(திருக்குறள் அறுசொல் உரை: 132. புலவி நுணுக்கம்: தொடர்ச்சி)

திருக்குறள் அறுசொல் உரை

3.காமத்துப் பால்

     15. கற்பு இயல் 

    133.         ஊடல் உவகை 

கூடல் இன்பத்தைக் கூட்டும்

ஊடல் பற்றிய உளமகிழ்ச்சி.

 

(01-04 தலைவி சொல்லியவை)

 

  1. இல்லை தவ(று)அவர்க்(கு) ஆயினும், ஊடுதல்

      வல்லது அவர்அளிக்கும் ஆறு.

தவறுஇல்லை எனினும், இன்பத்தைக்

கூட்டவே, அவரோடு ஊடுவேன்.

 

  1. உடலில் தோன்றும் சிறுதுனி, நல்அளி

      வாடினும், பாடு பெறும்.

ஊடல்தரும் சிறுதுயரம் வாட்டினும்,

கூடல் இன்பத்தைப், பின்கூட்டும்.

 

  1. புலத்தலின், புத்தேள்நாடு உண்டோ….? நிலத்தொடு

      நீர்இயைந்(து) அன்னார் அகத்து.

கலந்த காதலரிடம் ஊடிப்பெறும்

இன்பம், வானுலகில் உண்டோ….?

 

  1. புல்லி விடாஅப் புலவியில் தோன்றும்,என்

      உள்ளம் உடைக்கும் படை.

தழுவாத ஊடலில் என்உறுதியை

உடைக்கும் கருவி தோன்றும்..

 

       (05-10 தலைவன் சொல்லியவை)

 

  1. தவ(று)இலர் ஆயினும், தாம்வீழ்வார் மென்தோள்

      அகறலின், ஆங்(கு)ஒன்(று) உடைத்து.

தவறுஇலள் எனினும், அவளின்

தோளைப் பிரிதலும் இன்பம்தான்.

 

  1. உணலினும், உண்ட(து)அறல் இனிது; காமம்

      புணர்தலின், ஊடல் இனிது.

உண்பதினும் உணவு செரித்தல்,

கூடலினும் ஊடல் இனியன.

 

  1. ஊடலில் தோற்றவர், வென்றார்; அது,மன்னும்

      கூடலில், காணப் படும்.

“ஊடலில் தோற்றவரே வென்றார்”

கூடலில், அவ்வெற்றி வெளிப்படும்.

 

  1. ஊடிப் பெறுகுவம் கொல்லோ….? நுதல்வெயர்ப்பக்,

      கூடலில் தோன்றிய உப்பு.

கூடிப் பெற்ற பேர்இன்பத்தை,

மீண்டும், ஊடிப் பெறுவோமா….?

 

  1. ஊடுக மன்னோ, ஒளிஇழை; யாம்இரப்ப,

      நீடுக மன்னோ இரா.

“ஊடுக, காதலி; நீளுக

          இரவு” என்றுதான் வேண்டுகிறேன்.

 

  1. ஊடுதல், காமத்திற்(கு) இன்பம்; அதற்(கு)இன்பம்,

      கூடி முயங்கப் பெறின்.

ஊடுவது, காதலுக்கு இன்பம்;

கூடுவது, ஊடலுக்கு, இன்பம்.

 

பேரா.வெ. அரங்கராசன் எழுதிய திருக்குறள் அறுசொல் உரை இவ்விதழுடன்  நிறைவடைகிறது. 7 சீர் திருக்குறளுக்கு 6 சொல்லில் உரை வழங்கிய இத் தொடருக்கு உலகளாவிய வரவேற்பு உள்ளது. நூலாக வேண்டுவோர் மணிவாசகர் பதிப்பகத்தைத் (044 25361039)தொடர்பு கொள்ளலாம்.