(ஆடி 11, 2045 / சூலை 27, 2014 இதழின் தொடர்ச்சி)
 

உகூ. “நாட்டனர் வாழி!”

 -சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

Anaconda01

தோழி : அம்ம! நின் காதலர் நின்னை விட்டுப் பிரியவே மாட்டார் என்றாய்! பிரிந்தாலும் விரைவில் வந்துவிடுவார் என்றாய், சென்றவரை இன்னும் காணமுடியவில்லையே.

தலைவி: வராது என்ன செய்வார்? வருவார்.

தோழி: எப்போழுது? உன் அழகு எல்லாம் மறைந்து உன் உடல் இளைத்து உருமாறிய பின்பா?

தலைவி: அப்படிக் கருதேல் அவர் அன்பின் திறம் நீ அறியாய்?

தோழி: ஓ ஓ! காதலியை வருந்துமாறு விடுத்துவிட்டுக் காணாது சென்றிருப்பதுதான் அன்பின் திறமோ? என்ன அன்பு!

தலைவி: இப்பொழுது என்னை அடைந்து எனக்கு அருள்செய்யாது போயினும், விரைவில் திரும்பிவந்து கூடுவர், அப்பொழுது என் நிலையைப் பார். நான் இழந்துள்ள அழகெல்லாம் மீண்டும் பெறுவேன். அவரைப்பற்றி ஒன்றும் கூறாதே. அவர், என்காதலர் நண்பர்; வாழ்வாராக.

தோழி: இன்று உன்னுடைய காதலைப்பற்றி எல்லாம் ஊரார் உரைப்பது அறிவாயா?

தலைவி: அறியாமல் என்ன? குட்டுவனை வென்ற செம்பியன் படைவீரர் எழுப்பிய ஆரவாரத்திலும் பெரிதாக ஊரார் கூறும் பழிமுழக்கம் கேட்கின்றது. உலக இயல்புதானே.

தோழி: உன் காதலர் அறிவாரோ?

தலைவி: அறியலாம். அவர் சென்ற வழியில் உள்ள காட்டில் நம்மை நினைவுறுத்தக்கூடிய நிகழ்ச்சிகள் உண்டு.

தோழி: என்ன?

தலைவி: மலைக்காடுகளில் மலைப்பாம்புகள் மிகுதியும் உண்டு. ஆண்யானை ஒன்றை ஒரு பாம்பு கடித்தால், பெண் யானை முழங்கும் முழக்கம் மலைமுழுவதும் கேட்கும். ஆண்யானையை பிரிந்த பெண்யானை வருந்துவதுபோல் தான் நம்மைப் பிரிந்த காதலியும் வருந்துவாள் என்று நினைப்பார்.

தோழி: அப்படியா?

தலைவி: ஆம், அவரைப்பற்றிக் குறைகூறாதே.

அவர் பல்லாண்டு வாழ்வாராக! என்னை நட்டனர் வாழி!

உகூ. பாடல்

நற்றிணை 14 : பாலை

தொல்கவின் தொலையத் தோள்நலம் சாஅய

நல்கார் நீத்தனர் ஆயினும் நல்குவர்,

நட்டனர் வாழி! தோழி! குட்டுவன்

அகப்பா அழிய நூறிச் செம்பியன்

பகல்தீ வேட்ட ஞாட்பினும் மிகப்பெரிது

அலர் எழச் சென்றனர் ஆயினும், மலர் கவிழ்ந்து

மாமடல் அவிழ்ந்த காந்தளம் சாரல்

ஞால்வாய்க் சுளிறு பாந்தள் பட்டு எனத்

துஞ்சாத் துயரத்து அஞ்சு பிடிப்பூசல்

நெடுவரை விடர் அகத்து இயம்பும்

கடுமான் புல்லிய காடு இறந்தோரே.

natrinai-heading

உரைநடைப்படுத்தல்

க. மலர்கவிழ்ந்து …காடு இறந்தோரே (அடிகள் கூ-கக)

உ. குட்டுவன் அகப்பா….சென்றனர் ஆயினும்

(அடிகள் ௩-௪)

ங. தொல்கவின்….வாழி! (அடிகள் க-௩)

க. (அடிகள் ௪-கக)

மலர் கவிழ்ந்து – தலைகீழாக மலர்கள் தொங்கி, மாமடல் – பெரிய இதழ்கள், அவிழ்ந்த – விரிந்த, காந்தள் அம்சாரல் – காந்தள் என்ற அழகிய கார்த்திகைப் பூச்செடிகள் நிறைந்த மலைச்சாரலில், இனம் சால் – யானைக்கூட்டம் மிகுதியாக உடைய, வயக்களிறு – வலிமை மிக்க ஆண்யானை, பாந்தள் பட்டு என – பெரும் மலைப்பாழ்பின் வாயில் பட்டதாக, துஞ்சா – ஒரு காலும் குறையாத, (உறங்கமுடியாத) துயரத்து – துன்பத்தினால், அஞ்சு – பயப்படுகின்ற பிடி – பெண் யானையின், பூசல் – பிளிறுகின்ற பெருமுழக்கம், நெடுவரை – உயர்ந்த மலைகளின், விடர் அகத்து – பிளவுபட்ட குகைகளிற் சென்று தாக்கி, இயம்பும் – எதிர் ஒலிக்கும், கடுமான் – விரைந்து செல்லும் குதிரைப்படையினையுடைய, புல்லிய – புல்லி என்பானுக்குரிய; காடு – காடுகளையும், இறந்தோர் – கடந்து சென்றோர்.

உ (அடிகள் ௩ – கூ)

குட்டுவன் – குட்டுவன் என்னும் சேர அரசனின், அகப்பா – மதில் அழிய – கெட, நூடிற – இடித்துக் கெடுத்து, செம்பியன் – சோழஅரசன், பகல்தீவேட்ட ஞான்றினும் – அவற்றைப் பகலிலேயே வெற்றிக்கடையாளமாக தீ வேள்வி செய்தபொழுது உண்டான – வெற்றி ஆரவாரத்தினும் மிகுதியாக, அலர் எழ – பலர் வெளிப்படையாகக் கூறும் பழிச் சொல் உண்டாக சென்றனர் ஆயினும் – போனார் ஆனாலும்.

௩ . (அடிகள் க-௩)

தொல்கவின் – பழமையான அழகு, தொலைய – கெடவும் தோள் நலம் – தோளின் அழகு, சாஅய – குறைந்து வாடவும் நல்கார் – என்னைக் கூடி அருள் செய்யாராய், நீத்தனர் ஆயினும் விட்டுச் சென்றனர் ஆனாலும், நல்குவர் – என்னை விரும்பிக் காதலித்து என்னுடன் நட்புக்கொண்டவர், வாழி – வாழ்வாராக’ தோழி – தோழியே.

ஆராய்ச்சிக் குறிப்பு:

குட்டுவனும் செம்பியனும்: இங்கே குறிப்பிடப்படுகின்ற சேர அரசனும், சோழ அரசனும் இன்னார் என்று வரையறுத்துக் கூறமுடியவில்லை. குட்டுவன் சேரர் மார்பில் முதற்குட்டுவனாய் இருப்பின் வரலாற்றுக் காலத்துக்கு அப்பாற்பட்டவனாதல் வேண்டும் அல்லது குடநாட்டை ஆண்டதால் குட்டுவன் என்ற காரணம் பெயர் பொதுவாக சேர அரசரையே குறிக்கலாம். ‘செம்பியன்’ என்பதும் சோழ அரசரைக் குறித்தும் பொதுப்பெயரே. நற்றிணைக்குப் பொழிப்புரை எழுதியுள்ள பின்னத்தூர் நாராயண சாமி (ஐயர்) கிள்ளிவளவன் என்று குறிப்பிட்டுப் போர் நடந்த இடம் கழுமலம் என்று கூறுகின்றார். இங்குச் சோழன் வெற்றியடைந்ததாகக் கூறப்படுகின்றது.

பகல் தீ வேட்டல்:- “வெற்றிகொண்ட பின்னரே உண்வேன்” என்று உறுதி செய்து வெற்றி பெற்ற பின்னர் சமைத்து உண்பதை தீவேட்டல் என்பது மரபு. அற்றைப் பகலிலேயே வெற்றி பெற்றுவிட்டதனால் பகல் தீவேட்டல் என்று சிறப்பிக்கப்பட்டுள்ளது.

நற்றிணை:-

இப்பாடல் நற்றிணையில் பதினான்காவது பாட்டாகும், நல் +திணை – நற்றிணை. அகப்பொருளைப்பற்றிக் கூறும் நானூறு பாடல்களைக் கொண்டது. இதில் வரும் பாடல்கள் ஒன்பது அடிகட்குக் குறையாமலும் பன்னிரண்டு அடிகட்கு மேற்படாமலும் அமைந்துள்ளன. குறைந்த அடிகளையுடைய பாடல்கள் நானூறு அடங்கிய நூலைக் குறுந்தொகை என்றும், மிகுந்த அடிகளையுடைய பாடல்கள் நானூறு கொண்ட நூலை நெடுந்தொகை என்றும். மிகாமலும் குறையாமலும் உள்ள அடிகள் கொண்ட பாடல்கள் நானூறு கொண்ட நூலை நற்றினை என்றும் பெயரிட்டனர். திணை என்ற சொல், இடத்தையும் ஒழுக்கத்தையும் குறிப்பிடும்.

பாடிய புலவர்கள் நூற்று எழுபத்தைந்து பேர் ஆவர். இத்தொகை நூலுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.

 Ilakkuvanar+04