(திருக்குறள் அறுசொல் உரை – 105. நல்குரவு தொடர்ச்சி)

attai_kuralarusolurai
திருக்குறள் அறுசொல் உரை

02. பொருள் பால்
13. குடி இயல்

      
அதிகாரம் 106. இரவு

உழைப்புத் திறன்இல்லார், பொதுநல

உதவியாளர் கேட்டுப் பெறலாம்.

  1. இரக்க இரத்தக்கார்க் காணின்; கரப்பின்,

      அவர்பழி தம்பழி அன்று.

தகுதியாரிடம் உதவி கேட்க;

மறைத்தால், மறைத்தார்க்கே, பழி.

 

  1. இன்பம் ஒருவற்(கு) இரத்தல், இரந்தவை

      துன்பம் உறாஅ வரின்.

துன்பம் இல்லாமல் வருமானால்,

கேட்டுப் பெறுதலும் இன்பம்தான்.

 

  1. கரப்(பு)இலா நெஞ்சின் கடன்அறிவார் முன்நின்(று),

      இரப்பும்ஓர் ஏஎர் உடைத்து.

ஒளிக்காமல் கொடுக்கும் கடமையார்முன்

நின்று கேட்டலும் அழகே.

 

  1. இரத்தலும் ஈதலே போலும், கரத்தல்,

      கனவிலும் தேற்றாதார் மாட்டு.

மறைப்பதைக் கனவிலும் காணாரிடம்,

பெறுதலும், கொடுத்தல் போன்றதே.

 

  1. கரப்(பு)இலார் வையகத்(து) உண்மையால், கண்நின்(று)

      இரப்பவர் மேற்கொள் வது.

ஒளிக்காமல் கொடுப்பாரால்தான், பெறுவார்

கேட்டுப் பெற்று வாழ்கிறார்.

 

  1. கரப்(பு)இடும்பை இல்லாரைக் காணின், நிரப்(பு)இடும்பை,

      எல்லாம் ஒருங்கு கெடும்.

மறைக்கும் துயர்இல்லாரைக் கண்டால்,

வறுமைத் துயர்எல்லாம் மறையும்.

 

  1. இகழ்ந்(து),எள்ளா(து), ஈவாரைக் காணின், மகிழ்ந்(து),உள்ளம்,

      உள்உள் உவப்ப(து) உடைத்து.

இகழாமல் கொடுப்பாரைக் கண்டால்,

உள்மனம் பெரிதும் மகிழும்.

 

  1. இரப்பாரை இல்ஆயின், ஈர்ங்கண்மா ஞாலம்,

      மரப்பாவை சென்றுவந்(து) அற்று.

கொடுப்பார் இல்லாவிட்டால், பெறுவார்,

மரப்பொம்மை போல நடமாடுவார்.

 

  1. ஈவார்கண் என்உண்டாம் தோற்றம்….? இரந்துகோள்

      மேவார் இலாஅக் கடை.

கொள்வார் இல்லாவிட்டால், எங்ஙனம்

கொடுப்பார் தோன்றுவார்…..? தோன்றார்.

  1. இரப்பான், வெகுளாமை வேண்டும்; நிரப்(பு)இடும்பை,

      தானேயும் சாலும் கரி.

பெறுவார் சினவற்க; தரும்சூழல்

தருவார்க்கும் இல்லாமல் இருக்கலாம்.

பேரா.வெ.அரங்கராசன்