(அதிகாரம் 008. அன்பு உடைமை  தொடர்ச்சி)

arangarasan_thirukkural_arusolurai_attai

01. அறத்துப் பால் 

02. இல்லற இயல்

அதிகாரம் 009. விருந்து ஓம்பல்

 

       உறுபசியுடன் வருகின்ற எவருக்கும்,

        விருந்து படைத்தலும் உதவுதலும்.

 

  1. இருந்(து)ஓம்பி, இல்வாழ்வ(து) எல்லாம், விருந்(து)ஓம்பி,

     வேள்ஆண்மை செய்தல் பொருட்டு.

 

       இல்வாழ்தல், விருந்தினரைக் காக்கவும்,

       நல்உதவி செய்யவுமே ஆகும்.

 

  1. விருந்து புறத்த(து)ஆத், தான்உண்டல், சாவா

     மருந்(து)எனினும், வேண்டல்பாற்(று) அன்று.

 

       விருந்தாளர் வெளியில்; சாவினை

       நீக்கும் மருந்[து]எனினும் அருந்தாதே.

 

  1. வருவிருந்து, வைகலும், ஓம்புவான் வாழ்க்கை,

     பருவந்து, பாழ்படுதல் இன்று.

 

        நாள்தோறும் விருந்து தருவார்தம்

       வாழ்வு, துன்பப்படாது; பாழ்படாது.

 

  1. அகன்அமர்ந்து, செய்யாள் உறையும், முகன்அமர்ந்து,

   நல்விருந்(து) ஓம்புவான் இல்.

 

       முகம்மலர விருந்து தருவார்

       வீட்டில், திருமகள் தங்குவாள்.

 

  1. வித்தும், இடல்வேண்டும் கொல்லோ….? விருந்(து)ஓம்பி,

   மிச்சில் மிசைவான் புலம்.

 

       விருந்தின்பின் மீதியை உண்பார்,

       விதைநெல்லையும், விருந்துக்கே ஆக்குவார்.

 

 

  1. செல்விருந்(து) ஓம்பி, வருவிருந்து பார்த்(து)இருப்பான்,

    நல்விருந்து, வானத் தவர்க்கு.

 

         செல்வார்க்கும், வருவார்க்கும் விருந்து

       நல்குவார் வானோர்க்கு நல்விருந்து.

 

  1. இனைத்துணைத்(து), என்ப(து)ஒன்(று) இல்லை, விருந்தின்

   துணைத்துணை, வேள்விப் பயன்.

 

         விருந்தின் நல்பயன், விருந்தாளர்தம்

      பெரும்பண்பைப் பொறுத்தே இருக்கும்.

 

  1. “பரிந்(து)ஓம்பிப் பற்(று)அற்றேம்” என்பர், விருந்(து)ஓம்பி,

     வேள்வி தலைப்படா தார்.

 

       விருந்து தந்து மகிழாதார்

       உறவுகளை இழந்து வருந்துவார்.

 

  1. உடைமையுள் இன்மை, விருந்(து)ஓம்பல் ஓம்பா

     மடமை; மடவார்கண் உண்டு.

 

       செல்வத்தில் வறுமை, விருந்துதரா

       மடமை; அறியாரிடமே உண்டு.

 

  1. மோப்பக், குழையும் அனிச்சம்; முகம்திரிந்து

     நோக்கக், குழையும் விருந்து.

 

         முகர அனிச்சப்பூவும், முகம்திரிந்து

           பார்க்க விருந்தும், வாடும்.

 

 – பேராசிரியர் வெ. அரங்கராசன்

(அதிகாரம் 010. இனியவை கூறல்)