சமுதாயக் கேடுகளைச் சுட்டி எச்சரிக்கை விடுத்தவர் – கதிர் மகாதேவன்
சமுதாயக் கேடுகளைச் சுட்டி எச்சரிக்கை விடுத்தவர்
முப்பால் (திருக்குறள்) தோன்றுவதற்கு முன்னால் இருந்த கவிஞர்கள் உள்ளதை உணர்ந்தவாறு கவிதை புனைந்த வித்தகர்கள். ஆனால் இன்பத்தில் எளியரான சிலர் மருதத் திணையைப் பாடினர். சிலர் அதனை இழிவெனக் கூறி மன்னனைக் கடிந்தாரலர். கள் உண்டனர்; அதனைப் பாடவும் செய்தனர். அது தவறு என்று எண்ணினாரலர். புலால் உண்டனர்; அது இயல்பெனப் பாடு பொருளாயிற்று. இந்தச் சூழலில் தமிழர் சிக்கிச் சீரழிந்த நிலையில் தோன்றியவர்தாம் பெருநாவலர் வள்ளுவர். தாம் வாழ்ந்த சமுதாயத்தையும் தமக்கு முன்னால் நிலவிய சமுதாயத்தையும் பிற உலக நாடுகளில் வாழ்கின்ற வாழ்ந்த சமுதாயத்தையும் ஒப்பு நோக்கி சீர்தூக்கி ஆராய்ந்து தேர்ந்து தெளிந்தார். அவர்தம் வாய்மொழியில் வரைவின் மகளிர், கள்ளுண்ணாமை, புலால் மறுத்தல் எனும் அதிகாரங்களை அமைத்தார். அவற்றால் ஏற்படும் கேடுகளைச் சுட்டி எச்சரிக்கை விடுத்தார். அன்று வாழ்ந்த சமுதாயம் உடனே மாறியது என்று கூறுவதற்கில்லை. ஆயின, குறளின் அறைகூவலுக்குப் பயன் இல்லை என்றுகூற முடியாது. அன்று முதல் இன்று வரை குறள் கூறும் கருத்துகளை மறுப்போர் இல்லை. கருத்துகளை ஏற்று அதன்படி நடக்க மனமில்லாதவரே மிகுதி.
முனைவர் கதிர் மகாதேவன்: செந்தமிழ் தொகுதி 94:
பகுதி 4: திசம்பர் 1990
Leave a Reply