் – கோடைக்காலத்தில் பூக்கும் மிகுந்த பூக்களை, வேந்த – சூடிய, நின் – உனது, ஏம்உறு – இன்பம்மிக்க, புணர்ச்சி – கூட்டத்தின்கண் உண்டாகும், இன்துயில் – இனிய உறக்கத்தினை, மறந்து – மறந்துவிட்டு,

௩. (அடிகள் உ0 – உக)

ஆண்டு – சென்றுள்ள அந்த இடத்தில், அவர் நீடலர் – அவர் காலம் தாழ்த்தித் தங்கார், வாழி தோழி – தோழியே வாழ்வாயாக.

ஆராய்ச்சிக்குறிப்பு:- புல்லி என்பானுக்குரிய வேங்கட மலையில் வாழ்ந்த இடையர்கள் தம் இடத்திற்கு வந்தவர்கட்கு விருந்தளிக்கும் முறைமை அழகாகக் கூறப்பட்டுள்ளது. வரகை அறுவை செய்து காயவைத்தல், உரலில் இட்டுக் குற்றுதல், தீட்டுதல், புடைத்தல், பிறகு அதை உலையிலிடல், உலையில் இட்டுப் புழுக்கிய சோற்றைப் பாலோடு கூட்டி அளித்தல் முதலிய நிகழ்ச்சிகள் அனைத்தும் கூறப்பட்டுள்ளன. வழியில் செல்வார்க்கு வரையாது விருந்தளித்தலைக் கூறவந்தவர், வரகுத்தானியம் கிடைப்பது முதல் சோறாக்கி இடும் வரையிலுள்ள நிகழ்ச்சிகளைக் கூறுவானேன் எனின், உணவின் பெருமையை நன்கு விளக்குவதற்கே. வரகுச்சோறு அளித்தனர் என்றால் அதை மிக எளிதாக நினைத்துவிடுவோம். அந்த வரகுச்சோறும், எளிதில் கிடையாது அல்ல. அதற்கு இவ்வளவு உழைப்பு வேண்டியுள்ளது என்று அறிந்தால்தான் அதன் அருமையை உணர்தல் கூடும்.

உதிர்வை:-உதிர்வு+ஐ உதிரும் தானியத்தை உதிர்வு என்றனர்.

சுழல் மரம்:- வரகு முதலிய தானியங்களைக் குற்றுவதற்கு, மரப்பொறிகள் பெற்றிருந்தனர்போலும், சாந்து இடிப்பதற்கு அமைக்கப்பட்டுள்ள பொறிகளை இக்காலத்தில் பார்க்கலாம். ஒரு மரத்தின் ஒரு முனையில் பலமுளைகளைப் பொருத்திவைத்து, அம்மரத்தின் இன்னொரு முனையை ஏற்றி இறக்குங்கால், அம்முனைகள் சென்று இடிப்பதைப் பார்த்திருக்கலாம். அம்முறையில் தானியங்களையும் குற்றி இருக்கலாம். பிறகு நல்ல வெண்மையையும் பெறுவதற்கு உரலில் இட்டுத் தீட்டினர்போலும். அரிசியைத் தீட்டிப்பயன்படுத்தல் பண்டைக் காலத்திலிருந்தே தமிழர் அறிந்த தொன்றாம். தீட்டுவதனால் தவிடு போய்விடுகின்றது என்றும், தவிடு உயிர்ச்சத்து நிரம்பியது என்றும் இக்காலத்து ஆராய்ச்சியாளர் கூறுவர். இன்று போதிய உணவுப் பொருள் கிடைக்கப் பெறாததனால் அரிசியைத் தீட்டுதல் கூடாது என்பது அரசியலார் ஆணை. பண்டைத்தமிழர், தவிடாகிய உயிர்ச்சத்து போயினும் குற்றமில்லை கண்ணுக்கினிய வெண்மையே வேண்டுமென்று கருதித் தீட்டினர். அத்தவிட்டைத் தமக்குப் பெரிதும் உழைக்கும் மாடுகளுக்குப் பயன்படச் செய்தனர்.

தகரம்:– மயிர்ச்சத்து மணத்தைத் தருவதற்கும், கருகருவென்று வளர்வதற்கும் நறுமணம் கமழும் எண்ணெய் முதலியன பயன்படுத்தப்பட்டன என்பது இதனால் விளக்கப்படுகின்றது. நறுமணம் கமழும் எண்ணெய் பூசுதல், நறிய பூச்சுடிக்கொள்ளுதல் முதலியன நாகரிகத்தில் முதிர்ந்த பண்டைத் தமிழர்க்கு மனதிற்கு இனிமைபயக்கும் செயல்களாம்.

அகநானூற்றில் சேர்க்கப்பட்டுள்ள மாமூலனார் பாடல்கள் இவ்வளவே. இனி எஞ்சிய மூன்று பாடல்களுள் ஒன்று குறுந்தொகையிலும் இரண்டு நற்றிணையிலும் சேர்க்கப்பட்டுள்ளன.

sanga-agri-crops02