மண்ணினையும் மாண்பினையும் காக்க வேண்டும்! – தாமோதரன் கபாலி

மண்ணினையும் மாண்பினையும் காக்க வேண்டும்! உண்பதுவும் உறங்குவதும் வாழ்க்கை யல்ல! உடமைகளும் உரிமைகளும் இழக்க வல்ல! உண்மைகளும் உணர்வுகளும் சாக வல்ல! உள்ளொளியும் உயிரினையும் போக்க வல்ல! பண்ணிசையும் பாத்தமிழாய் வாழ வேண்டும்! பரிவோடும் பண்போடும் நோக்க வேண்டும்! மண்ணினையும் மாண்பினையும் காக்க வேண்டும்! மாசற்ற வாழ்வினையே போற்ற வேண்டும்!   – தாமோதரன் கபாலி

சந்தம் ஒலிக்கும் செந்தமிழே! – தாமோதரன் கபாலி

சந்தம் ஒலிக்கும் செந்தமிழே!   முத்து முத்தாய்த் தமிழ்ச்சொற்கள் முந்தும் உயிரை அரவணைக்கும் கொத்துக் கொத்தாய்ப் பெரும்வினைகள் கொள்ளும் உயிரைக் கடைத்தேற்றும் சித்துச் சித்தாய் அகமடங்க திங்கள் ஒளியாய்க் குளிர்விக்கும் சத்துச் சத்தாய் உயிர்க்கலந்து சந்தம் ஒலிக்கும் செந்தமிழே! தாமோதரன் கபாலி

குவிக்க வேண்டும் தமிழ்ச்செல்வம்! – தாமோதரன் கபாலி

குவிக்க வேண்டும் தமிழ்ச்செல்வம்! தமிழில் பேசு கலப்பின்றித் தவமாய்க் கொண்டு பழகிடவே சிமிழில் ஒளிரும் முத்தாகும் சிந்தை மகிழும் ஒளிக்காணும் குமிழைப் போன்ற வாழ்வினிலே குவிக்க வேண்டும் தமிழ்ச்செல்வம் அமிழ்தாய் மாறி உயிரினிலே அடங்கும் பொலிவைக் காண்போமே! தாமோதரன் கபாலி

தானே அருள்வாள் தமிழன்னை! – தாமோதரன் கபாலி

தானே அருள்வாள் தமிழன்னை! தமிழன் னையைக் கைவிடாதே தாங்கி உயிரை அணைப்பவளாம்! அமிழ்தக் கலசம் கையேந்தி அன்பு கலந்து கொடுப்பவளாம்! குமிழைப் போன்ற வாழ்க்கையிலே குன்றா விளக்காய் ஒளிதருவாள்! தமிழில் பாடி மனமுருக தானே அருள்வாள் தமிழன்னை! தாமோதரன் கபாலி

யாரெல்லாம் தமிழரையா? – தாமோதரன் கபாலி

யாரெல்லாம் தமிழரையா? யாரெல்லாம் தமிழரையா? அகமறியச் சொல்வீர்! ஐயமின்றிச் சுவைத்துணர்வார் ஆரமுதாம் தமிழை! ஊரெல்லாம் உண்டிடவே உளம்நிறைந்து அழைப்பார்! ஒண்டமிழில் ஓங்கிடவே ஒருமையிலே திளைப்பார்! பேரெல்லாம் நற்றமிழில் பெருகிடவே உரைப்பார்! பிறந்திட்டத் தவப்பயனைப் பெருமையென மகிழ்வார்! பாரெல்லாம் செந்தமிழைப் பரப்பிடவே திகழ்வார்! பண்புடனே நம்மையெல்லாம் பார்த்திடவே அருள்வார்!   தாமோதரன் கபாலி