[இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  08  தொடர்ச்சி]

 

இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்) 09

  1. மக்கள்

நாடு மக்களால் உருவாகியது. மக்களே நாட்டின் செல்வம். மக்களின்றேல் நாடு ஏது?  மக்களின் சிறப்பே நாட்டின் சிறப்பு.

மக்களிடையே இன்று பல வேற்றுமைகள் உள. இவ் வேற்றுமைகளுள் மக்களை அல்லலுக்கு ஆளாக்குவன சாதியும் மதமும் ஆகும். அன்று தமிழ் மக்களிடையே சாதி வேறுபாடுகள் தோன்றில. `சாதி’ என்னும் சொல்லே தமிழ்ச் சொல் அன்று.  இதனால் `சாதி’ பற்றிய பிரிவு தமிழகத்துக்குப் புறம்பானது என்று தெளியலாகும்.

 மக்களிடையே சமய வாழ்வு காழ்கொண்டிருந்தது. ஆனால், சமயம் காரணமாகப் போரிட்டோர் இலர். மக்கள், அவர்கள் வாழும் திணைநிலங்களுக் கேற்ப அழைக்கப்பட்டனர். முல்லை நிலங்களில் வாழ்ந்தோர் ஆயர் என்றும், குறிஞ்சி நிலங்களில் வாழ்ந்தோர் குன்றவர் என்றும், மருத நிலங்களில் வாழ்ந்தோர் உழவர் என்றும், நெய்தல் நிலங்களில் வாழ்ந்தோர் பரதவர் என்றும் கூறப்பட்டனர். இவற்றுள் ‘ஆயர்’ என்பதும் ‘பரதவர்’ என்பதும் இன்றும் சாதிப் பெயர்களாக நிலைத்துள்ளன.

சூழ்நிலைக்கேற்ப மக்கள் வாழ்வு அமைதல் இயல்பாதலின் திணைகளுக்கேற்ப மக்கள் வாழ்வு முறைகளிலும் மாற்றங்கள் இருந்தன.  ஆனால், அம் மாற்றங்கள் உயர்வு தாழ்வு எனும் வேறுபாட்டுணர்வைத் தோற்றுவித்து மக்களை அலைக்கழித்தில. பிறப்பாலும் தொழிலாலும் உயர்வு தாழ்வு தோன்றப்பெறாது தத்தம் ஆற்றலுக்கேற்ப உழைத்து, உண்டு, உடுத்து, உறங்கி, மகிழ்ந்து  வாழ்ந்தனர்.

முல்லைநில மக்கள் கடவுளை மாயோன் என்று அழைத்து வழிபட்டனர்; வரகு, சாமை, முதிரை ஆயவற்றை உணவுப் பொருளாகக் கொண்டனர்; ஆடு மாடு மேய்த்தலும் வளர்த்தலும் தமக்கு வேண்டிய உணவுப் பொருளை விளைவித்தலையும் தொழிலாகக் கொண்டனர். ஏறு தழுவுதலை  விளையாட்டுப் பொழுது போக்காகப் பெற்றிருந்தனர். அது பின்னர் மணவினைக்குத்  துணை புரிந்தது.  இசைத்துறையிலும் புலமை கொண்டு தமக்கென ஒரு பண்ணை உருவாக்கிக் கொண்டனர். அது முல்லைப் பண் என்றே அழைக்கப்பட்டது. அவர்கள் இசைக்கருவி முல்லை யாழ் எனப்பட்டது. அவர்கட்கு அப்பகுதியில் உள்ள உழை, புல்வாய், முயல் முதலிய விலங்குகளுடன் நெருங்கிய தொடர்பு உண்டு.  கான்யாற்றில் குளித்தனர்;  முல்லை, பிடா, தளா முதலியவற்றின் பூக்களைச் சூடிக் கொண்டனர். அவர்கள் வாழ்ந்த ஊர்கள் பாடி, சேரி, பள்ளி என்று கூறப்பட்டன, ஆங்கெல்லாம் குருந்தியும், கொன்றையும் வளர்ந்தோங்கின.  கானக்கோழியும் சிவலும் வளர்ந்தன.  ஏறு கோட்பறை எங்கும் முழங்கின.

ஆடுமாடுகளே அவர்களுடைய செல்வங்கள்.  அவற்றால் பெறும் பால், தயிர், மோர்,வெண்ணெய் முதலியவற்றைப் பிற பகுதிகட்குக் கொண்டு சென்று விற்றனர்; அப் பகுதிகளிலிருந்து தமக்கு வேண்டியவற்றைப் பண்டமாற்று முறையில் பெற்றனர்.  ஆடவர்கள் ஆடுமாடுகளை மேய்த்து வளர்த்தலில் ஈடுபட்டிருந்தனர். மகளிர், பால், தயிர், முதலியவற்றைப் பிற இடங்கட்குக் கொண்டுசென்று விற்று வேண்டும் பொருளைப் பெற்று வந்தனர்.  பசும் பொன்னைக் கட்டி கட்டியாகக் கொடுத்தாலும் அதனைப் பெறாமல் தமக்குரிய செல்வமாம் பால் எருமையினையும் கரிய நாகினையுமே பெற்று வந்தார்களாம்.

அளை விலையிற் பெற்ற பொருளால் தாமும் உண்டு, கிளைஞரையும் அருத்தித் தம் இல் தேடி வந்தவர்களுக்குப் பசுந்தினைச் சோறு பாலுடன் அளித்து முல்லைநில மக்கள் வாழ்ந்தனர்.

குறிஞ்சிநில மக்கள் கடவுளைச் சேயோன் என்று அழைத்து வழிபட்டனர்;  ஐவனநெல், தினை, மூங்கிலரிசி முதலியவற்றை உணவுப் பொருளாகக் கொண்டிருந்தனர்;  தமக்குரிய உணவுப் பொருளை விளைவித்தலையும் தேன் எடுத்தலையும் கிழங்கு அகழ்தலையும் தமக்குரிய தொழிலாகக் கொண்டிருந்தனர்.  இசைத்துறையிலும் சிறந்து தமக்கு விருப்பமான பண்ணுக்குக் குறிஞ்சிப்பண் என்று பெயரிட்டனர். அப் பண்ணை மீட்டும் யாழுக்குக் குறிஞ்சி யாழ் என்ற பெயர் உண்டானது.

அருவியிலும் சுனையிலும் குளித்தனர்; காந்தள், வேங்கை, சுனைக்குவளை முதலிய பூக்களைச் சூடி மகிழ்ந்தனர்.

அவர்கள் வாழ்ந்த ஊர்கள் சிறுகுடி என்றும் குறிச்சி என்றும் கூறப்பட்டன. ஆங்கெல்லாம் ஆரமும், தேக்கும், திமிசும், வேங்கையும் வளர்ந்தோங்கின. கிளியும் மயிலும் வளர்ந்தன. முருகியமும் தொண்டகப் பறையும் முழங்கின.

குன்றில் வாழ்ந்தமையால் குன்றவர் எனப்பட்டனர். குன்றவர் என்ற சொல்லே காலப் போக்கில் குறவர் என்று உருப்பெற்றது.

முதன் முதல் மக்கள் தோன்றிய இடம் மலையுச்சியே என்பர். ஆகவே இங்கு மக்கள், விலங்குகளோடு விலங்குகளாக வாழ்ந்து நாளடைவில் விலங்கு வாழ்வினின்றும் வேறுபட்ட நாகரிக வாழ்வைத் தொடங்கிய இடமும் குறிஞ்சிநிலப் பகுதியே எனலாம். மூங்கில்கள் உரைசுவதால் நெருப்பு உண்டாவதைக் கண்டே, நெருப்பை உண்டாக்கிக் கொள்வதற்குத் தீக்கடைகோலைக் கண்டுபிடித்துக் கொண்டதும் இங்கேதான். தம்மோடு நெருங்கி உறைந்த கொடிய விலங்குகளை வேட்டையாடி அவற்றைக் கொன்று அவற்றினும் ஆற்றல் மிகுந்தோராக விளங்கத் தொடங்கியதும் இங்கேதான்.

(தொடரும்)

சங்கத்தமிழறிஞர் முனைவர் சி.இலக்குவனார்