(அதிகாரம் 018. வெஃகாமை தொடர்ச்சி)arusolurai_munattai01

01.அறத்துப் பால்
02.இல்லற இயல்
அதிகாரம் 019. புறம் கூறாமை

ஒருவர் இல்லாத பொழுது
அவரைப் பற்றிக் கோள்கூறாமை.

 181. அறம்கூறான், அல்ல செயினும், ஒருவன்,
  புறம்கூறான் என்றல் இனிது.

அறத்தைக் கூறாது, தீமைகளைச்
செய்யினும், கோள்கூறாமை இனிது.

 182. அறன்அழீஇ, அல்லவை செய்தலின் தீதே,
 புறன்அழீஇப், பொய்த்து நகை.

பின்னே பழிப்பும், முன்னே
பொய்ச்சிரிப்பும், அறஅழிப்பினும் தீது.

 183. புறம்கூறிப், பொய்த்(து)உயிர் வாழ்தலின், சாதல்,
அறம்கூறும் ஆக்கம் தரும்.

பழிசொல்லும் பொய்வாழ்வைவிட, இறத்தல்,
அறம்சார்ந்த நலன்கள் தரும்.

 184. கண்இன்று, கண்அறச் சொல்லினும், சொல்லற்க,
முன்இன்று, பின்நோக்காச் சொல்.

முன்நின்று, இரக்கம் இல்லாது
சொல்லினும், பின்நின்று பழிக்காதே.

 185. அறம்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை, புறம்சொல்லும்
புன்மையால், காணப் படும்.   

கோள்சொல்லும் இழிசெயல் செய்பவன்,
அறம்சார்ந்த நெஞ்சத்தான் அல்லன்.

 186. பிறன்பழி கூறுவான் தன்பழி உள்ளும்,
 திறன்தெரிந்து கூறப் படும்.

பிறரைப் பழிப்பாரது பழிகளுள்,
தேர்ந்து எடுத்துப் பழிக்கப்படும்.

 187. பகச்சொல்லிக், கேளிர்ப் பிரிப்பர், நகச்சொல்லி,
நட்(பு)ஆடல் தேற்றா தவர்.

சிரித்துப் பேசி, நட்புக்கொள்ளாரே,
கோள்சொல்லி நட்பைப் பிரிப்பார்.

 188. துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்,
 என்னைகொல் ஏதிலார் மாட்டு….?

நெருங்கியார் குற்றத்தையே தூற்றுவார்,
பிறர்பற்றி என்னதான் சொல்லார்….?

 189. அறம்நோக்கி ஆற்றும்கொல் வையம்….? புறன்நோக்கிப்,
 புன்சொல் உரைப்பான் பொறை.

கோள்சொல்வான் உடலின் சுமையை,
அறம்கருதி உலகம் சுமக்கிறதோ….? 

 190. ஏதிலார் குற்றம்போல், தம்குற்றம் காண்கிற்பின்,
தீ(து)உண்டோ மன்னும் உயிர்க்கு….?

பிறர்தம் குற்றம்போல் தம்குற்றத்தையும்
பார்த்தால், உயிர்கட்குத் தீ[து]உண்டோ….?    

 – பேராசிரியர் வெ. அரங்கராசன்

arangarasan02

(அதிகாரம் 020. பயன் இல சொல்லாமை)