திருக்குறள் வாழ்க்கை நூல் – அறிஞர் முகம்மது சுல்தான் கலை.மு.,சட்.இ.,
வாழ்வின் பயனை மக்கள் அடைவதற்கு வழிகாட்டிகளாக உலகின் பல்வேறு மொழிகளில் பல நூல்கள் உள. அவைகளுள் மூன்று நூல்கள், அவைகளை இயற்றியவர்களின் அறிவுத்திறத்தையும் ஆராய்ச்சி நுணுக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை. தாங்கள் எழுதியிருப்பவைகள் எல்லாம் வல்ல கடவுளின் நாதம் அல்லது தொனி அல்லது வெளிப்பாடு என்று இந்த மூன்று நூல்களின் ஆசிரியர்கள் சொல்லவில்லை. தங்களுக்குத் தெய்வ தூதர்களால் அருளப்பட்ட திருவாக்கு என்றும், அவ்வாசிரியர்கள் விளம்பரம் செய்யவில்லை. அம்மூன்று நூல்களும் இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன் உலக மக்களுக்கு அளிக்கப்பட்டவை.
அவை; 1. கௌதம புத்தருடைய நல்லுரை (உபதேசங்) களான திரிபீடங்கள்; பாலிமொழியில் இயன்றவை. 2. புத்தருடைய காலத்துக்கு ஏறக்குறைய ஒத்த காலத்தில் சீனாவில் வாழ்ந்த கன்பூசியஸின் ‘‘அனலெக்ட்ஸ்’’ என்னும் அறிவுரைகள் இந்நூல் சீன மொழியில் ஆக்கப்பட்டது. 3. மேற்கூறிய அறிஞர்களுக்குச் சுமார் 400 ஆண்டுகளுக்குப்பின் தமிழகத்தில் வாழ்ந்த திருவள்ளுவரின் திருக்குறள்.
திருக்குறள் தமிழ் மொழியில் ஆக்கப்பட்டிருந்தாலும் மக்கள் குலம் முழுவதற்கும் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமைந்துள்ள நூல். தம் பரந்த அநுபவத்தையும், ஆழ்ந்த ஆராய்ச்சியையும், நுணுக்கமான கருத்துணர்ச்சியையும், திருவள்ளுவர் திருக்குறளாய் இயற்றியுள்ளார். இந்நூலில் வையத்து மக்களெல்லாம் வாழ்வாங்கு வாழ்வதற்கு வள்ளுவர் வழி வகுத்துள்ளார். மக்கள் குலம் ஒன்றே என்ற அடிப்படைக் கருத்தை உள்ளத்திற் கொண்டு திருவள்ளுவர் தம் கருத்துக்களை மக்களுக்கு விளக்குகிறார். சாதி, மதம், குலம் கோத்திரம், நிறம் முதலிய வேற்றுமைகளில் தன் அரிய காலத்தை வீணாக்காது, மனிதன் மனிதன் என்ற முறையில் எப்படி வாழ வேண்டும் என்னும் பொருளையே பல கோணங்களில் திருவள்ளுவர் தம் திருக்குறளில் விளக்குகிறார்.
சில அறநூல்கள், அவை தோன்றுவதற்கு முன் ஒரு பொற்காலம் இருந்ததாகவும் மக்கள் எவ்விதக் குற்றமற்ற நிறை வாழ்வு வாழ்ந்தார்களென்றும், அக்கால மக்களிடை புதுப்பிப்பதே தங்கள் குறிக்கோள் என்றும் கூறுகின்றன. திருவள்ளுவர் அப்படிப்பட்ட பொற்காலத்தையோ கற்காலத்தையோ கற்பிக்கவில்லை. அவர் காலத்தில் வாழ்ந்த மக்களிடையே நிலவி வந்த பழக்க வழக்கங்களையும், குணநலங்களையும், சீர்கேடுகளையும், திருவள்ளுவர் நன்கு ஆராய்கிறார். மக்களினத்திற்குத் தீமை செய்வனவாகவும், இயற்கைக்கு மாறுபாடானவையாகவும், மக்கட்குலத்தின் ஒருமைக்கு ஊறு செய்வனவாகவும் தனக்குத் தோன்றுகின்ற செயல்களை அவர் கடிந்துரைக்கிறார். திருவள்ளுவரின் கல்லுரைகளான முத்துக்கள், ‘எல்லோரும் ஓர் குலம்’ என்னும் சூத்திரத்தினை மணி ஆரமாகக் கோவை செய்யப்பட்டிருக்கின்றன.
வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் மக்களிடையே எத்தனையோ குறைகள் இருந்து வந்தன. கொலை, களவு, காமம், குடி, சூது முதலியன நிகழ்ந்து கொண்டுதான் இருந்தன. கேடு சூழ்ந்த உலகைக்கண்டு வள்ளுவர் வெறுப்படைந்து ‘வீழ்ந்துபோ, ஒழிந்து போ’’ என்று சினந்துரைக்கவில்லை. ஆனால் அக்கேடுகளின்றும் மக்கள் தங்கள் பண்பாட்டினால் விடுதலை பெற வேண்டும் என்பதைத் தன் கருத்திற்கேற்ப, வள்ளுவர், கேட்பார் நெஞ்சத்தை அள்ளும் வண்ணம் இயம்புகிறார்.
திருவள்ளுவரின் கருத்தில் கவர்ச்சியும் கனிவும் மிளிர்கின்றன. அதற்குக் காரணம் அவர் சொல்லாற்றல் மட்டும் அன்று, அவருடைய ஆழ்ந்த மக்களின் பற்று தான் சிறந்த காரணம் என்று சொல்லலாம். தன் கொள்கைகளை ஏற்று நடப்போர், வருங்காலத்தில் துறக்க இன்பத்தை அடைவார்களென்றோ, மீறுகிறவர்கள் நரகத்தில் உழலுவார்களென்றோ பசப்பும் பாவமும் திருவள்ளுவர் வாக்கில் பிறக்கவில்லை. எப்படித்தன் அறிவின் திறத்தால் அநேக முடிவுகளை வள்ளுவர் கண்டாரோ அவ்வண்ணமே தன் கருத்தைக் கேட்பவர்களும் தங்கள் அறிவின் திறத்தால் அக்கருத்துக்களை ஆராய வேண்டுமென்று அவர் வற்புறுத்துகிறார்.
‘‘எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்ப தறிவு.
என்ற குறட்பா இங்கு நோக்கத்தக்கது.
மனித குலம் என்பது பலப்பல தனி மனிதர்களின் தொகுப்பு. மக்கள் வாழ்வு முன்னேற வேண்டுமானால் தனிமனிதன் ஒவ்வொருவனின் வாழ்வும் பண்பாடு அடைய வேண்டும். தனக்கும் இனத்திற்கும் நன்மை செய்யும் கருவியாகத் தன்னை அமைத்துக் கொள்ள வேண்டிய உள்ளப்பாங்கையும் அறிவாற்றலையும் ஆண்டவன் மனிதனுக்கு அளித்திருக்கிறான் மன்பதை அமைப்பில் புதிய மாறுதல் ஏற்பட வேண்டுமானால் ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சீர்திருத்தி செப்பனிட்டுக் கொள்ள வேண்டும். மனிதன் மன்பதையின் ஓர் உறுப்பு; ஒவ்வொரு உறுப்பும் ஆக்க வேலை செய்தால் தான் முழுமையாகிய மன்பதை முன்னேற முடியும். இந்தக் கருத்தை வலியுறுத்தி ஒவ்வொரு மனிதனும் தனக்கென வாழாப் பிறர்க்குரியாளனாக’ வாழ வேண்டும் என எண்ணும் கருத்து, திருக்குறளில் பல இடங்களில் சங்கொலியென ஒலிக்கிறது.
திருக்குறளின் 1330 பாக்களின் கருத்து தொகுப்பை ஏதேனும் ஒரு குறளால் விளக்கி விவரித்து விடலாம் என்றால் அது இயலாச் செயலாம். ஆனால் திருக்குறளைப் படிப்போர் ஒவ்வொருவருக்கும் அவரவர் உளப்பாங்கின்படி சில குறட்பாக்கள் பசுமரத்தாணிபோல் உள்ளத்தில் பதிந்து விடுகின்றன. அவ்வாறு என் உள்ளத்தில் பதிந்து என் உள்ளத்தில் அழியாமற் பொறிக்கப்பட்டுள்ள குறள்பாக்களுள் கீழேவரும் இரண்டு பாக்கள் குறிப்பிடத்தக்கன.
‘‘நல்லாறு உள்ளும் கொள்ளல் தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று’’.
‘‘இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்’’
என்றாலும் திருவள்ளுவரின் பல்வேறு கருத்துக்களின் திரண்ட முடிவை.
‘‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.’’
என்ற குறள் மணி சுடர் விட்டு விளக்கிற தென்று சொல்லாம். இந்தக் குறள்மணி, நந்தாவிளக்காக, உலக மக்கள் அனைவருக்கும் அறிவு ஒளி வீசி வருவதாக!
வாழ்க திருக்குறள்.
வாழ்க மனித குலம்.
நன்றி : குறள்நெறி
Leave a Reply