arangarasan_thirukkural_arusolurai_attai

  01. அறத்துப் பால்

001. அதிகாரம்          

 01.  பாயிர இயல்         

 001. இறைமை வழிபாடு

 மக்கள் கடைப்பிடிக்கத் தக்க

இறைமை ஆகிய நிறைபண்புகள்.

 

  1. அகர முதல, எழுத்(து)எல்லாம்; ஆதி

பகவன், முற்றே உலகு.

 

     எழுத்துக்களுக்கு, அகரம் முதல்;

       உலகினுக்கு, இறைவன் முதல்.  

 

  1. கற்றதனால் ஆய பயன்என்கொல்…? வால்அறிவன்

நல்தாள், தொழாஅர் எனின்.

 

தூய அறிவன்வழியைப் பின்பற்றாத

 சீரிய கல்வியால், பயன்என்….?

 

  1. மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார்,

நிலமிசை நீடுவாழ் வார்.

 

மலரைவிட, மெல்லிய இறைவன்

  வழிநடப்பார், நெடிது வாழ்வார்.

 

  1. வேண்டுதல், வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு,

யாண்டும், இடும்பை இல.

 

விருப்பு, வெறுப்பு இல்லான்வழியில்

        நடப்பார்க்குத் துயரங்கள் இல்லை.

 

  1. இருள்சேர் இருவினையும் சேரா, இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

 

   இறைவனின் புகழ்செயல் செய்வாரிடம்,

       இருள்சேர் எவ்வினையும் சேராது.   

 

  1. பொறிவாயில் ஐந்(து)அவித்தான், பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார், நீடுவாழ் வார்.

 

     ஐம்புலஆசை இல்லானின் பொய்இல்லாவழி

   நிற்பார், நெடிது வாழ்வார்.

 

  1. தனக்(கு)உவமை இல்லாதான், தாள்சேர்ந்தார்க்(கு) அல்லால்,

மனக்கவலை மாற்றல் அரிது.

 

இணைஇலா இறைவன்வழி நடப்பார்,

   மனக்கவலை மாறும்; மறையும்.

 

  1. அறஆழி அந்தணன், தாள்சேர்ந்தார்க்(கு) அல்லால்,

பிறஆழி நீந்தல் அரிது.

 

அறக்கடல்ஆம், இறைவன்வழி நடப்பார்க்குப்,

        பிறவித் துயரங்கள் இல்லை.      

 

  1. கோள்இல் பொறிஇல் குணம்இலவே, எண்குணத்தான்

தாளை, வணங்காத் தலை.

 

எண்அரிய குணத்தான்வழி நடவான்,

        ஐம்புலன்களால் எப்பயனும் இல்.

 

  1. பிறவிப் பெரும்கடல் நீந்துவர்: நீந்தார்,

இறைவன் அடிசேரா தார்.

 

இறைவன்வழி நடப்பார், பிறவிக்கடல்

          கடப்பார்; நடவார், கடவார்.

 – திருக்குறள் தேனீ பேராசிரியர் வெ. அரங்கராசன்

–  உரை தொடரும்