மாமூலனார் பாடல்கள் – 8 – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
எ “தோழி! அவர் பெரும்
பேரன்பினர்.” – தோழி.
“பொருளில்லார் இவ்வுலகில் எவ்வித பயனும் அடைய முடியாது. ஆதலின் பொருள் தேடிவருகின்றேன்” என்று கூறிவிட்டுத் தலைவன் சென்றான். அவன் சென்று சில நாட்களே யாயினும், பல மாதங்கள் கழிந்து விட்டனபோல் தலைவிக்குத் தோன்றுகின்றது. தலைவி, தலைவன் பிரிவாற்றாது வருந்துகின்றாள். தோழி ஆறுதல் கூறுகின்றாள்.
தலைவி: தலைவர் சென்றுள்ள இடம் மிகக்கொடியது அல்லவா?
தோழி: ஆம் மிகக் கொடியதுதான். பகலை உண்டு பண்ணுகின்ற ஞாயிறு இல்லையேல், உலகமே இல்லைதான். ஆயினும் அவர் சென்றுள்ள இடம் மலைநாடு. ஆங்கு அருவியில் நீரே இராது. அங்குள்ள யானை தின்பதற்கு ஒன்றுமின்றிப் பசியால் வருந்தும். குடிப்பதற்கு நீர் கிடைக்கப்பெறாது, சுனையில் படிந்துள்ள பாசியைத் தின்று பார்க்கும்; பசியால் வருந்தும். பிடியோடு ஒரு பக்கத்தில் அயர்ந்து படுத்துவிடும். அவ்விடங்களில் மூங்கில்கள் வெயிலால் உலர்ந்து வெடித்து வெடித்து விழும்.
தலைவி: என்னவெப்பம்! என்ன கொடுமை!! எதற்காக அங்குச் செல்லல் வேண்டும்?
தோழி: பொருள் தேடத்தான். பொருள் என்றால் இருந்த இடத்தில் இருந்தால் வந்துவிடுமா? உழைப்பு இல்லாமல் உலகில் எதையும் அடையமுடியாது அல்லவா? இன்பம் அடைய விரும்புவோர் முதலில் துன்பப்பட்டுத் தான் ஆகவேண்டும். துன்பம் இன்றி இன்பம் இல்லை.
தலைவி: தோழி! நம்மைவிடப் பொருள்தான் அவருக்குச் சிறந்தது போலும்.
தோழி: இல்லை இல்லை! அப்படி நினைத்துவிடாதே! தேடற்கரிய பொருளைத் தேடிச் சென்றாலும் உன்னை மறவார். கரிய நிறம் உடைய ஆண் மான்கள் தங்கும், பருக்கைக் கற்கள் குவிந்து கிடக்கும், அஞ்சாமையையுடைய மழவர்கள் திருட்டுத் தொழிலைச் செய்வதற்குப் புறப்பட்ட, நீண்ட அடிமரத்தை உடைய ஈரப்பலா மிகுந்த, ஒடுங்காடு என்னும் ஊருக்கு அப்பால் குட்டுவன் காத்து வருகின்றான். அவன் நாட்டில் பசி என்பதே தெரிய முடியாத அளவு வளப்பம் மிகுந்த வயல்கள் பல உண்டு. ஆங்கு வளைந்த பெரிய கொம்புகளையுடைய எருமை தின்னும் தாமரையை வெறுத்ததால் வளைந்த முதிர்ந்த பலாவின் நிழலில் போய் உறங்கும். அஃறிணையுயிர்கள் கூடப் பசியை அறியாது. இனிமையாக வாழும் அந்த நாடுதான் குடநாடு. அதைக் குட்டுவன் என்பவன் காத்து வருகின்றான். அந்தக் குட நாட்டிற்கு நம் தலைவரை அரசராக்கினாலும் உன்னை மறந்து, அங்குத் தங்கார். அவர் உன்னிடம் மிகுந்த பேரன்பினர். வருவார் வருந்தாதே.
எ. பாடல்
அகநானூறு 91 : பாலை
விளங்குபகல் உதவிய பல் கதிர் ஞாயிறு
வளங்கெழு மாமலை பயம் கெடத் தெறுதலின்
அருவி ஆன்ற பெருவரை மருங்கில்
சூர்ச் சுனைதுழைஇ நீர்ப்பயம் காணாது
பாசி தின்ற பைங்கண் யானை
ஒய்பசிப் பிடியொடு ஒருதிறன் ஒடுங்க
வேய்கண் உடைந்த வெயில் அவிர் நனந்தலை
அரும் பொருள் வேட்கையின் அகன்றனராயினும்
பெரும் பேர் அன்பினர்; தோழி!
இருங்கேழ்
இரலை சேக்கும் பரல் உயர் பதுக்கைக்
கடுங்கண் மழவர் களவு உழவு எழுந்த
நெடுங்கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர்
விசி பிணி முழவின் குட்டுவன் காப்பப்
பசியென அறியாப் பணைபயில் இருக்கைத்
தடமருப்பு எருமை தாமரை முனையின்
முடமுதிர் பலவின் கொழுநிழல் வதியும்
குடநாடு பெறினும் தவிரலர்
மடமான் நோக்கி நின் மாண்நலம் மறந்தே!
பதவுரை:
விளங்குபகல் – உலகம் விளங்குதற்குக் காரணமான பகலினை, உதவிய – கொடுத்த, பல்கதிர் ஞாயிறு – பல ஒளிக்கதிர்கள் மிக்க ஞாயிறு, வளம்கெழு – வளப்பம் பொருந்திய, பயம் – பயன், கெட – அழிய, தெறுதலின் – எரித்தலின், அருவி ஆன்ற – மழை பெய்யும் காலத்து அருவிகள் பொருந்தியிருந்த பெருவரை மருங்கில் – பெரிய மலையின்கண், சூர்ச்சுனை – மலையில் உள்ள அச்சம் உண்டு பண்ணும் குளங்களில், துழைஇ – நீண்ட கையால் துழாவி, நீர்ப்பயம் – நீர் கிடைக்கும் பயனை, காணாது – அடையாது, பாசி தின்ற – பாசியினைத்தின்ற, பைம்கண் – பசிய கண்ணினையுடைய, யானை – ஆண்யானை, ஒய் பசி – களைப்பைத் தரும், பசிமிக்க, பிடியொடு – பெண்யானையுடன், ஒரு திறன் ஒடுங்க – ஒரு பக்கத்தின் கண் அயர்ந்து படுத்திருக்க, வேய்கண் – மூங்கிலின் கணுக்கள், உடைந்த – வெடித்த, வெயில் அவிர் – வெயில் மிக்கு விளங்குகின்ற, நனந்தலை – அகன்ற இடத்தினைடைய பாலை நிலத்தில், அரும்பொருள் – கிடைத்தற்கு அரிய பொருளின், வேட்கையின் – விருப்பத்தால், அகன்றனராயினும் – நம்மை விட்டுப்பிரிந்து சென்றாராயினும், பெரும் பேர் – மிகந்த பெரிய அன்பினர் – அன்பினையுடையவர், தோழி – தோழியே;
இருங்கேழ் – கரியநிறத்தினைப் பொருந்திய, இசலை – ஆண் மான்கள், சேக்கும் – படுத்திருக்கும், பரல் உயர் – பருக்கைக் கற்களால் உயர்ந்த, பதுக்கை – கற்குவியலின்கண், கடுங்கண் – அஞ்சாமைமிக்க மழவர் – மறவர்கள், களவு உழவு – திருடுதலாகிய தொழில் முயற்சியை, எழுந்த – செய்யப்புறப்பட்ட, நெடுங்கால் – நீண்ட அடி மரத்தினைப்பொருந்திய, ஆசினி – ஈரப்பலா மிகுந்த, ஒடுங்காட்டு – ஒடுங்காடு என்னும் ஊருக்கு, உம்பர் – அப்பால், விசி – வாரால் இழுத்துக்கட்டப்பட்ட, முழவின் – வெற்றியின் பொருட்டும் கொடையின் பொருட்டும் மங்கலம் பொருட்டும் அடிக்கின்ற மத்தளத்தைஉடைய, குட்டுவன் – குட்டுவன் என்னும் அரசன், காப்ப – காப்பாற்றுவதால், பசியென – பசியென்பது இன்னது என்று, அறியா – அறியாத, பணை பயில் – வயல்கள் மிகுந்த, இருக்கை – இருப்பிடங்கள் மிகுந்த, தடமருப்பு – வளைந்த பெரிய கொம்புகளையுடைய, எருமை, தாமரை – தாமரையைத் தின்னுதலை, முனையின் – தெவிட்டி வெறுப்பு ஏற்பட்டால், மூட – வளைந்த, முதிர் – வயதான பலவின் – பலாமரத்தின், கொழுநிழல் – நல்லநிழலில், வதியும் – படுத்து உறங்கும், குடநாடு – மேற்கேயுள்ள சேரநாட்டை, பெறினும் – அடைந்தாலும், தவிரலர் – திரும்பிவருவதினின்றும் நீங்கலர்; மட – அழகிய, மான் – மான்போன்று பிறரைக் கண்டால் கூசி அஞ்சும், நோக்கி – கண்களையுடையவளே; நின்மாண்நலம் – உன்னுடைய பெருமைமிக்க குணங்களையும் அழகையும், மறந்தே – மறந்துவிட்டே!
ஆராய்ச்சிக்குறிப்பு:
இப்பாட்டில் இரு வேறுபட்ட நிலத்தின் இயல்புகளை நன்கு விளக்குகின்றார். ஒருபுறம் பாலை நிலம். வெப்பம் மிகுதி. உண்ண உணவு குடிக்கநீர் முதலியன இல்லை. இன்னொருபுறம் மருதநிலம் வளப்பம்மிகுதி. நிழல்வளம் பொருந்தியது. நீரும் நெல்லும் மிக்குப் பசி என்பதே இன்னது என்று தெரியாத இடம்.
ஒடுங்காடு: மலைநாட்டில் உள்ள ஓர் ஊர். ஒடு மரம் மிகுந்திருந்ததனால் இப்பெயர் பெற்றது போலும். ஒடு மரமுண்மை “ஒடுமரக்கிளவி உதிமர இயற்றே” (தொல் எழுத்து உயிர்மய.60) என்பதனானறிக. ‘ஒடு’ மரம் இப்பொழுது ‘உட்’ மரம் என வழங்குகின்றது. இவ்வூர் சேரநாட்டிற்கும் பாண்டிய நாட்டிற்கும் இடையில் உள்ள மலைநாட்டு ஊர் ஆகும்.
குடநாடு: இன்று ‘மலையாளம்’ என்று வழங்கப்படும் இடம் தான் அன்று தமிழ் வழங்கும் குடநாடாக இருந்தது. இன்று தமிழரின்றும் வேறுபட்டதாகவும், தமிழர்க்கும் தமக்கும் தொடர்பு இல்லையென்றும் நினைக்கும் மக்கள் மிகுந்த நாடாக விளங்குகின்றது. இதுவும் காலத்தின் கோலம்! இவ்வேறுபாடு எதனால் ஏற்பட்டது எனின், பாண்டியநாட்டுத் தமிழரினின்றும் சேரநாட்டுத் தமிழரை மலைகளும் காடுகளும் இடைநின்று பிரித்தன. சேரநாட்டை ஆண்ட பிற்கால அரசர்கள் தமிழையும் தமிழ்ப் புலவரையும் போற்றாது புறக்கணித்தனர். ஆரியம் அங்குச் செல்வாக்குப் பெற்றது. ஆரியமொழியை ஒட்டி இலக்கணம் வகுத்தனர். ஆரிய மொழிச் சொற்களைத் தம்மொழியிற் கலந்து வழங்கினர். ஆகவே தமிழ்மொழி வேற்று மொழியாக உருவடைந்து ‘மலையாளம்’ என்ற புதுப்பெயரையும் பெற்றது. அதனால்தான் தமிழில் வேற்று மொழிச் சொற்களைக் கலந்து எழுதுதலும் பேசுதலும் கூடாது என்கின்றோம்.
குட்டுவன்: பண்டைச் சேர மன்னர்களுள் குட்டுவன் என்ற பெயரோடு நால்வர் காணப்படுகின்றனர். பல்யானைச் செல் கெழுகுட்டுவன், செங்குட்டுவன், குட்டுவன் சேரல். குட்டுவன் கோதை, இவர்களெல்லாரும் அடைகொடுத்துச் சிறப்பிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களுள் செங்குட்டுவன், இளங்கோ அடிகளின் தமையனாய்ச் சிலப்பதிகாரத்தில் கூறப்படுபவன் ஆதலின். கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தவன் ஆதல் வேண்டும். பல்யாணைச் செல்கெழுகுட்டுவன், செங்குட்டுவனின் மகன். குட்டுவன் கோதை என்பவன், புலவர் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரனாரால் பாடப்பட்டுள்ளவன்.
இப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள குட்டுவன் இவர்களில் ஒருவனா? இவர்களினின்றும் வேறாகியவனா? என்பது ஆராய்தற்பாலது. இவன் எத்தகைய அடைமொழியின்றியும் கூறப்பட்டுள்ளான். ஆதலின் இவனே எல்லார்க்கும் முற்பட்டவனாதல் வேண்டும். இவனுக்குப்பின் வந்தோரை இவனின் வேறுபடுத்துவதற்கு அடைமொழி கொடுத்து அழைத்திருக்கலாம். ஆகவே இவன் வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட சேர அரசன் ஆதல் வேண்டும் என முடிவு கட்டலாம். இவன் மாமூலனார் காலத்தில் ஆண்டவனதால் வேண்டும்.
Leave a Reply