(முந்தைய இதழ்த் தொடர்ச்சி)

6. உதியஞ்சேரலைப் பாடியவர் போல் மகிழ்க! வாழ்க! – தோழி

uthiyan cheralathan

கருத்திற்கினிய காதலனை மணக்க விரும்பினாள் தலைவி.  பெற்றோர்கள் குறுக்கே நின்றனர். தலைவியை அவள் பெற்றோர்கள் அறியாமல் அழைத்துச்சென்று மணந்து கொள்ளுமாறு தலைவனிடம் தோழி முறையிட்டாள். தலைவன் வழியின் கொடுமையைக் கூறிக் காலம் தாழ்த்தான். ஆயினும் தோழியின் வற்புறுத்தலுக்கு இணங்கி அழைத்துக்கொண்டு போவதாக உறுதி கூறிவிட்டான். அம் மகிழ்ச்சிச் செய்தியைத் தலைவியிடம் தோழி கூறுகின்றாள்.

தோழி: மகிழ்க! வாழ்க!

தலைவி : என்ன? நம் துன்பம் தொலையும் நாள் வந்ததா?

தோழி: வந்தது. அவரும் ஒப்புக்கொண்டார். நம் கருத்தை இன்றுதான் ஏற்றுக்கொண்டார். நம்மைக் கொண்டு போகத் துணிந்துவிட்டார்.

தலைவி: அப்படியா! பிழைத்தோம்.

தோழி: பிழைத்தோம் தாயின் கொடுஞ்சொல்லினின்றும் பிழைத்தோம். நம் எண்ணத்தை அறிந்து கொண்டே அறியாததுபோல் சொல்லுகின்ற சொற்களை இனிக்கேளோம்.  அது மட்டுமா? நம்தெருவில் உள்ள பெண்கள் இனி என்ன செய்வார்கள்.

தலைவி: ஏன்?

தோழி: அவர்களில் இரண்டு பேர் கூடினால், பேசுவதெல்லாம் நம்மைப்பற்றித் தானே.

தலைவி: உலகம் அப்படித்தானிருக்கின்றது. நாலு பேர்  கூடினால், யாராவது அங்கில்லாத ஒருவரைப் பற்றித் தானே உரையாடுவார்கள்.

தோழி: என்ன? இல்லாததும் பொல்லாததுமாக.

தலைவி: அப்பொழுதுதானே உரையாடலில் இன்பம் காணலாம்

தோழி: அன்பிலாப் பெண்கள். அவர்கள் பழிச்சொற்களும் இனி நம் காதுகளில் கேளா.

தலைவி: அவர் எப்படி ஒப்பினார். நம்போன்ற பெண்கள் நடக்கமுடியாத வழியென்று கூறிக்கொண்டிருந்தாரே.

தோழி: ஆம் உண்மைதான். வழி மலைவழிதான். சிறிய ஒற்றடிப் பாதைதான். அவ்வழிகளில் மூங்கில்கள் சாய்ந்து  கிடக்கும். அம்மூங்கில்கள் ஒன்றோடு ஒன்று உராய்ந்து நெருப்புப்பற்றிக் கொள்ளும். ஆங்காங்கு மலை இடங்களில் அந்நெருப்பு சுடர் விட்டு எரிவதைப் பார்த்தால் எப்படியிருக்கும் தெரியுமா?

தலைவி: தெரியும். நானும் பார்த்திருக்கின்றேன்.

தோழி:  கடலில் மீன் பிடிக்கும் பரதவர்கள், தங்கள் சிறு படகுகளில் சிறுசிறு கைப்பந்தங்களை வைத்துக்கொண்டு பரந்த கடலில் செல்லுகின்ற காட்சியை ஒக்கும். அவ்வழிகளில் ‘யா’ என்ற மரங்கள் உயர்ந்து வளர்ந்து நிற்கும். பெரிய பெரிய யானைகள் ஆங்காங்கு நின்று கொண்டிருக்கும். அம்மலை வழியில் நடப்பதும் பட்டினியால் வாடிய யானையின் முதுகின் மேல் நடப்பது போல் இருக்குமாம். ஆகவே அவ்வழிகளில் நம் போன்ற பெண்கள் செல்லமுடியாது என்று கூறி அழைத்துக் கொண்டு போக முடியாதென்று சொல்லிய கூற்றை விட்டுவிட்டார்.

தலைவி: நம்மை அழைத்துக்கொண்டு போகத் துணிந்து விட்டாரா?

தோழி: ஆம். இனி நீ மகிழ்க! உதியஞ்சேரலன் என்ற அரசனைப்பாடிப் பரிசில் பெற்றவர்கள் எவ்விதம் மகிழ்வார்களோ அவ்விதம் மகிழ்க. வாழ்க.

*******

பாடல்  : அகநானூறு 65 : பாலை

உன்னம் கொள்கையோடு உளம் கரந்து உறையும்

அன்னை சொல்லும் உய்கம். என்னுதூஉம்

ஈரம் சேரா இயல்பின் பொய்ம்மொழிச்

சேரியம் பெண்டிர் கௌவையும் ஒழிகம்

நாடுகண் அகற்றிய உதியன் சேரல்

பாடிச்சென்ற பரிசிலர் போல

உவ இனி, வாழி தோழி!

அவரே

பொம்மல் ஓதி நம்மொடொராங்குச்

செலவயர்ந்தனரால் இன்றே,

மலைதொறும்

மால் கழை பிசைந்த கால்வாய் கூர்எரி

மீன் கொள் பரதவர் கொடுந்திமில் நளிசுடர்

வான்தோய் புணரிமிசைக் கண்டாங்கு

மேவரத் தோன்றும் யாஅ உயர்நனந்தலை

உயவல்யானை வெரிநுச் சென்றன்ன

கல்லூர்பு இழிதரும் புல்சாய் சிறு நெறிக்

காடுமீக் கூறும் கோடுஏந்து ஒருத்தல்

ஆறு கடி கொள்ளும் அருஞ்சுரம் பணைத்தோள்

நாறு ஐங்கூந்தல் கொம்பை வரி முலை

நிரை இதழ் உண்கண் மகளிர்க்கு

அரியவாள் என அழுங்கிய செலவே.

பதவுரை

உன்னம் – நம் எண்ணத்தை அறிந்துகொண்ட, கொள்கையொடு  கோட்பாட்டுன், உளம் – மனத்தின்கண், கரந்து – மறைத்து, உறையும் – கூடி வாழும், அன்னை…தாயின், சொல்லும் – கடுஞ்சொற்களினின்றும், உய்கம் – பிழைப்போம். என்னதும் – சிறிதும், ஈரம் – அன்பு, சேரா – இல்லாத இயல்பின் – தன்மையினையுடைய, பொய்ம்மொழி – பொய்யான சொற்களைக் கூறும், சேரியம் பெண்டிர் – தெருவிலுள்ள பெண்களுடைய, கௌவையும் – பழிச்சொல்லினையும் ஒழிகம்  – கேளாமல் நீங்குவோம். நாடுகண் – நாட்டின் பரப்பை, அகற்றிய – விரிவுபடுத்திய, உதியன்சேரல் – உதியன் சேரலாதனை, பாடிச்சென்ற – பாடி அடைந்த, பரிசிலர் போல – நன்கொடைபெற்று வாழ்பவர் போல, உவ -மகிழ்க, இனி…. இனிமேல், வாழி – வாழ்வாயாக, தோழி – தோழியே,

அவரே – காதலர், பொம்மல் – பொலியுபெற்ற ஓதி – கூந்தலையுடையாய், நம்மோடு – நம்முடன். ஓராங்கு – ஒன்று கூடி, செலவு அயர்ந்தனர் – போதலை  விரும்பி ஏற்றனர். (ஆல் – அசை) இன்றே – இப்பொழுதே.

மலைதொறும் – மலைகள் தோறும், மால் கழை – பெரிய மூங்கில்கள், மிசைந்த – ஒன்றோடொன்று உரசிக்கொள்வதால் உண்டாகிய, கால்வாய் – காற்றோடு கூடிய, கூர்எரி – மிகுந்த நெருப்பு, மீன்கொள் – மீன்பிடிக்கும், பரதவர் – நெய்தல்நில மக்களின், கொடுந்திமில் – வளைவான படகுகளில் வைத்துள்ள நளிசுடர் – கொழுந்து விட்டெரியும் பந்தங்களைப் போலவான்  தோய் – வானைப்பொருந்தும், புணரிமிசை – கடலின் மீது, கண்டாங்கு – காண்பதைப் போல், மேவரத்தோன்றும் – பொருந்தக் காணப்படும், யரஉயர் – ‘யா’ என்ற மரங்கள் வளர்கின்ற, நனந்தலை – அகன்ற இடத்தில், உயவல் – உணவில்லாது வருந்தும் யானை – யானையின், வெரிநு – முதுகில், சென்றன்ன – சென்றதை ஒத்த, கல் – மலையில், ஊர்பு – ஊர்ந்து ஏறி இழிதரும்  இறங்கும், புலசாய் – மூங்கில்கள்  சாய்ந்து கிடக்கின்ற, சிறுநெறி  – சிறிய வழிகளில், காடு மீக்கூறும் – காடுகளைச் சிறப்பித்துக் கூறுவதற்குக் காரணமான, கோடு – கொம்புகளை, ஏந்து – பொருந்தியுள்ள, ஒருத்தல் – ஆண் யானைகள், ஆறு – வழிகளை, கடிகொள்ளும் – யாவரும் சொல்லாமல் தடுத்துக்கொண்டிருக்கும், அரும்சுரம் – அரிய பாலைவன வழிகள், பணைத்தோள் – மூங்கில் போன்ற தோளினையும், நாறு – மணம்கமழும், ஐம்கூந்தல் – ஐவகையாக முடிக்கத்தகும் கூந்தலினையும், கொம்மை – திரண்ட, வரி – தேமல் பொருந்திய, முலை – முலையினையும், நிரை இதழ் – வரிசையான இதழ்களையுடைய பூப்போலும், உண்கண் – மை ஊட்டப்பெற்ற கண்களையும் உடைய, மகளிர்க்கு – பெண்களுக்கு, அரியவால் என – செல்லுதற்கு முடியாததாகும் என, அழுங்கிய – நிறுத்தி வைத்திருந்த, செலவு – போக்கு (பயணம்)

இயைபு: தோழி உவ; வாழி; அழுங்கிய செலவே, ஓராங்குச் செலவு அயர்ந்தனர்.

*****

ஆராய்ச்சிக் குறிப்பு

சேரி; பலர் சேர்ந்து வாழும் இடத்திற்குச் சேரி என்று பெயர். சேர் + இ – சேரி. இப்பொழுது வீதி என்றும் தெரு என்றும் அழைக்கின்றோம். ‘சேரி’ என்ற சொல் இன்று, தாழ்த்தப்பட்டவர்கள் என்று கூறப்படும் மக்கள் வாழுமிடத்தைக் குறிப்பதற்கு வழங்கப்படுகின்றது.

உவமைச் சிறப்பு: மூங்கில்கள் ஒன்றோடொன்று உரசுவதால் உண்டாகி ஆங்காங்குத் தோன்றும் நெருப்புச் சுடர்களுக்கு ஒப்பாக கடலில் சிறு படகுகளில் வைக்கப்பட்டிருக்கும் விளக்குகளைக் காட்டுகின்றார்.

மலைமீது நடந்தலுக்கு ஒப்பாகப் பட்டினி கிடக்கும் யானை மீது நடத்தலைக் காட்டுகின்றனர்.

இவ்வாசிரியர்க்குக் கடல் நாட்டிலும் மலை நாட்டிலும் நல்ல பழக்கம் உண்டு  என்று அறியலாம்.

அகற்றுதல்: இன்று நீக்குதல் என்ற பொருளில்தான் வழங்கப்படுகின்றது. விரிவடைதல் என்ற பொருளும் உண்டு. அகல் – அகலுதல் – விரிவடைதல்.

உதியன்சேரல்: இவன் வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்டனாதல் வேண்டும். இவனைப் பற்றிய வரலாறு யாதும் கிடைக்கவில்லை. புறநானூ£ற்றில் சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் என்பவன் காணப்படுகின்றான். அவன் பாண்டவரும் துரியோதனனாதியரும் பொருதகாலத்து இருசாரார்க்கும் பெருஞ்சோறு அளித்ததாகப் பாராட்டப்படுகின்றான். அவனும் இவனும் ஒருவர்தாம் என்று கூறுவதற்குச் சான்றுகளில்லை.

பரதவர்: கடற்கரையில் வாழும் மக்களுக்கு வழங்கி வந்த பெயர். இன்று பரதவர் என வழங்குகின்றது.

ஐங்கூந்தல்: தமிழ்ப் பெண்கள் தம் கூந்தலைப் பலவகையாக முடித்து அழகுபடுத்திக் கொண்டனர். ஐந்து வகையாக முடித்து ஒப்பனை (அலங்காரம்) செய்து கொண்டமையின் ஐங்கூந்தல் எனப்பட்டது. சுருள், குழல், கொண்டை, பின்னல், பனிச்சை என்பனவாகும். கொண்டையாக முடித்தல். சடையாகப் பின்னித் தொங்கவிடுதல். அள்ளிச் சொருகுதல் என்றும்  கூறலாம். ‘நாறு ஐம் கூந்தல்’ என்பதனால் மணம்மகழும் எண்ணெய் முதலியன தடவிக்கொள்ளும் வழக்கம் பண்டைத் தமிழர்க்குப் புதிதன்று என்று அறியலாம்.

(தொடரும்)