–சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

 

(முந்தைய இதழ்த் தொடர்ச்சி)

“நோயிலராக நம் காதலர்” -தலைவி

இங்கிலாந்தில் காதலர் இருவர் கருத்தொருமித்து கணவனும் மனைவியுமாக இல்லற வாழ்க்கை நடத்தி வந்தனர். உலகப் பெரும்போர் தொடங்கிற்று. காதலியை விட்டு விட்டுக் காதலன் போர் முனைக்குச் சென்றான். காதலி காதலனிடமிருந்து வரும் மடல்களால்  மனம் ஆறியிருந்தாள். சில திங்கள் சென்றன; மடல்களும் நின்றுவிட்டன. மடல்கள் வரும் வரும் என்று ஏங்கிக் கருத்தழிந்து நின்றனள். போர்முனையிலிருந்து யாதொரு செய்தியும் அவளை எட்டவில்லை. ஆண்டுகள் இரண்டும் சென்றன. அவளுக்கோ தனிமை பொறுக்க முடியவில்லை. ஆற்றாமை மிகுந்து அல்லல் உற்றாள்.

அமெரிக்காவிலிருந்து போர்வீரன் ஒருவன் இங்கிலாந்து வந்து சோந்தான், கண்கவர் வனப்பினன்.  நல்ல உடற்கட்டும்  உயர்ந்த ஊதியமும் உடையவன். ஓய்வு நேரத்தைக் காதல் விளையாட்டில் கழிக்க ஒரு கட்டழகியை நாடித் திரிந்தான்.

ஆண்துணை இல்லாது அல்லல் உறும் அவளைக் கண்டான். அவள் வீட்டிற்கு வருவதும் போவதுமாக இருந்தான். தனிமையில் வாடிய அவளுக்குச் சிறிது ஆறுதலளித்தது. இருவரிடையேயும் நட்பு வளர்ந்தது, போர் முனைக்குச் சென்ற காலனிடமிருந்து எவ்விதச் செய்தியும் வரப் பெறாததால் இறந்துவிட்டான் என்றே முடிவு கட்டினாள். அம் முடிவும் புதிய நண்பனிடம் நன்றாகப்பழகும் ஊக்கம் அளித்தது.  நட்பு முதிர்ந்து காதல் ஆயிற்று. இருவரும் கணவனும் மனைவியுமாக வாழ்வதென்று முடிவுகட்டி அவ்விதமே வாழ்ந்து வந்தனர்.

போரும் முடிந்தது. போர்வீரனும் திரும்பி வந்தான். மனைவியும் மகிழ்ச்சியுடன் வரவேற்றாள். இறந்து விட்டதாக எண்ணியது தவறு என்று வருந்தினாள். ஆயினும் இயற்கை அவளை அவ்வாறு இயக்கிவிட்டது. புதியவனை விட்டு விட்டுப் பழைய கணவனுடன் இல்லறம் தொடங்கினாள். அவன் இச்செய்திகளை எவ்விதமோ அறிந்து மனைவியிடம் அவள் குற்றத்தை உணர்த்தும் முறையில், குறும்பு மொழிகள் புகன்றான். அவளால் பொறுக்க முடியவில்லை. இருவரிடையேயும் பிணக்கு வளர்ந்தது, முறிவு ஏற்பட்டு மணத் தொடர்பை நீக்கிக் கொள்ள மன்றத்தை (கோர்ட்) நாடினர்.

இவ் வரலாறு செய்தித் தாளில் வெளிவந்ததாகும். இது மேல்நாட்டு நாகரிகம் – பண்பு. தம் நாட்டவரால் நினைக்க முடியாதது. பண்டைத் தமிழ்ப் புலவர்கள் இவ்வாறு கதையில் தீட்டுவதற்கும் கருதிட நடுங்குவர்.

மாமூலனார் தீட்டிய பாடலில் வரும் தமிழ்ப் பெண்ணைப் பாருங்கள்.

எல்லாவகையானும் தனக்கு ஒத்த கலைவனைக்காதலித்தாள். அவனும் அவளையன்றிப் பிறரை யறியான். அவளையே மணப்பதாக உறுதி கூறினான். திருமண நிகழ்ச்சி நடைபெறுவதற்கும் இல்லறம் நிகழ்த்துவதற்கும் வேண்டும் பெரும் பொருளை நாடி வெளிநாடு சென்றான். குறிப்பிட்டுச் சென்ற காலத்தில் திரும்பி வரவில்லை. இவள் அழகு குன்றத் தொடங்கியது. மேனியில் வாட்டம் ஏற்பட்டது. இவள் காதலைப் பற்றி எவ்விதமோ சில பெண்கள் அறிந்துவிட்டார்கள். அவர்கள் கூடும் இடங்களில் பேசுவதற்குப் பொருள் கிடைத்துவிட்டது. பேசவும் தொடங்கிவிட்டார்கள். தன் உடல் வாடுவது பற்றியும், அழகு குறைவது பற்றியும், பிறர் பழிகூறுவது பற்றியும் அவள்கவலைப்படவில்லை. அவள் கவலையெல்லாம் காதலனைப்பற்றித்தான். “குறிப்பிட்ட காலத்தில் வரவில்லையே, அவ்விதம் வருவதாக கூறிவிட்டுச் சென்ற உரையைப் பெய்த்து விட்டானே என்று அறக் கடவுள் அவனைத் தண்டிக்கத் தொடங்கி விடக்கூடாதே. அவன் வருகிற நாளில் வரட்டும் எவ்வித நோயின்றியும் திரும்புவானாக” என்று எண்ணிக் கடவுளை நோக்கி வாழ்த்துகின்றாள். இவள் அன்புக்கும் மேனாட்டுப் பெண்களின் அன்புக்கும் எவ்வளவு வேறுபாடு பாருங்கள். இவளுக்கோ இன்னும் மணமாகவில்லை. இன்னொருவனை மணப்பது என்றாலும் எவ்விதத் தடையும் இல்லை. விரைவில் திரும்பி வரவில்லையே என்று சீற்றம் கொண்டாளா? புதிய காதலனை நாடினாளா? பொறுமையிழந்து வாயில் வந்ததைக்  கூறினாளா? இல்லையே “நம்மை விட்டுச் சென்றவர் கருதியவாறு  பொருள் கிட்டாததனால் தான் இன்னும் வரவில்லை. அதனால் குற்றமில்லை; அவர் எவ்விதத்துன்பமின்றியும் இருப்பாராக! நம் காதலர் நோயிலர் ஆகுக” என்றுதானே வாழ்த்துகின்றாள்! தமிழ்ப் பெண்ணின் காதல், நினைந்தவுடன் மணந்து சினந்தவுடன் தணந்துவிடக் கூடியதன்றல்லவா?

பாடல்

அகநானூறு 115 – பாலை

அழியா விழவின் அஞ்சுவரும் மூதூர்ப்

பழியிலர் ஆயினும் பலர்புறம் கூறும்

அம்பல் ஒழுக்கமும் ஆகிய; வெஞ்சொல்

சேரியம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக;

நுண் பூண் எருமை குடநாட்டு அன்ன என்

ஆய்நலம் தொலையினும் தொலைக; என்றும்

நோய் இலர் ஆக நம் காதலர்; வாய்வாள்

எவ்வி வீழ்ந்த  செருவில் பாணர்

கைதொழு மரபின் முன் பரித்து இடுஉப் பழிச்சிய

வள்ளயிர் வணர்மருப்பு அன்ன ஒள்ளிணர்ச்

சுடர்ப் பூங்கொன்றை ஊழுறு விளைநெற்று

அறைமிசைத் தாஅம் அத்தம் நீளிடைப்

பிறைமருள் வான்கோட்டு அண்ணல் யானைச்

சினமிகு முன்பின், * வயமான் அஞ்சி

இனம் கொண்டு ஒளிக்கும் அஞ்சு வரு கவலை

நன்னர் ஆய் கவின் தொ£லைச் சேய்நாட்டு

நம் நீத்து உறையும் பொருட்பிணி

கூடாமையின் நீடியோரே.

சொற்பொருள்

thalaivi thozhi001அழியா – முடிவுறாத, விழவின்  – திருவிழா நடைபெறுதலையுடைய, அஞ்சுவரும் – பகைவர் அஞ்சும் (பாதுகாவலடையுடைய), *** வயமான் என்று பாடம் கொண்டு தாவும் குதிரைப் படையையுடைய அஞ்சி என்னும் சிற்றரசன் என்று பொருள் கூறுவாறுமுலர் அது சிறப்புடைத்ததாக இல்லை. மூதூர் – பழமையான ஊரின் கண்ணே, பழி இலர் ஆயினும் – காதலர் எவ்வித பழிக்கும் ஆளாகாதவராய் இருந்த போதிலும், பலர் – அறிவு நிரம்பாப் பெண்கள் பலர், புறங்கூறும் – காணாதவிடத்தே பழித்துக்கூறும், அம்பல் ஒழுக்கமும் – சிலரேயறிந்து தமக்குள் உரையாடும் செயல்களும், ஆகிய – தோன்றிவிட்டன; வெம்சொல் – காரணம் இல்லாது கொடுஞ்சொல் கூறும் சேரியம் பெண்டிர் – அழகிய தெருவிலுள்ள பெண்கள், எள்ளினும் – நம்மை இகழினும், எள்ளுக – இகழ்க; நுண் – நுட்பமான வேலைப்பாடு பொருந்திய, பூண் – அணிகலன்கள் அணிந்துள்ள – எருமை – எருமை என்பானின். குடநாட்டு அன்ன – குடநாட்டை ஒத்த, என் ஆய்நலம் – எனது அழகிய நலம், தொலையினும் – கெட்டாலும், தொலைக – கெடுவதாக என்றும் – எப்பொழுதும், நோயிலராக – நோயில்லாமல் இருப்பார் ஆக, நம் காதலர் – நம் தலைவர். வாய்வாள் – வீசின் பகைவரைத் தப்பாத வாட்படையினை யுடைய, எவ்வி – எவ்வி என்னும் சிற்றரசன், வீழ்ந்த – மடிந்த, செருவில் – போர்க் களத்தில், பாணர் – பாணர்கள், கைதொழுமரபின் – கையால் தொழுது வணங்கும்  தன்மைக்குரிய, முன் பழிச்சிய – முன்பு வணங்கிய (யாழின்) பரித்து இடூஉ – ஒடித்துப் போட்ட வள்ளுயிர் – நல்ல ஒலிப்பினையுடைய, வணர் – வளைந்த, மருப்பு அன்ன – கோட்டை  (தண்டை) ஒத்த, ஒள் – ஒளி பொருந்திய இணர் – பூங்கொத்துகளையுடைய, பூ கொன்றை – பூக்கள் மிக்க கொன்றையினது. ஊழுறு – முறையாக முற்றி, விளை – விளைந்த, நெற்று – நெற்றுக்கள், அறைமிசை – பாறையின் மேல், தாஅம் – பரவிக்கிடக்கும், அத்தம் – சுரத்தின், நீள் இடை – நீண்டவழியில், பிறைமருள் – பிறைமதியை ஒத்த வான் – பெரிய, கோட்டு – தந்தத்தினையுடைய, அண்ணல் – தலைமை தாங்கிச் செல்லும், யானை – வயதுமுதிர்ந்த யானை, சினமிகு – சீற்றம்மிகும், முன்பின் – வலிமையுடைய வயமான் –  அரியை (சிங்கத்தை), அஞ்சி – கண்டு பயந்து, இனம் – தன் கூட்டத்தை, கொண்டு ஒளிக்கும் – பாதுகாவலான இடத்தில் கொண்டுபோய் மறைக்கும், அஞ்சுவரு – அச்சம் மிகும், கவலை  பிரிவு பட்டுள்ள வழிகளில், நன்னார் – நல்ல ஆய்கவின் – மென்மையான அழகு, தொலைய – கெட, சேய்நாட்டு – மிகு தொலைவிலுள்ள நாட்டிற்குச் சென்று, நம் – நம்மை, நீத்து – நீக்கி, உறையும் – தங்கும், பொருள்பிணி – பொருளைத் திரட்டுதல், கூடாமையின் – குறித்த காலத்தில் முடியாமையின், நீடியோர் – காலம் தாழ்த்தோர். (ஏ, அசை)

இயைபு: தோழி! நம்மை எள்ளினும் எள்ளுக. அழகு கெடினும் கெடுக; நீடியோர் நோயிலர் ஆகுக. (பிரிவின்கண் ஆற்றியிரு என்று வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் கூறியது)

ஆராய்ச்சி குறிப்பு: அம்பல் – அலர்; காதலரின் களவொழுக்கத்தைச் சிலர் அறிந்து பேசுவார்களேயானால், ‘அம்பல்’ உண்டாகிவிட்டது என்றும் கூறுவது மரபு.

எருமை: ‘எருமை குடநாடு’ என்பதானல், குடநாட்டை ஆண்ட ஒருவன் எருமை என்ற பெயரைக் கொண்டுள்ளதாக அறிகின்றோம். இன்று யாரேனும் ஒருவரை இகழ்ச்சியாகக் கூற விரும்பின் ‘எருமை’ என்று கூறுகின்றோம். ஆதால் ஒருவர்க்கு ‘எருமை’ என்ற பெயர் இடப்பட்டிருந்தது என்றால் வியப்பாகத்தான் இருக்கும். ஆனால், வேற்றுமொழியில் இத்தகைய பெயர்களை இடுகின்றோம். ‘காமதேனு’ (பசு) ‘கற்பகம்’ (மரம்) ‘மாணிக்கம்’ (கல்) ‘கமலம்’ (தாமரை) என்ற பெயர்களை இன்றும் இடுகின்றாகள். தமிழில் கூறினால்தான் அதை இழிவாகக் கருதுகின்றார்கள். இன்னும் ஆங்கிலேயர்களிடையே  Stone, Thorn, Wood முதலிய பெயர்கள் வழங்கக் காண்கின்றோம். ஆகவே அன்று அப் பழங்காலத்தில் இட்ட ‘எருமை’ என்ற பெயரைக் கண்டுவியப்படைய ஒன்றுமில்லை, இவ் எருமை என்பவன், இன்று மைசூர் என வழங்கும் நாட்டையும் ஆண்டிருத்தல் வேண்டும். மைசூரும் குடநாட்டின் ஒரு பகுதியான தமிழ்நாடாகத்தான் அன்று இருந்தது. அதற்கு எருமையூர் (எருமை என்பவன் ஆண்ட ஊர்) என்ற பெயர் வழங்கிற்று. அப்பெயரே பின்னர் ஆரியத்தில் ‘மகிஃடாபுரி’ என மொழி பெயர்க்கப்பட்டது. அதன் பின்னர் மகிஃடாசுரன் ஆண்டதாகப் புராணமும் எழுதப்பட்டது. ‘மயிலாடு துறையை’ ‘மாயூரம்’ எனவும் ‘பழமலையை’ விருத்தாசலம் எனவும் மறைக்காட்டை ‘வேதராணியம்’ எனவும், மொழிபெயர்த்தது போலவே எருமையூரையும் மகிஃடாபுரியாக்கினார்கள். இவன் மாமூலனார் காலத்தில் ஆண்டவனா? என்பது ஆராய்தற்பாலது. ‘பகுவாய்’ என்று தொடங்கும் அகம் முப்பத்தாறாவது பாட்டில், தலையானங்கானத்தில் நெடுஞ் செழியனால் வெல்லப்பட்ட ஏழு சிற்றரசர்களுள் எருமையூரன் என்று ஒருவன் கூறப்படுகினறான் அவன். ‘எருமை’ என்பவனுக்குரிய ஊர் எருமையூர் என்றாகிப் பின்னர் அதை ஆண்டவனுக்கு எருமையூரன் என்று வருவதுதான் இயல்பு.

குடநாட்டை ஒத்த அழகு: மாமூலனார் பெண்களுக்கும் அவர்கள் அழகுக்கும் ஒப்புமையாக அழகிய ஊர்களைக் காட்டுகின்றார். பெண்களுக்கு ஒப்பாக ஊர்களை உவமை கூறுவது பொருந்தாது என்று  சிலர் கருதுகின்றனர். காடுகளையும் நகரங்களையும் பெண்களாக உருவகப்படுத்துவது ஆங்கிலப் புலவர்களிடமும் காணப்படுகின்றது. பெண்களாக உருவகப்படுத்தும் நாட்டைப் பெண்களுக்கு ஒப்பாகக் கூறுவதில் தவறு ஒன்றுமில்லை. பெண்கள் அழகுத் தெய்வங்கள்; அழகுத் தெய்வங்கள் அழகுற விளங்குதல் எவ்வளவு இன்றியமையாததோ, அவ்வளவு இன்றியமையாதது நாடும் அழகுற விளங்குதல். நாட்டை அழகுறப் பேணுதல் வேண்டுமென்றும் கருத்தை வலியுறுத்தவே, நாடுகளைப் பெண்களுக்கு உவமையாகக் கூறியிருத்தல் வேண்டும். அதன் நுட்பம் அறிந்து வியத்தற்குரியது.

எவ்வி: புறநானூறு, குறுந்தொகை, அகநானூறு முதலிய நூல்களில் இப் பெயருடையவன் பல புலவர்களால் பாராட்டப்படுகின்றான். கொடைச்சிறப்பும் வெற்றிச்சிறப்பும் உடையவனாகவே பாராட்டப்படுகிறான். இப்பாட்டில் இவன் போர்க்களத்தில் வீழ்ந்ததும் பாணர்கள் துயர் மிகுதியால் தம் யாழ்க்கோடுகளை முறித்துப் போட்டுவிட்டதாகக் கூறப்படுகின்றது. ஆகவே இவனுக்குப் பிறகு, பாணர்களை ஆதரித்து அவர்கள் கலையைப் போற்றும் புரவலர் இலர் என்ற எண்ணத்தினாலேயே இவ்விதம் செய்தாரோ என்று எண்ண வேண்டி உள்ளது.

மிழலைக் கூற்றத்தை ஆண்ட எவ்வி என்பவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால் வெல்லப்பட்டதாக மாங்குடி மருதனார் கூறுகின்றார் (புறம் 24) ஒம்பா வீகைமாவேள் எவ்வி (பொருளைப் பாதுகாவாது கொடுக்கும் தன்மையையுடைய சிறந்தவேள் ஆகிய எவ்வி) என்று சிறப்பிக்கின்றார். இவனும் மாமூலனார் பாட்டில் கூறப்படும் எவ்வியும் ஒருவனாயிருப்பின் மாமூலனார் நெடுஞ்செழியன் காலத்தவர் என்பது உறுதிப்படும்.

மிழலைக் கூற்றம் என்பது திருப்பெருந்துறை, துஞ்சலூர், தண்டலை என்ற ஊர்கள் அடங்கிய பகுதியென்று இராவ்பகதூர் வி. வெங்கையர் அவர்கள் கூறுகின்றார்கள். அதனால் இப்பகுதி தஞ்சாவூர் மாவட்டமும் புதுக்கோட்டைத் தனி அரசும் சந்திக்கும் பகுதிகளில் உள்ள இடமாகலாம். அக்காலத்தில் ஊர், பேரூர், கூற்றம், கோட்டம், வளநாடு, நாடு என்று நாடுகளைப் பிரித்து ஆண்டார்கள். இக்காலத்தில் வழங்கும் தாலுக்கா, சில்லா அவைகளை மறையச் செய்துவிட்டன.

உவமை: கொன்றைமரத்தின் நெற்றுகளுக்கு (முதிர்ந்த காய்களுக்கு) உவமையாக யாழின்கோடு கூறப்பட்டுள்ளது. பண்டைத் தமிழ்நாட்டில் பலவகையான யாழ்கள் இருந்தன. சீறியாழ், பேரியாழ், செங்கோட்டியாழ், மகரயாழ், சகோடயாழ், என்று அழைக்கப்பட்டன. சிலர் இக்காலத்து நிலவும் வீணையை யாழ் என மயங்குகின்றனர். யாழ்வேறு; வீணைவேறு. திருவனந்தபுரம் கண்காட்சிச்சாலையில் ‘யாழல்’ என்ற பெயரோடு ஒருபழைய யாழ் காணப்படுகின்றது. பண்டைத் தமிழர் யாழ் வகைகளில் அஃதும் ஒன்றாகும். அஃது இருபத்தோரு நரம்புகளைப் பெற்றிருக்கின்றது. அதைப் பார்த்தால் பண்டைத்  தமிழர் யாழ்கள் எவ்விதம் இருந்திருக்கும் என்று ஒருவாறு உய்த்துணரலாம்.

(தொடரும்)