திருக்குறளும் தொடர்பாடலும் – சிவா(பிள்ளை)
திருக்குறளும் தொடர்பாடலும்
தமிழர்கள் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இந்தப் பூமியில் வாழ்ந்தாகப் பல செய்திகள் சொல்லப்படுகின்றன. அவ்வாறான ஒரு மொழி பேசிய இனம் சமூக மாற்றங்களைச் எதிர்கொள்ள என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று பார்ப்பது தமிழ் மொழியை மட்டுமே நம்பி அதற்காகத் தங்கள் உயிர் உடைமை உறவுகளைத் கூடத்தொலைக்கும் மக்களுக்கு முதன்மையானது. அந்தத் தேடலின் ஒரு பகுதி திருக்குறளில் தொடர்பாடல் பற்றி என்ன சொல்கின்றது என அறிந்துகொள்வதாகும்.
மனித இன முயற்சியின் இன்றைய மிகப்பெரும் வளர்ச்சி எது என்று கேட்டால் அது தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் ஆகும். அடுத்த வேளை பசிக்கு ஏங்கும் வீடுகளில் கூடத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் முதன்மையான ஒன்றாகிவிட்டது. தொடர்புசாதனங்களின் வளர்ச்சிக்கு அல்லது மேம்பாட்டிற்குத் தேவையான செயற்பாடு என்பது எல்லாருடைய வீட்டிலும் செய்யவேண்டிய ஒன்றல்ல. உலகின் எங்கோ ஒரு மூலையில் ஆய்வின் முடிவில் உருவாகி, விற்பனைப்பொருளாகி அனைவரது காலடியிலும் வந்து சேர்ந்துவிடும். தொடர்பாடல் கருவி உற்பதியாகும் இடத்தின் சூழ்நிலை என்பது அது பயன்படுத்தப்படும் இடத்தின் சூழ்நிலையோடு ஒப்பிடும்போது முற்றிலும் மாறுபட்டது. இங்கே சூழ்நிலை என்னும் போது மனிதர்கள், அவர்களுடைய அறிவு நிலை, பழக்க வழக்கங்கள், பண்பாடு, ஒழுகலாறு எல்லாவற்றையும் சுட்டிநிற்கின்றது. அடிப்படையில் வெவ்வேறு நிலையில் இருக்கும் சமூகங்களுக்கு இடையில் இந்தத் தொழில்நுட்பம் புகுந்து தன்னுடைய பங்கிற்கு ஏதாவது செய்துவிடும். தொழில்நுட்ப மாற்றங்களை எதிர்கொள்வதற்கு எந்த ஆயத்தமும் இல்லாத சமூகங்கள் அழிந்து ஒழிந்து போய்விடும். ஒருவகையில் இந்தச் சாதனங்கள் ஏறத்தாழ ஆழிப்பேரலைகள் (சுனாமி) போன்றவைதான். அந்தவகையில் தொடர்பாடல் கருவிகளின் வளர்ச்சியில் வந்த ஊடகச் சாதனங்களைத் தமிழ் மொழி பேசும் மக்கள் எந்த அளவில் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று பார்த்தால் சிலரே அதனை ஆக்கபூர்வமான வழியில் பயன்படுத்துகின்றனர். இலங்கை போன்ற நாடுகளில் பெரும்பாலோர் தொடர்பாடல் செய்யும் போது ஆகக்குறைந்தது இயல்பான மனிதர்கள் செய்ய வேண்டியவற்றை கூடச் செய்வதில்லை.
தொடர்பாடலுக்குத் தேவையான அடிப்படை உறுப்புகள் மூன்று. அவையாவன 1. அனுப்புநர் 2. ஊடகம் 3. பெறுநர். தொடர்பாடல் தத்துவங்களில் முதன்மையானது தகவலை வெளிப்படுத்துவது இது அனுப்புநர் ஓர் ஊடகத்தைப்பயன்படுத்திச் சொல்லப்படும் செய்தி இன்னொருவரைச் சென்றடையும்; அவர் தகவலைப் பெறுநர். ஊடகம் என்பது சுட்டுக்குறி(சைகை), மொழி, அசையும் அசையாப்படங்கள் ஆகும். ஊடகங்களைக் காவுகின்றவை ஊடகக்காவிகளான வானொலி, தொலைக்காட்சி, இணையம் ஆகியவையே. அனுப்புநர், பெறுநர் இவை இரண்டும் மனிதர்களே. ஒரு நேர்வில், அனுப்புநராக இருக்கும் ஒருவர் இன்னொரு நேர்வில் பெறுநராக இருக்க முடியும். இந்தநிலையில் தொழில்நுட்ப வளர்ச்சிகள் அல்லது அறிவியல் வளர்ச்சிகள் எல்லாம் ஊடகக்காவி சார்ந்தே உலகில் எந்த மூலையிலும் இடம்பெறும். தொடர்பாடலில் ஈடுபடும் ஆள் சார்ந்தே ஏனைய வளர்ச்சிகள் இடம்பெற வேண்டும். அதாவது தொடர்பாடலில் ஈடுபடும் மனிதன் தன்னை வளர்ததுக்கொண்டால் மாத்திரமே வெற்றிகரமான தொடர்பாடலை மேற்கொள்ள முடியும்.
இந்தச் செய்தியை இன்று நேற்றல்ல இற்றைக்கு இரண்டாயிரத்து நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் தம்முடைய குறளில் தெரிவித்துள்ளார். தொடர்பாடலில் ஈடுபடும் ஒருவர் எதனை எங்கே எப்படிப் பேச வேண்டும், எதனை எப்படிக்கேட்க வேண்டும், பேசுகின்ற மொழி எப்படி இருக்க வேண்டும், மற்றும் சுட்டுகுறிபற்றிப் பின்வரும் அதிகாரங்களில் திருவள்ளுவர் சொல்லி இருப்பதைக் காணலாம்.
அறத்துப்பால் -இல்லறவியல் – இனியவைகூறல்: 91 -100
அறத்துப்பால் – துறவறவியல் – வாய்மை: 291 – 300
பொருட்பால் – அரசியல் – கேள்வி: 411 – 420
பொருட்பால் – அரசியல் – அறிவுடைமை: 421 – 430
பொருட்பால் – அமைச்சியல் – சொல்வன்மை 641 – 650
பொருட்பால் – அமைச்சியல் – அவையறிதல்: 711 – 720
பொருட்பால் – அமைச்சியல் – அவையஞ்சாமை: 721 – 730
காமத்துப்பால் – கற்பியல் – குறிப்பறிவுறுத்தல்: 1271 -1280
இந்தியத் தேடல்கள் எல்லாம் எமக்கு உள் செல்வது, மேற்கு அல்லது ஐரோப்பியத் தேடல்கள் என்பன வெளிநோக்கியன. எடுத்துக்காட்டாக ஐரோப்பியர்கள் வேற்றுக்கோள்வாசிகளைத் தேடி விண்கலங்களில் அலைவர். ஆனால் எம்மவர்கள் எங்களுடைய இந்த நிலையில் இருந்துகொண்டு இந்த உலகத்தை விட்டு வெளியில் செல்லமுடியாது. வெளியில் செல்வதற்குப் பல பிறப்புக்களினூடாகப் பல செயற்பாடுகள் செய்யவேண்டும் என்று சொல்லுவர். அந்தவகையில் திருவள்ளுவரும் மாற்றங்களை எதிர்கொள்ள யார் தயாரக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து ஒரு வெற்றிகரமான தொடர்பாடலுக்குத் தேவையான அடிப்படை உறுப்புகள் மூன்றையும் மேம்படுத்தும் வகையில் என்ன செய்யவேண்டும் என்பதை அறிவுறுத்த குறள்களை எழுதியுள்ளார். அவற்றை உரிய வகையில் புரிந்து இந்தக்காலத்திலும் பயன்படுத்தவேண்டும்.
சிவா(பிள்ளை)
கல்வியியல் ஆய்வுகள்
கோல்டுசுமித்து கல்லூரி, இலண்டன்பல்கலைக்கழகம்(பணிநிறைவு)
இயக்குநர்,
மொழி, கலைகளுக்கான தமிழ்க்கழகம்(Tamil Academy of Language & Arts )
மேன்மைக்கல்வித்(எடெக்சல்)தேர்வு வாரிய முதன்மைத்தேர்வாளர்(தமிழ்)
(Principal Examiner for Edexcel Tamil Language)
சிவா பிள்ளை (லண்டன் ) அவர்கள் திருக்குறளை கையில் எடுத்திருப்பது வாழ்த்துதற்குரியதே. திருக்குறளுக்கு ஏகப்பட்ட உரைகள் வந்து விட்டன. திருக்குறள் சார்ந்து ஏகப்பட்ட நூல்கள் வந்து விட்டன. திருக்குறள் தொடர்பான ஏகப்பட்ட ஆய்வுகள் வந்து வட்டன. அனைத்தும் அவரவர்களது வாழ்முறைக்கும், அறிவுக்கும், ஈடுபாட்டிற்கும் ஏற்றவாறே அமைந்து அடுத்த தலைமுறைக்குக்கூட எடுத்துச் செல்லப்படாமல் அழிந்து விடுகின்றன. ( ஒவ்வொரு நூலும் அவர் வாழும் வரை வாழும். அவருக்குப்பிறகு மடிந்துவிடும்) ( இளங்குமரரார் அனைத்து நூல்களையும் திரட்டினார். ஆனால் அவற்றை பல்கலைக்கழகத்துக்குக் கொடுத்துவிட்டு பற்றற்று இருக்கிறார்) ஆக திருக்குறள் தொடர்பான எந்த நூல்களும் பாதுகாக்கப்படாது ஒரு நூற்றாண்டுக்குள்ளேயே அழிந்து விடப்போகிறது. (திருக்குறள் மட்டுமல்ல அனைத்து வகையான நூல்களுக்கும் இதே கதிதான்)( தமிழ் தமிழ் என்று பேசுபவர்கள் இதைப் பற்றிச் சிந்திப்பதே கிடையாது. அவர்கள் நூல்கள் விற்றால் சரி என்பதே கொள்கையாகிறது) தமிழின் நிலை இப்படி இருக்கிறது. திருக்குறளுக்கு உரை வேண்டாம். திருக்குறளை படித்து உணர வேண்டும். சொற்களுக்கான விளக்கம் மட்டும் கொடுத்தால் போதும். படிக்கிற ஒவ்வொருவரும் உரை எழுதுவர். ஆனால் இதை இந்த அறிவாளிகளும், கல்வியாளர்களும் செய்ய மறுக்கிறார்கள். தான் தான் என்று தன்னையே முதன்மைப் படுத்துகிறார்கள். திருவள்ளுவர் ஓரமாக நின்று வேடிக்கைதான் பார்க்கிறார். மெய்ப்பொருள் காண்பது அறிவு என்றார். எங்கே உண்மையானவற்றை காண வழி அமைக்கப்படுகிறது. தமிழுக்கு உரிய மிகப் பெரிய இழப்பு இது. இக்கருத்தில்
உடன்பாடு உடையவர்கள் என்னோடு இணையவும். யாருடைய உதவியும் இல்லாமல் யார் வேண்டுமானாலும் (படிக்கத் தெரிந்தவர் அனைவரும்) படித்து உள்வாங்கக்கூடிய வகையில் முறைபடுத்தி வருகிறேன். இதனை நீங்கள் பரவல் செய்தால் போதும் உங்கள் கண் முன்னே, திருக்குறளுக்கான உரையைப் படிப்பவர் சொல்லுவார்கள், இதைக் கண்டு நீங்கள் மகிழலாம். இந்த உணர்வு உள்ளவர்கள் யார். அவர்கள் மின் அஞ்சல் அனுப்பி இணையவும்.
அன்புடன்
பொள்ளாச்சி நசன் – 9788552061 – pollachinasan@gmail.com – http://www.thamizham.net/thamizhamfm.htm