(திருக்குறள் அறுசொல் உரை – 96. குடிமை தொடர்ச்சி)

attai_kuralarusolurai97

02. பொருள் பால்

13. குடி இயல்

97. மானம்

வாழ்விலும், தாழ்விலும், தம்மதிப்பை,

மானத்தைத் தாழவிடாது காத்தல்

   

  1. இன்றி யமையாச் சிறப்பின ஆயினும்,

    குன்ற வருப விடல்.

        தேவையானவை என்றாலும், மானம்

        கெடவரின், ஏற்காது கைவிடு.

 

  1. சீரினும், சீர்அல்ல செய்யாரே, சீரொடு

     பேர்ஆண்மை வேண்டு பவர்.

        ஆளுமையை வேண்டுவார், புகழுக்காக

        மானக்கேட்டை என்றும் செய்யார்.

 

  1. பெருக்கத்து வேண்டும், பணிதல்; சிறிய

    சுருக்கத்து வேண்டும் உயர்வு.

 

        வளர்ச்சியிலும், பணிக; வறுமையிலும், 

        மானம் காக்கத் துணிக.

 

  1. தலையின் இழிந்த மயிர்அனையர், மாந்தர்,

    நிலையின் இழிந்தக் கடை.

 

        நிலைதாழ்ந்த மனிதர், உதிர்ந்த 

        தலைமுடிபோல், இழிந்தார் ஆவார்.

 

  1. குன்றின் அனையாரும் குன்றுவர், குன்றுவ

    குன்றி அனைய செயின்.

 

        குன்றிமணி அளவு மானக்கேட்டைக்

        குன்றுபோல்வார் செய்யினும், தாழ்வார்.

 

  1. புகழ்இன்(று)ஆல், புத்தேள்நாட்(டு) உய்யா(து)ஆல், என்மற்(று)

    இகழ்வார் பின்சென்று நிலை….?

 

        புகழும், வான்உலகும் தராது;

        பின்ஏன் இகழ்வார்பின் செல்லல்…..?

 

  1. ஒட்டார்பின் சென்(று)ஒருவன் வாழ்தலின், அந்நிலையே,

    “கெட்டான்” எனப்படுதல் நன்று.

 

ஒட்டாருடன் மானம்கெட்டு ஒட்டுவதினும்,

“செத்தான்” எனப்படல் நன்று.

 

  1. மருந்தோமற்(று) ஊன்ஓம்பும் வாழ்க்கை….? பெரும்தகைமை

    பீ(டு)அழிய வந்த இடத்து.

 

        மானம் கெட்டபின்னும் உயிர்வாழ்தல்,

        மானத்தை, மீட்கும் மருந்தோ…..?

 

  1. மயிர்நீப்பின், வாழாக் கவரிமா அன்னார்,

    உயிர்நீப்பர் மானம் வரின்.

 

        மயிர்நீங்கின், கவரி விலங்கு

        வாழாது; மானக்கேடரும் வாழார்.

 

  1. இளிவரின், வாழாத மானம் உடையார்,

    ஒளிதொழு(து) ஏத்தும் உலகு.

 

        இழிவுவரின், வாழா மானத்தார்

        புகழை, உலகார் போற்றுவார்.

-பேரா.வெ.அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை – 098. பெருமை)