தலைப்பு-அசோகர்காலம்-வள்ளுவர்காலம்-சி.இலக்குவனார் -thalaippu_asokarkaalam_valluvarkaalam_S.Ilakkuvanar

அசோகர் காலமே வள்ளுவர் காலம்

  வள்ளுவர் காலம் சங்கக் காலம் என்றோம். சங்கக் காலப் புலவர்களில் பலர் இவருடைய திருக்குறளை எடுத்தாண்டுள்ளார். மணிமேகலையாசிரியர் சாத்தனார்

தெய்வம் தொழான் கொழுநன் தொழுது எழுவான்

பெய்யெனப் பெய்யும் மழை என்ற

பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்

என்று கூறுகின்றார். இதில் வள்ளுவர் மொழியை எடுத்தாண்டு அவரைப் பொய்யில் புலவர் என்று பாராட்டுவதையும் காண்கின்றோம். அதனால் வள்ளுவர் சாத்தனார் காலத்திற்கு முற்பட்டவர் என்று அறிகின்றோம். சாத்தனார் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என வரலாற்று ஆசிரியர்கள் அனைவரும் முடிவு கட்டியுள்ளனர். ஆகவே வள்ளுவர் காலம் கி.பி.இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்பதில் ஐயமில்லை.

  இன்னும் ஆலந்தூர் கிழார் என்பவர் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடுங்காலத்தில்,

“நிலம் புடைபெயர்வதாயினும் ஒருவன்

செய்திகொன்றோர்க்கு உய்திஇல்லென

அறம்பாடிற்றே ஆயிழை கணவ”

என்று பாடுகின்றார்.

இதில்,

“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு”

என்ற குறளை எடுத்தாண்டு திருக்குறளை ‘அறம்’ என்றும் சுட்டுகிறார். ஆலந்தூர் கிழார் காலம் கி.மு.இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதி என்கின்றனர். ஆகவே, வள்ளுவர் காலம் அதற்கு முற்பட்டாதல் வேண்டும். திருவள்ளுவர் “மழித்தலும், நீட்டலும் வேண்டாவாம் சான்றோர் பழித்தது ஒழித்து விடின்” என்ற குறளில் மழுங்கச் சிரைக்கும் புத்தமதக் கோட்பாட்டைக் குறிப்பிடுகின்றார். ஆகவே, புத்தமதம் தமிழ்நாட்டில் பரவிய காலத்தில் வள்ளுவர் வாழ்ந்தவர் ஆதல் வேண்டும். புத்தர் பெருமானுக்குப் பிற்பட்டுத் தோன்றி புத்தமதம் தமிழ்நாட்டில் பரவத் தொடங்கிய பொழுது வந்தார் என்று கொள்ளலாம்.

  அசோகன் காலத்தில்தான் புத்தமதம் உலகம் எங்கும் பரவத் தொடங்கிற்று. தமிழ் நாட்டிலும் பரவிற்று. ஆதலால் அசோகன் காலமே வள்ளுவர் காலம் என்று கூறலாம். அசோகன் காலம் கி.மு.மூன்றாம் நூற்றாண்டு என்பர்.

  சிலர் வள்ளுவர் காலத்தைக் கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு என மதி பிறழ்ந்து அறைதல் எவ்வளவு பொருத்தமில்லாதது என்பது வெள்ளிடைமலைபோல் விளங்கு கின்றதல்லவா?

  அவர் திருந்தும் வகை தமிழ்க்கடவுள் அருள்புரிவதாக.

 தமிழெரனக் கூறி, தமிழால்உயர்ந்து, தமிழால் உடலை வளர்த்துத் தமிழுக்கேக் கேடு சூழும் தகவில் மாக்களை என் செய்வது?

  வள்ளுவர்க்குச் சிறப்பு அவர் காலத்தால் முற்பட்டவர் என்பதனால் மட்டுமன்று; என்றாலும் உண்மையை உரைத்தல் வேண்டாமா? உண்மை நிலவுக. பொய்ம்மை ஒழிக. வள்ளுவர் வண்புகழ் வாழ்க.

-செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார்:

சங்க இலக்கியம்: பக்கம் 64-65