இலக்குவனார் திருக்குறள் உரைத்திறம் 1/2- முனைவர் க.தமிழமல்லன்
வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், ம.தி.தா.இந்துக்கல்லூரி, திருநெல்வேலி
இணைந்து நடத்தும்
“பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள்”
பன்னாட்டுக் கருத்தரங்கம்
இலக்குவனார் திருக்குறள் உரைத்திறம் 1/2
-முனைவர் க.தமிழமல்லன்
தலைவர், தனித்தமிழ் இயக்கம் 97916299799791629979
இலக்குவனார் தன்மானமும் தமிழ் மானமும் போற்றிய பேராசிரியர். தமிழ், ஆங்கிலம் என்னும் இருமொழிகளிலும் சிறந்த ஆற்றல்பெற்றவர். தாம் பெற்ற அரசுப் பொறுப்பைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாத துணிச்சல் மிக்கவர். தமிழ்மொழிக்கும் நாட்டுக்கும் இழைக்கப்படும் தீங்குகளை இயன்றவரை எதிர்த்த வேங்கை. தவறு செய்வோர் மிகப் பெரிய பொறுப்பில் இருந்தாலும் அஞ்சாமல் எதிர்க்கும் இயல்பு கொண்டு இயங்கியவர்.
தமிழ்வழிக் கல்வியை வலியுறுத்தி அவர் ஆற்றிய பணிகள் வரலாற்றால் மதிக்கத்தக்கவை. அதை வலியுறுத்தி மதுரையிலிருந்து சென்னை வரை நடைப்போராட்டம் நடத்தவும் முயன்ற மறவர். தொல்காப்பியம் அவர் ஆங்கிலப்புலமையால் வேற்றுப்புலத்திலும் பரவியது. அவர் எழுதிய ‘பழந்தமிழ்’ தமிழின் வளத்தை எடுத்துக்காட்டும் உரிமையை முழங்கும்.
திருக்குறள் உரைத்திறம்
பேரா.இலக்குவனார் ‘குறள்நெறி’ எனும் ஏட்டை வெளியிட்டவர். திருக்குறள் புலமையில் அவர் தேர்ந்தவர். பற்றில் சிறந்தவர். பரப்பும் தொண்டில் இயங்கியவர். ஒரு பேராசிரியர்க்குக் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்று எப்போதும் கருதுவன சில உள. 1.சம்பளம் 2. பொறுப்புயர்வு 3. கருத்தரங்கில் படிகளைக் கணக்கிடுதல் 4. வளவாழ்வு.
இவற்றுக்கப்பால் பெரும்பான்மையான பேராசிரியர்கள் என்னும் பெயரில் பல்கலைகள், கல்லாரிகளில் இருப்பவர்கள் எண்ணுவதில்லை.
தொடர்ந்து கற்றுஆய்தல், மொழிஇனமேம்பாட்டை எண்ணுதல், அவற்றுக்குச் சார்பாக இயங்குதல் என்பனவற்றை அத்தகையார் திரும்பியும் பார்ப்பதில்லை.
இவற்றுக்கப்பால் தன்னலம் மறுத்துப் பேராசிரியராகவும் போராசிரியராகவும் வாழ்ந்த செம்மல் அவர்.
திருக்குறளுக்கு அவர் எழுதிய உரைவிளக்கங்கள் என்றும் பயன்மிக்கவை. பலவகை நுட்பங்கள் சான்றவை. பற்றை வெளிப்படுத்தக்கூடியவை.
சிறந்த விளக்கம்
திருக்குறளுக்கு ஒரு தன்மை உண்டு. அதைக்கற்றவர்கள் அறிஞர்களாவர். அறிஞர்கள் கற்கும் போது மக்களுக்குச் சிறந்த விளக்கம் கிடைத்துவிடும்.
அரண் பற்றி இலக்குவனார் உரைக்கும் போது அத்தகு விளக்கத்தைப் பார்க்கிறோம்.
“உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்’’ (743)
இதற்கு விளக்கம் சொல்லும் போது முதலில் பரிமேலழகர் உரையை மறுத்து விடுகிறார். அவர் இந்த நான்கு தன்மைகளும் கொண்ட மதில் என்று சொல்கிறார். திருக்குறள் மதில் என்று சொல்லவில்லை. குறட்பாவில் வரும் அமைவு என்னும் சொல்லை ஆகுபெயராகக் கொண்டு பரிமேலழகர் அவ்வாறு சொல்லியிருக்கிறார். அது பொருந்தாது என்பது இலக்குவனார் கருத்து. தமிழர்கள் தங்கள் எல்லைகளில் மதில் அமைக்காமல் விட்டுவிட்டனர். சீனம், பிரான்சு முதலிய நாடுகள் மதில்அரண் அமைத்துள்ளன எனுங் குறிப்பினைச் சொல்லி
விளக்குவது பயன்தருவதாகும். உண்மையில் மதில் அமைத்திருந்தால் தமிழ்நாடு குறுகிப்போயிருக்காது.
கல்வி அதிகாரத்தில் இலக்குவனார் சொல்லும் விளக்கம் அரிதானது. திருவள்ளுவர் கல்வியைக் கண்ணுக்கு உவமித்தது ஏன் என்று சொல்லும் விளக்கம் படித்து இன்புறத்தக்கது.
‘’மற்ற நாட்டறிஞர்கள் கல்வியை உணவுக்கும் காற்றுக்கும் ஒளிக்கும் ஒப்பிட்டனர். திருவள்ளுவர் கண் என்று சொன்னார். காற்றும் உணவும் வெயிலும் பெறுவதில் மக்களிடையே வேறுபாடு இருத்தல் முடியும். செல்வர்க்கு ஒருவகையும் அல்லாதவர்கட்கு பிறிதொருவகையும் பெறலாம். ஆண்கள் ஒரு வகையாகவும் பெண்கள் ஒருவகையாகவும் பெறலாம். ஆனால் கண்களைப் பெறுவதில் வேறுபாடு இருத்தல் முடியாது அன்றோ? செல்வர்க்கு ஒரு வகையான கண்ணும் ஏழைக்கட்கு இன்னொரு வகையான கண்ணும் இல்லையே. அனைவரும் கல்வியைப் பெற்றுத்தான் ஆகவேண்டும் என்னும் பொருளிலும் அவர் அவ்வாறு கூறினார்.’’ (கல்வி முன்னுரை, அரசியல்.ப.69)
உரை வரையும் போது தம் கொள்கை…. ஆங்காங்கே சொல்லிச் செல்வது வேறுவகையான பயனையும் நல்கவல்லதாய் அமைந்திருக்கிறது.
எண்எழுத்து பற்றிச் சொல்லும் போது அவற்றைத் தமிழ் மக்கள் காத்துக்கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் வள்ளுவர் அங்ஙனம் கூறினார். இன்று சிலர் தேவநாகரி எழுத்தைத் தமிழுக்கு மாற்றாகப் பயன்படுத்தச் சொல்வது தீயது. எண்ணும் எழுத்தும் உலகத்தின் பிற பகுதிகளுக்கு இங்கிருந்துதான் சென்றன ஆனால் தமிழர்களே தமிழ் எழுத்தையும் எண்களையும் மறந்து வருவது துன்பமானது என்பதையும் உரைக்கிடையே வலியுறுத்தி எழுதுவது சிறப்பாக அமைந்துள்ளது. பிற்கால மக்களுக்கு இத்தகைய உரை இருந்தால்தான் தாய்மொழியை மறவாமல் இருக்க உதவும்.
‘’நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை அற்று.’’ 407
இதற்கான விளக்கம் சொல்லும் போது இக்குறட்பா பெண்களுக்குக் கட்டாயம் தேவை. அவர்கள் அழகு மட்டும் போதுமென்று நினைக்கிறார்கள். அது மட்டும் போதாது. அவர்களும் கல்விகற்று இக்குறட்பாவுக்கேற்ப உயரவேண்டும் என்பதை இதன் வாயிலாக வலியுறுத்தி விட்டார்.(ப.70)
சில குறட்பாக்களை விளக்கும் போது ஆங்கிலச் சொற்களின் துணையையும் பழமொழிகளையும் பயன்படுத்தியிருக்கிறார்.
‘’பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு’’ (532)
Poverty is the birth of Art என்னும் ஆங்கிலப் பழமொழி, வறுமைதான் கலைப்பிறப்பிடம் என்று கூறுவது இக்குறட்பாவுக்கு முரணாக இருக்கிறதே என்னும் வினாவை அவரே வருவித்துக் கொண்டு அழகான விடை சொல்கிறார். சிலர் வளம் வந்தவேளையில் அதைக்கொண்டு இன்பவாழ்வில் களியாட்டங்களில் ஈடுபட்டுச் செல்வத்தை அழிப்பர். அவர்களை நோக்கிச் சொன்னது அந்தப் பழமொழி என்பது அவர்தம் விடை..
நாடு என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர் ஒரு சிறந்த நாட்டில் தக்கார் வாழவேண்டும் என்று வலியுறுத்தினார்.
‘’தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு’’ (731)
‘’தக்கார் யார்?’’ என்பதற்கு இலக்குவனார் அளிக்கும் விளக்கம் புதுமை. அதற்கு ஆங்கில விளக்கம் சொல்வது இளைஞர்களுக்கும் பயனுடையதாக அமையும்.தக்கார் 1.கற்றறிஞர் 2.புதியன கண்டுபிடிப்போர் 3. புதியன ஆக்குவோர். இம்மூன்றுக்கும் அவர் பயன்படுத்தும் சொற்கள் மேலும் நுண்மையை அளிக்கின்றன.1. Scholar 2.Discoverer 3.Inventer
மாவலி
‘’மடியிலா மன்னவன் எய்தும் அடிஅளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு’’ (610)
என்னும் குறட்பாவில் மாவலியின் கதையை வள்ளுவர் மேற்கோளாகக் காட்டுகிறார். சிலர் அதை ஒரு குற்றமாகக் கூறுவர். திருவள்ளுவர் அக்கதையை நம்பினார் என்றும் சொல்வதுண்டு. அதை இலக்கு வனார் மறுத்துள்ளார்.
“யாவரும் அறிந்த கதையை உண்மை விளக்குவதற்காக எடுத்துக்காட்டாகக் கூறினால் அந்தக்கதையை உண்மை என்று ஏற்றுக் கொண்டதாக கூறல் ஒவ்வாது” என்பது அவரின் விளக்கம். (ப.115)
பரிமேலழகர்
பரிமேலழகர் தம் உரையைப் பல இலக்கணக் குறிப்புகளைச் சொல்லி விளக்குவதுண்டு. அவர் சொல்லும் சில இடங்களை ஆய்வு செய்து இலக்குவனார் விளக்கம் சொல்லுவது அவரின் திறத்தை நன்கு வெளிப்படுத்துகிறது. பல பேராசிரியர்களுக்குப் பெரும்பாலும் இத்திறம் வாய்க்கப் பெறாது. அவர்களுள் பலர் பரிமேலழகர் உரையை மட்டும் பெரிதாகப் போற்றும் தகையர் ஆவர்.
அரண் அதிகாரத்தில் வரும்
‘’முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறுஎய்தி மாண்டது அரண்’’ (749)
என்னும் குறட்பாவில் வினை முகம், முனைமுகம் என்னும் தொடர்களுக்கு இலக்குவனார் நல்ல விளக்கம் சொல்கிறார். முகம் என்னும் சொல் 7ஆம்வேற்றுமைப் பொருளில் வந்துள்ளது என்பதை இனம்பிரித்து உரைக்கும் திறம் வெளிப்பட்டுள்ளது.
‘’இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு’’ (737)
இக்குறட்பாவில் இருபுனல் என்பதற்குக் கீழ்நீர், மேல்நீர் என்று பரிமேலழகர் விளக்கம் கூறியுள்ளார். “இருபுனல் என்பதை இரும்புனல் என்று கொள்ளலாம். அதன்வாயிலாக் கடல்நீரைக் குறித்ததாகக் கொள்ளலாம் என்பது இலக்குவனார் விளக்கம். (ப.23)
Leave a Reply