திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 007. மக்கள் பேறு
(அதிகாரம் 006. வாழ்க்கைத் துணை நலம் தொடர்ச்சி)
01. அறத்துப் பால்
02. இல்லற இயல்
அதிகாரம் 007. மக்கள் பேறு
ஒழுக்கமும், நல்அறிவும் நிறைந்த,
மக்களைப் பெறுதல் பெரும்பேறு.
- பெறும்அவற்றுள், யாம்அறிவ(து) இல்லை, அறி(வு)அறிந்த
மக்கள்பே(று), அல்ல பிற.
அறி[வு]அறிந்த மக்கள் பேறே,
பேறுகளுள் எல்லாம் பெரும்பேறு.
- எழுபிறப்பும், தீயவை தீண்டா, பழிபிறங்காப்
பண்(பு)உடை மக்கள் பெறின்.
பழிதராப் பண்புப் பிள்ளைகளால்,
எப்பிறப்பிலும் தீமைகள் தீண்டா.
- தம்பொருள் என்ப,தம் மக்கள்; அவர்பொருள்,
தம்தம் வினையான் வரும்.
தம்பொருள், தம்மக்கள்; அவர்பொருள்,
அவர்தம் செயல்களால் அமையும்.
- அமிழ்தினும், ஆற்ற இனிதே,தம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.
தம்மக்களின் சிறுகை துழாவும்
கூழும் அமிழ்தைவிடவும் இனிது.
- மக்கள்மெய் தீண்டல், உடற்(கு)இன்பம்; மற்(று),அவர்
சொல்கேட்டல், இன்பம் செவிக்கு.
குழந்தை வந்து தொடுதல் உடலுக்கும்,
மழலைச்சொல் காதுக்கும் இன்பம்.
- “குழல்இனி(து); யாழ்இனி(து)” என்ப,தம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
தம்குழந்தையின், மழலை கேளார்க்கே,
குழல்இசை, யாழ்இசை இனிது.
- தந்தை மகற்(கு)ஆற்றும் நன்றி, அவையத்து,
முந்தி இருப்பச் செயல்.
மகனை அவைகளில் முன்நிறுத்துதல்,
தந்தைக்கு உரிய கடமை.
- தம்மின்,தம் மக்கள் அறி(வு)உடைமை, மாநிலத்து,
மன்உயிர்க்(கு) எல்லாம் இனிது.
மக்களைத், தம்மைவிட நல்அறிஞர்
ஆக்கி, உலகிற்குத் தருக. .
- ஈன்ற பொழுதின், பெரி(து)உவக்கும், தன்மகனைச்,
“சான்றோன்” எனக்கேட்ட தாய்.
மகனைச் ”சான்றோன்”எனக் கேட்பவள்,
பெற்ற பொழுதினும் மகிழ்வாள்.
- மகன்,தந்தைக்(கு) ஆற்றும் உதவி, இவன்தந்தை,
“என்நோற்றான் கொல்?”எனும் சொல்.
“இவனது தந்தை தவத்தோன்”எனச்
சொல்வித்தல் நன்மகன் செய்உதவி.
– பேராசிரியர் வெ. அரங்கராசன்
Leave a Reply