(அதிகாரம் 015. பிறன் இல் விழையாமை தொடர்ச்சி)

arangarasan_thirukkural_arusolurai_attai

01.அறத்துப் பால்

02.இல்லற இயல்

அதிகாரம் 016. பொறை உடைமை

 

பிறரது பிழைகளை — குற்றங்களைப்

பொறுக்கும் பண்பைப் பெற்றிருத்தல்.

 

  1. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத், தம்மை

     இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

 

       தோண்டுவாரையும் தாங்கிக் காக்கும்

       நிலம்போல் இகழ்வாரையும் பொறுக்க.    

 

  1. பொறுத்தல், இறப்பினை என்றும்; அதனை

     மறத்தல், அதனினும் நன்று.

 

        வரம்பு கடந்த குற்றங்களையும்

       பொறுத்தலினும், மறத்தலே நன்று.

 

  1. இன்மையுள் இன்மை, விருந்(து)ஒரால்; வன்மையுள்

     வன்மை, மடவார்ப் பொறை.

 

       வறுமை, விருந்தினரை விலக்கல்;

       வலிமை, அறியாரைப் பொறுத்தல்.    

 

  1. நிறைஉடைமை நீங்காமை வேண்டின், பொறைஉடைமை

   போற்றி ஒழுகப் படும்.

 

       நிறைவான மனத்தை விரும்பினால்,

       பொறுமைக் கடைப்பிடி வேண்டும்.

 

  1. ஒறுத்தாரை, ஒன்றாக வையாரே; வைப்பர்,

   பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து.

 

       தண்டிப்பார் மதிக்கப்படார்; பொறுப்பார்

       பொன்னைப் போல மதிக்கப்படுவார்.

 

 

 

  1. ஒறுத்தார்க்(கு), ஒருநாளை இன்பம்; பொறுத்தார்க்குப்,

   பொன்றும் துணையும் புகழ்.  

 

       தண்டிப்பார்க்கு ஒருநாள் இன்பம்;

       பொறுப்பார்க்குச் சாம்அளவும் இன்பம்.

 

  1. திறன்அல்ல, தன்பிறர் செய்யினும், நோநொந்(து),

     அறன்அல்ல, செய்யாமை நன்று.

 

       முறைஅல்ல செய்தார்க்கும், வருந்தி

      அறம்அல்ல செய்யாமை நல்லது.        

 

  1. மிகுதியான் மிக்கவை செய்தாரைத், தாம்தம்,

    தகுதியான் வென்று விடல்.

 

       மிகுபிழைகள் செய்தாரையும், பொறுமைத்

       தகுதியால் வெல்ல வேண்டும்.

 

  1. துறந்தாரின் தூய்மை உடையர், இறந்தார்வாய்

   இன்னாச்சொல், நோற்கிற் பவர்.

 

       தீய சொற்களைப் பொறுப்பவர்,

       தூய துறவியரைவிடத் தூயவர்.

 

  1. உண்ணாது நோற்பார் பெரியர், பிறர்சொல்லும்

     இன்னாச்சொல் நோற்பாரின் பின்.

 

      கடுந்தவப் பெரியாரும், கடும்சொல்

       பொறுப்பார் பின்னர் நிற்பவரே.

– பேராசிரியர் வெ. அரங்கராசன்

(அதிகாரம்  017. அழுக்காறாமை)