(அதிகாரம் 039. இறை மாட்சி தொடர்ச்சி)

arusolcurai_attai+arangarasan

02.பொருள்பால்

05.அரசு இயல்

அதிகாரம் 040.   கல்வி

 

கல்வி கற்கும் முறைகள்,

கல்வி அறிவின் பயன்கள்.

 

  1. கற்க, கச[டு]அறக் கற்பவை; கற்றபின்,

      நிற்க, அதற்குத் தக.

 

          படிப்பதைத் தெளிவாகப் படிக்க;

        படித்தபின் படித்தபடி நடக்க.

 

  1. எண்என்ப, ஏனை எழுத்(து)என்ப, இவ்இரண்டும்,

     கண்என்ப, வாழும் உயிர்க்கு.

 

     அறிவியலும், இலக்கியமும், வாழும்

        உயிருக்கு, இரண்டு கண்கள்.

 

  1. கண்உடையர் என்பவர், கற்றோர்; முகத்(து)இரண்டு

     புண்உடையர், கல்லா தவர்.

 

     கற்றார்க்கே, முகத்தில் இருகண்கள்;

        கல்லார்க்கோ, முகத்தில் இருபுண்கள்.

 

  1. உவப்பத் தலைக்கூடி, உள்ளப் பிரிதல்,

     அனைத்தே, புலவர் தொழில்.

 

      மகிழக்கூடி, அறிவைப் பகிர்ந்து,

        மனமகிழப் பிரிவர், புலவர்.

 

  1. உடையார்முன், இல்லார்போல், ஏக்கற்றும் கற்றார்,

     கடையரே, கல்லா தவர்.

 

     ஆசிரியர்முன் ஏக்கத்தோடு கற்றாரே,

        கற்றார்; மற்றயார் கல்லாரே.

 

  1. தொட்(டு)அனைத்(து) ஊறும், மணல்கேணி; மாந்தர்க்குக்,

      கற்(று)அனைத்(து) ஊறும், அறிவு.

 

     தோண்டுஅளவே, ஆற்றுமணல் நீர்தரும்;

        கற்ற அளவே, அறிவும்.

.

  1. யாதானும், நாடுஆம்ஆல், ஊர்ஆம்ஆல், என்ஒருவன்?

     சாம்துணையும், கல்லாத ஆறு.

 

    உலகஉறவு தருகல்வியைச், சாம்வரை

       ஏன்தான் கல்லாத நிலையோ?

 

  1. ஒருமைக்கண், தான்கற்ற கல்வி, ஒருவற்(கு),

      எழுமையும், ஏமாப்(பு) உடைத்து.

 

     ஓர்பிறப்பில் கற்ற கல்வி,

        ஏழு பிறப்புக்களிலும், பாதுகாப்பு.

.

  1. தாம்இன்(பு) உறுவ(து), உல(கு)இன்(பு) உறக்கண்டு,

     காம்உறுவர், கற்(று)அறிந் தார்.

 

     தம்கல்வி இன்பத்தை, உலகமும்

       பெற்றால், கற்றவர் இன்புறுவர்.

 

  1. கே(டு)இல் விழுச்செல்வம், கல்வி; ஒருவர்க்கு,

      மா(டு)அல்ல, மற்ற யவை.

 

    கேடுஇல்லாச் செல்வம், கல்வியே;

       மற்றவை செல்வங்கள் அல்ல.

 

-பேராசிரியர் வெ. அரங்கராசன்

(அதிகாரம் 041. கல்லாமை)