திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 020. பயன் இல சொல்லாமை
(அதிகாரம் 019. புறம் கூறாமை தொடர்ச்சி)
01. அறத்துப் பால்
02. இல்லற இயல்
அதிகாரம் 020. பயன் இல சொல்லாமை
எதற்குமே பயன்படாத வீண்சொற்களை
என்றுமே சொல்லாத நல்பண்பு.
191. பல்லார் முனியப், பயன்இல சொல்லுவான்,
எல்லாரும் எள்ளப் படும்.
வெறுப்பினை ஊட்டும் வீண்சொற்களைச்
சொல்வாரை, எல்லாரும் இகழ்வார்.
192. பயன்இல, பல்லார்முன் சொல்லல், நயன்இல,
நட்டார்கண் செய்தலின் தீது.
நண்பரிடம் விரும்பாதன செய்வதைவிட,
வீண்சொல் கூறல் தீது.
193. நயன்இலன் என்பது சொல்லும், பயன்இல,
பாரித்(து) உரைக்கும் உரை.
“நல்லவன் இல்லை” என்பதை,
அவனது வீண்சொற்களே சொல்லும்.
194. நயன்சாரா நன்மையின் நீக்கும்; பயன்சாராப்
பண்(பு)இல்சொல் பல்லார் அகத்து.
பண்[பு]இல்லாத வீண்சொற்கள் சொல்லல்
விரும்பும் நன்மைகளை விலக்கும்.
195. சீர்மை சிறப்பொடு நீங்கும், பயன்இல,
நீர்மை உடையார் சொலின்.
பெரியார், வீண்சொற்கள் பேசினும்,
பெருமையும், சிறப்பும் இழப்பார்.
196. பயன்இல்சொல் பாராட்டு வானை, மகன்எனல்;
மக்கள் பதடி எனல்.
வீண்சொற்களைப் பாராட்டிப் பேசுவான்,
மகன்ஆகான்; பதரே ஆவான்.
197. நயன்இல சொல்லினும், சொல்லுக; சான்றோர்,
பயன்இல சொல்லாமை நன்று.
நன்மை தராதவற்றைச் சொன்னாலும்,
வீண்சொற்களைச் சொல்ல வேண்டா.
198. அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்,
பெரும்பயன் இல்லாத சொல்.
அரும்பொருள் ஆராயும் அறிஞர்,
பெரும்பயன் இல்லாதன சொல்லார்.
199. பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார், மருள்தீர்ந்த
மா(சு)அறு காட்சி யவர்.
தெளிந்த அறிஞர், பொருள்இல்லாச்
சொற்களை, மறந்தும் சொல்லார்.
200. சொல்லுக, சொல்லில் பயன்உடைய; சொல்லற்க,
சொல்லில் பயன்இலாச் சொல்.
பயன்உள சொற்களைச், சொல்லுக;
பயன்இலாச் சொற்களைச், சொல்லற்க.
Leave a Reply