திருக்குறள் அறுசொல் உரை – 077. படை மாட்சி : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 076. பொருள் செயல் வகை தொடர்ச்சி)
02. பொருள் பால்
10. படை இயல்
அதிகாரம் 077. படை மாட்சி
நாட்டுப் பாதுகாப்புக்குத் தேவையான
வீரப்படையின் சீரும், சிறப்பும்.
- உறுப்(பு)அமைந்(து), ஊ(று)அஞ்சா வெல்படை, வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை.
பல்உறுப்போடு அஞ்சாத வெல்படையே,
ஆட்சியர்க்குத் தலைமைச் செல்வம்.
- உலை(வு)இடத்(து) ஊ(று)அஞ்சா வன்கண், தொலை(வு)இடத்தும்,
தொல்படைக்(கு) அல்லால் அரிது.
அழிவிலும் அஞ்சாப் பெருவீரம்,
பயிற்சிப் பழம்படைக்கே எளிது.
- ஒலித்தக்கால் என்ஆம் உவரி..? எலிப்பகை,
நாகம் உயிர்ப்பக் கெடும்.
பாம்பு மூச்சுவிட்டால், மாக்கடல்போல்
ஒலிக்கும் எலிக்கூட்டம் என்ஆகும்..?
- அழி(வு)இன்(று), அறைபோகா(து) ஆகி, வழிவந்த
வன்கண் அதுவே படை.
அழியாத, வஞ்சத்துக்கும் ஆள்ஆகாத,
வழிவழி வீரத்தது படை.
- கூற்(று)உடன்று, மேல்வரினும், கூடி எதிர்நிற்கும்
ஆற்றல், அதுவே படை.
எமனே எதிர்த்தாலும், ஒன்றுகூடி
எதிர்க்கும் திறத்தது வெல்படை.
- மற,மானம், மாண்ட வழிச்செலவு, தேற்றம்
என, நான்கே ஏமம் படைக்கு.
வீரம், மானம், பெருமிதநடை,
தெளிவு, படைக்குப் பாதுகாப்பு.
- தார்தாங்கிச் செல்வது தானை, தலைவந்த
போர்தாங்கும் தன்மை அறிந்து.
எதிர்வரும் படையை, போரைத்
தடுத்து முன்செல்வது திறப்படை.
- அடல்தகையும், ஆற்றலும் இல்எனினும், தானை,
படைத்தகையால் பாடு பெறும்.
போர்த்தகுதி, எதிர்ப்புத்திறன் இல்லாத
படையும், தோற்றத்தால் வெல்லும்.
- சிறுமையும், செல்லாத் துனியும், வறுமையும்,
இல்ஆயின் வெல்லும் படை.
சிறுமதியும், வெறுப்பும், வறுமையும்,
இல்ஆயின், வெல்லும் நல்படை.
- நிலைமக்கள் சால உடைத்(து)எனினும், தானை,
தலைமக்கள் இல்வழி இல்.
படைவீரர் இருந்தாலும், படைக்குத்
தலைவர் இல்எனின், படைஇல்லை.
பேராசிரியர் வெ. அரங்கராசன்
Leave a Reply