தமிழனென்றால் பிறமொழிதான் பிடிக்குமோ – பிள்ளை தாயைவிட்டு வேறொருத்தி தாள்பணிந்து கிடக்குமோ? அமிழ்தைவிட அடுப்புக்கரி சுவைக்குமோ – அட அடுத்தவரின் சரக்கினில்தான் இவனுக்கென்றும் மயக்கமோ! பிழைப்புக்காகத் தமிழுங்கொஞ்சம் படிக்கிறான் – நல்ல பெரியவேலை கிடைக்கும்வரை திறமையாக நடிக்கிறான்! குழப்பம்பண்ணித் தாய்மொழியைக் கெடுக்கிறான் – வெளிக் குப்பையெல்லாம் தமிழுக்குள்ளே திணிப்பதற்கே துடிக்கிறான்! வடமொழிதான் இவனையின்னும் ஆளுது – பின்னர் வந்துசேர்ந்த ஆங்கிலமும் கூடியாட்டம் போடுது! விடுதலையே இவனுக்கென்றும் இல்லையோ! – இவன் வேற்றுமொழி அடிமைசெய்ய வேண்டிவந்த பிள்ளையோ!