எம் தலைவர் தமிழ்ப் பெரியார் என்றும் வாழ்க! – கதி.சுந்தரம்
பெரியார் ஒருகுலத்துக் கொருநீதி உரைத்து நிற்கும் உயர்வில்லார் தலைசாயப் புரட்சி செய்த ஒரு தலைவர்; தென்னாட்டின் உயர்வைக் கூறும் உயர்கதிரோன்; சாதியென்னும் கொடிய காட்டுள் வருகின்ற இன்னலதை எதிர்த்துப் போக்கி வாளேந்தி முதற்பயணம் செய்த வீரர்; இருளகற்றும் பணிபுரிந்து நிற்கும் செம்மல், எம் தலைவர் தமிழ்ப் பெரியார் என்றும் வாழ்க! – கவிஞர் கதி.சுந்தரம்
கொள்கைச் சிற்பி அண்ணா – கதி.சுந்தரம்
தமிழ்ப் பகையை மாய்க்கும் வேங்கை அறநெறியைப் பரப்புகின்ற தலைவர் அண்ணா; அருந்தமிழர் பெருமையதை முழக்கும் வீரர்; திறமை மிகு பேச்சுக்கோர் வடிவம் ஆவர்; சிந்தனை சேர் எழுத்துக்கோ ஒருவர் ஆவார்; குறள் நெறியைப் பரப்புகின்ற கொள்கைச் சிற்பி; கூறுபுகழ்த் தமிழ்ப் பகையை மாய்க்கும் வேங்கை; உரனுடைய மனிதரெலாம் போற்றி நிற்கும்; உயர் தலைவர் தமிழ் அண்ணா வாழ்க! வாழ்க!! – கவிஞர் கதி.சுந்தரம்
குறள் நெறி வாழ்க – கவிஞர் கதி.சுந்தரம்
1. தமிழினமே! எழுந்தார்த்துக் குறளென்னும் கேடயத்தைத் தாங்கி நின்றே இமிழ்கடல்சூழ் உலகுய்ய வழிகாட்டு! கலையூட்டு! எழிலை ஈட்டு! குமிழியெனும் இளமைதனைக் கொழிதமிழின் குறள் நெறிக்கே கொடுத்து வாழ்வாய்! அமிழ்தனைய வளம்பலவும் நாடெய்தும்; ஆல்போலப் பெருகி வாழ்வாய்! 2. தூளாக்கு வஞ்சகத்தைத் தோள்தூக்கு முயற்சிக்கே என்று பாடி. ஆளாக்கும் குறள்நெறியை அவனியெலாம் பரப்பிடுவீர்! முழக்கம் செய்வீர்! தாளாற்றிப் பொருள் சேர்ப்பீர்! தருபுகழைப் பெற்றுவாழ்வீர்! வேற்று நாட்டார் கேளாத பழங்காலம் கிளைவிரித்தே அறமுரைத்த குறளே! வாழ்க!! – குறள்நெறி தை 2, 1995 /15.01.1964